29 Jun 2020

மட்டக்களப்பில் நிர்மாண தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைக்கப்படவுள்ளது.

SHARE
மட்டக்களப்பில் நிர்மாண தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படும் நிர்மாணங்களின் மூலப் பொருட்களான கல், மண், சீமெந்து, கொங்ரீட் போன்றவற்றின் தரம் மற்றும் விவசாய நிலம் உட்பட ஏனைய நிலங்களின் மணலினையும் ஆய்வு செய்து அறிக்கையிடும் நிர்மாண தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடத்திற்கான புதிய கட்டிடம் நாளை (30) திறந்து வைக்கப்படவுள்ளது. 

இந்நிகழ்வில் கமநல அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் நாயகம் டபில்யூ.எம்.எம்.பீ.வீரசேகர, மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும், அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு இவ்வாய்வுகூட கட்டிடத்தினைத் திறந்து வைக்கவுள்ளனர்.

கமநல அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் கே. ஜெகநாத் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் ஏ.எச்.எம்.எல். அபேரத்ன, நீர் முகாமைத்துவப் பொறியியலாளர் டீ.டீ. பிரபாத்விதாரண, காலநிலைக்கு சீரமைவான நீர்பாசன விவசாயத்திட்ட, திட்டப்பணிப்பாளர் என். சிவலிங்கம், மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ. வாசுதேவன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.

இத்திட்டத்திற்காக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் சுமார் 3.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் இப் புதிய ஆய்வுகூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனூடாக விவசாய நிலங்களினுடைய மண் பரிசோதனை, மற்றும் ஏனைய மண், கல் தரப்பரிசோதனை, கொங்கரீட் மற்றும் சீமெந்து தரப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் விசேடமாக விவசாய நிலங்களினது மண்ணின் தரத்தினை பரிசோதனை செய்து அந்நிலத்துக்குப் பொருத்தமாக பயிர்வகையினை செய்கை செய்வதற்குமான ஆலோசனை வழிகாட்டல்களும் இதனூடாகப் பெற்றுக் கொள்ளமுடியும். இது இப்பிராந்திய விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இலங்கையில் அமைந்துள்ள கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடங்களில் மொனராகல, வவுனியா ஆகிய பிரதேசங்களுக்கு மேலதிகமாக கிழக்குப் பிராந்தியத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களுக்காக இவ்வாய்வுகூடம் மட்டக்களப்பில் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 



SHARE

Author: verified_user

0 Comments: