23 Jun 2020

அப்துர் றஊப் மௌலவி தரப்பின் பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு காத்தான்குடி சம்மேளனம் தனது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறது!

SHARE
அப்துர் றஊப் மௌலவி தரப்பின் பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு காத்தான்குடி சம்மேளனம் தனது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறது!
காத்தான்குடியிலுள்ள அப்துல் றவூப் மௌலவி தரப்பினர் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகக் கூறியும் அதனைக் கண்டித்தும் காத்தான்குடி சம்மேளனம் செவ்வாய்க்கிழமை 23.06.2020 கூடி அறிக்கையொன்றை வெளியிட்டது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

எமது சம்மேளனமானது சுமார் 72 பள்ளிவாயல்களையும் 140க்கு மேற்பட்ட சமூக நிறுவனங்களையும் உள்ளடக்கிய தாய் நிறுவனமாகும். காத்தான்குடி மற்றும் அதனைச் சூழவுள்ள முஸ்லிம் கிராமங்களான மஞ்சந்தொடுவாய், பூநொச்சிமுனை, கோட்டைமுனை, பாலமுனை, காங்கேயனோடை, ஒல்லிக்குளம், சிகரம், கீச்சாம்பள்ளம், மண்முனை போன்ற கிராமங்களை உள்ளடக்கிய அனைத்து மக்களது கல்வி சமூக சமய கலாசார பண்பாட்டு மற்றும் பொருளாதார விடயங்களை பாதுகாப்பதற்காகவும் வளர்ப்பதற்காகவும் மற்றும் சகோதர இனத்தவர்களான தமிழ் சிங்கள கிறிஸ்தவ மதத்தலைவர்களை கௌரவப்படுத்தி அவர்களின் அபிலாசை, மதச்சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் என்பனவற்றுக்கு மதிப்பளித்து ஒற்றுமையுடனும் சகோதர வாஞ்சையுடனும் அனைத்து சமூகங்களுடனும் இணைந்து சுபீட்சமாக வாழ்வதற்கு வழிவகுத்துபாடுபட்டு வரும் ஒரு சமூக நிறுவனமாகும்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கடந்த 17.06.2020ஆம் திகதி காத்தான்குடியைச் சேர்ந்த அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் ட்ரஸ்ட் அமைப்பிலிருந்து சாட்சியமளித்த காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தரும் அவ்வமைப்பின் பிரதிநிதியுமான முஹம்மட் ஸஹ்லான் றப்பானி, முஹம்மட் சிமாக் சின்ன லெப்பை ஆகிய இருவரும் காத்தான்குடி சம்பந்தமாக உண்மைக்குப் புறம்பான அடிப்படை ஆதாரமற்ற பிழையான தகவல்களை வழங்கியமைக்காக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தனது வன்மையான கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துக்கொள்கின்றது.

இவ்வூரைப்பற்றியும் இவ்வூர் மக்களைப்பற்றியும் அவர்களது மார்க்க ரீதியான செயற்பாடுகள் பற்றியும் மிகத் தெளிவான விளக்கங்களைக் கொண்டிருக்கும் மேற்கூறிய இருவரும் காத்தான்குடியில் சுமார் 10 தொடக்கம் 15க்குட்பட்ட வஹாபிசத்தைப் போதிக்கின்ற பள்ளிவாயல்கள் இருப்பதாகவும், வஹாப்பிசத்தை பின்பற்றுகின்ற சுமார் 15,000 மக்கள் இருப்பதாகவும் அவர்கள்  தெரிவித்துள்ளனர். போலியான சூபிச முகாமுக்குள் மறைந்து கொண்டு இவ்வாறான பிழையான  தகவல்களை ஆணைக்குழு முன் சமர்ப்பித்து ஆணைக்குழுவினை பிழையாக வழிநடாத்த முற்பட்டிருக்கிறார்கள். 

இவ்வாறு உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஆணைக்குழுவின் முன் சமர்ப்பித்து காத்தான்குடி வாழ் சமூகத்தினை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஒரு பயங்கரவாத சமூகமாக சித்தரிக்க முயலும் இவ்வாறான செயற்பாட்டினை வன்மையாக கண்டிக்கின்றோம். இதன் உண்மைத்தன்மை தொடர்பிலும் இது தொடர்பான மேலதிக விளங்கங்களையும் இவ்வூர் சார்பாக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நாம் சாட்சியமளித்து தெரிவிக்க இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

உண்மையில் சுதந்திரத்திற்கு முன்னைய காலந்தொட்டே இலங்கை முஸ்லிம்களின் தேசப்பற்றும், நாட்டின்மீதான விசுவாசமும் வரலாறு நெடுகிலும் பதியப்பட்டுள்ளதுடன், தாய்நாட்டின் மீதான அவர்களது பற்றுறுதியும் - தேசத்தின்; வளர்ச்சியிலும் - முன்னேற்றத்திலும் அவர்கள் வகித்த பங்குகளும் வரலாற்றுப் பக்கங்களில் எவரும் மறுதலிக்கவியலாத வகையில் காணப்படுகின்றன.

அதேவேளை, பொதுவாகவே இலங்கை முஸ்லிம்களின் மார்க்கரீதியான விடயங்களை எப்பொழுதும் இஸ்லாமிய புத்திஜீவிகளான உலமாக்களே ஒரு கட்டமைப்பின்கீழும் கட்டுக்கோப்பின்கீழும் வழிநடாத்தி வந்துள்ளனர். குறிப்பாக 1924 களில் தோற்றம்பெற்ற அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அதிகப் பெரும்பான்மையான முஸ்லிம்களின்; மார்க்கரீதியான விடயங்களை பொது நீரோட்டத்தில் பேணி ஒரு கட்டுக்கோப்பான நிலையில் மிக அண்மைக்காலம் வரை அவர்களை வழிநடாத்தி வந்துள்ளது தௌ;ளத்தெளிவாகும்.

இந்த முன்மாதிரியை அடியொட்டி காத்தான்குடியில் 1972 முதல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கிளை தோற்றம் பெற்று பொது நீரோட்டத்தில் உள்ள முஸ்லிம்களை வழிப்படுத்தி வந்துள்ளதுடன், 1985 முதல் காத்தான்குடி பள்ளிவாயல்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் உருவாக்கப்பட்டு காத்தான்குடியில் காணப்படுகின்ற ஜும்ஆப் பள்ளிவாயல்கள், பள்ளிவாயல்கள் மற்றும் பொதுநிறுவனங்கள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொணர்ந்து ஆக்கபூர்வமான வியத்தகு பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

எனினும், 1978 காலப்பகுதியில் தோற்றம் பெற்ற இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணான வேற்றுமத சித்தாந்தங்களை இரவலாகப்பெற்று புதுமையானதும், குழப்பகரமானதுமான கோட்பாடுகளை தீவிரமான பாணியில் பரப்பத் தொடங்கிய அப்துர் றஊப் மௌலவியின் குழு அன்று முதல் இன்றுவரை இந்த ஊரின் கட்டுக்கோப்புக்கும், ஒற்றுமைக்கும், ஒருமித்த செயற்பாடுகளுக்கும் எதிராகச் செயற்பட்டு வருவதுடன், மிலேச்சத்தனமான பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட ஸஹ்ரானினது குழுவும் இந்த அப்துர்ரஊப் மௌலவியினது குழுவுமே இப்பிரதேசத்தில் வன்முறைகளில் ஈடுபட்டு ஏனைய மக்களின் சமாதானமான வாழ்வினை குழப்பிவந்துள்ளனர். எதிர்வினையாளர்களை உருவாக்கும் பணியில் இந்த குழு ஈடுபட்டு நமது ஊரின் கண்ணியத்துக்கும் காலாகாலமாகப் பேணப்பட்டு வருகின்ற நற்பெயருக்கும் களங்கம் கற்பித்துவருகின்றமை விசனத்திற்குரியதாகும்.

அதிலும் குறிப்பாக, 2019 ஏப்ரல் மாதம் நமதூரை மையப்படுத்திச் செயற்பட்டுவந்த இஸ்லாமியப் போதனைகளை பிழையாக விளங்கி இளைஞர்களைத் தவறாக வழிநடாத்திய ஒரு கும்பல் மேற்கொண்ட மனிதத்துக்கு எதிரான மிலேச்சத்தனமான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலின் பின்னர் இந்த அப்துர் றஊப் மௌலவியின் குழு நமதூர் சம்மந்தமாக தொடராக திரிவுபடுத்தப்பட்ட மற்றும் பிழையான மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்கிவருவதுடன் இந்த ஊரின் பிரதான வழிநடாத்துனர்களான சம்மேளனம், ஜம்இய்யதுல் உலமா என்பவற்றை சங்கடத்துக்கு உட்படுத்தி வருவதுடன் இந்த ஊரின் கல்வி, சமய, சமூக, கலாசார மற்றும் நலன்புரிசார் மனிதாபிமானப் பணிகளில் நீண்டகாலமாக காலூன்றி செயலாற்றி வருகின்ற அமைப்புக்களின் மீதும் காழ்ப்புணர்வு கொண்டு அவதூறுகளைப் பரப்பி வருகின்றமை கவலைக்குரியதாகும்.

இதன் தொடரில்தான், குறித்த அப்துர் றஊப் மௌலவியின் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் கடந்த 2019 ஏப்ரல் மாதத் தாக்குதல் தொடர்பாக முன்னைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிலும், தற்போதைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் கடந்த 17.06.2020 தோன்றி உண்மைக்குப் புறம்பான, காழ்ப்புணர்வு மற்றும் வஞ்சக அடிப்படையிலான தகவல்களை முன்வைத்து மீளவும் விசாரணையாளர்களைப் பிழையாக வழிநடாத்தும் இழிவான செயலை மேற்கொண்டுள்ளமை ஊடகங்களினூடாக அறியக்கிடைக்கின்றது.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் இந்த தவறான வழிநடாத்தல் தகவல்களை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன், இதற்கு எதிரான சட்டரீதியான மற்றும் தெளிவுபடுத்தல் அடிப்படையிலான முன்னெடுப்புக்களை முடுக்கிவிட்டுள்ளது என்பதையும் தெரியப்படுத்துகின்றோம்.

உண்மையில் 1978 முதல் குறித்த அப்துர் றஊப் மௌலவியின் குழு பிரதானமாக இந்த ஊரின் ஒற்றுமைக்கு உலைவைத்து வருகின்றது என்பதை உறுதியாக கூறுவதுடன் குறித்த தரப்புக்களுக்கு போதுமான ஆதாரங்களுடன் முன்வைக்கப்படும் என்பதை வலியுறுத்திக் கூறுவதுடன், மௌலவியின் தரப்பு இத்தகு உண்மைக்குப் புறம்பான திரிவுபடுத்தப்பட்ட தகவல்களை இதன்பின்னும் வழங்குவது தவிர்க்கப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம். 
 

SHARE

Author: verified_user

0 Comments: