மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தின் வைரவிழாவில் சுகாதாரத்துறையினர் கௌரவிப்பு.மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தின் 60 ஆண்டு நிறைவு வைரவிழா அண்மையில் மட்டக்களப்பு ரோட்டரி நிலையத்தில் ரோட்டரிக் கழகத்தின் நடப்பாண்டு தலைவர் வைத்திய கலாநிதி கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திருமதி. கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
1960ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கழகமானது பல்வேறுபட்ட சமூக சேவைகளை ஆற்றிவருகின்றது. இதன் ஓர் அங்கமான கொவிட்-19 கொரோனா தொற்று காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்நோய் பரவாமலிருக்க சிறப்பாக செயற்பட்ட சுகாதாரத் துறையினரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும், தொழில் நிலையில் அதிசிறப்பினை வெளிப்படுத்தியவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இருதய சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி க. அருள்நிதி, கொவிட் 19 வைரசினைக் கண்டுபிடிக்கும் பீ.சீ.ஆர் பரிசோதனைகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடாத்தும் நுண்ணுயிரியல் நிபுணர் திருமதி. வைதேகி ரஜீபன் பிரான்சிஸ் உட்பட வைத்திய ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள், கொரோனா தனிமைப் படுத்தல் உட்பட மாதிரிகள் சேகரிப்பு நடவடிக்கைகளில் அதிக பங்களிப்பு வழங்கிய பிராந்திய தொற்று நோயியலாளர் டாக்டர் வே. குணராஜசேகரம் ஆகியோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ரோட்டரி கழகத்தின் கடந்த ஆண்டு தலைவர் வீ. பார்த்திபன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்வில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், வைத்தியர்கள், ரோட்ரி கழகத்தின் அங்கத்தவர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
0 Comments:
Post a Comment