29 May 2020

அனைத்தும் மீளத் துவங்கியுள்ள சூழ்நிலையில் ஆன்மீக இறைவழிபாடுகளில் ஈடுபட அனுமதியுங்கள் ஜனாதிபதியிடம் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வேண்டுகோள்

SHARE

அனைத்தும் மீளத் துவங்கியுள்ள சூழ்நிலையில் ஆன்மீக இறைவழிபாடுகளில் ஈடுபட அனுமதியுங்கள் - ஜனாதிபதியிடம் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வேண்டுகோள்.
அனைத்தும் மீளத் துவங்கியுள்ள தற்போதைய  சூழ்நிலையில் நாட்டு மக்களை ஆன்மீக இறைவழிபாடுகளிலும் ஈடுபட அனுமதியுங்கள் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டிலுள்ள வணக்க வழிபாட்டிடங்களைத் திறக்க அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்து ஜனாதிபதிக்கு முன்னாள் முதலமைச்சர் அவசரக் கடிதமொன்றினை வியாழக்கிழமை 28.05.2020 அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொரோனா வைரஸ் தாக்கத்தினிடையே பொருளாதார வளர்ச்சியின்பால் மக்களை மீட்டெடுக்கும் முயற்சியாக பல தரப்பட்ட் சேவைகளும் பொருளாதாரத் துறைகளும் சுகாதாரப் பிரிவினரின் வழிகாட்டுதல் கடப்பாடுகளைக் கடைப்பிடித்த வண்ணம் இயங்குவதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது

அதனடிப்படையில் அரச தனியார் துறைகளும் பொதுப்போக்குவரத்தும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இயங்கத் துவங்கியுள்ளன.

நிறுவன ஸ்தாபன மட்டத்திலும் உல்லாச விருந்தினர் விடுதிகள், உணவகங்கள், அழகுக் கலை நிலையங்கள், மேலும் மதுபானக் கடைகள் கூட திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பொழுது திருமண நிகழ்வுகளும் ஆகக் கூடியது 100 விருந்தினர்களுடன் இடம்பெறுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இவை யாவும் வரவேற்கத்தக்க முன்னெடுப்புக்களாக இருந்தாலும் வழிபாடுகளில் ஈடுபட முடியாதவாறு அனைத்து மத வழிபாட்டிடங்களும் அனுமதியளிக்கப்படாமல் தொடர்ச்சியாக மூடப்பட்டே இருப்பது துக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதனால் சன்மார்க்கக் கடமைகள், மத நிகழ்வுகள், சமயச் சடங்குகள் என்பனவற்றை அனுஷ்டிக்க முடியாமல் நொந்து போக வேண்டியுள்ளது.

நான் இஸ்லாமிய விழுமியங்களைப் பேணி அர்ப்பணிப்போடு நடந்து கொள்ளும் ஒரு முஸ்லிம் என்ற அடிப்படையில் இந்த கண்ணுக்குத் தெரியாத நெருக்கடியான கொரோனா வைரஸ் தொற்று ஒரு சாபமாக சூழ்;ந்துள்ள இந்தத் தருணத்தில் மார்க்கக் கடமைகளைச் செய்து பாவமன்னிப்பின் மூலம் இறையருளைப் பெற்றுக் கொள்வதனூடாகவே இந்த நெருக்கடியிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பாக மீட்டெடுக்க முடியும் என நம்புகின்றேன்.

அதற்கு மத மதவழிபாட்டிடங்கள் இறை பிரார்த்தனைகளுக்காகத் திறந்து விடப்பட வேண்டும். அவ்வாறு இறை வழிபாட்டிடங்களில் பிரார்த்தனைகள் இடம்பெறுகின்றபொழுது மக்கள் தாங்கள் நீண்ட காலமாக முடங்கலுக்கு உள்ளாகியிருந்தமையால் ஏற்பட்ட உளத் தாக்கத்திற்கும் குணப்படுத்தலை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

ஆகையினால் சுகாதார வழி முறைகளைக் கவனமாகக் கையாளும் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளும் நிபந்தனைகளுடன் இறை வழிபாட்டிடங்களை மீளத் திறக்குமாறு நான் நாட்டுத் தலைவராகிய உங்களிடம் பணிவான வேண்டுகோளை முன்வைக்கின்றேன்.

இந்த சுகாதார வழிமுறைகளைப் கண்டிப்பாகப் பின்பற்றி இறை வழிபாட்டிடங்களுக்குள் மக்களள பிரார்த்தனையில் ஈடுபடும் உத்தரவாதத்தை வழிபாட்டிடங்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள், நிருவாகிகள் தர முடியும்.

இறைவழிபாட்டிடங்களைப் பிரார்த்தனைகளுக்காகத் திறந்து விடும் கைங்கர்யம் எல்லா சமயத்தவர்களுக்குமான ஒரு சமயோசித நடவடிக்கையாக இருப்பதோடு அது மகிழ்வுடன் வரவேற்கத்தக்கதாகவும் அமைந்து விடும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருள் உங்கள் மீது உரித்தாகட்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: