31 May 2020

கட்டுரை : படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16 ஆண்டு நினைவு தினம் இன்று.

SHARE
கட்டுரை : படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16 ஆண்டு நினைவு தினம் இன்று. 

(சக்தி) 

நாட்டின் ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாகக் காணப்படுவது ஊடகத்துறையாகும். இந்த ஊடகத்துறைக்கு கால்கோளாய் அமைவது ஊடகவியலாளர்களாகும். இவ்வாறான ஊடகவியலாளர்கள் சமூகத்தின் மத்தியில் மதிக்கப்படல் வேண்டும், போற்றப்படல் வேண்டும். என்பதற்கு அப்பால் ஊடகவியாலாளர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படல் வேணடும் என்பதையே அனைத்து ஊடகத்துறை சார்ந்தவர்களும், ஊடகங்களை நேசிப்பவர்களும் தெரிவிக்கின்றனார்.
எனினும் இலங்கையில் பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டும், காணாமலாக்கப்;பட்டும் உள்ளார்கள் அந்த வகையில் சிரோஸ்ட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (31.05.2020) 16 வருடங்கள் ஆகின்றன.

ஐயாத்துரை நடேசன் இலங்கையின் முன்னோடி தமிழ் ஊடகவியலாளர் ஆவார். இவர் 2004 மே 31 அன்று தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில்  அவரது அலுவலகத்துக்குச்; சென்று கொண்டிருந்தபோது மட்டக்களப்பு நகரில் வைத்து ஆயுதம் தாங்கியவர் ஒருவரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். 

யாழ்ப்பாணம் நெல்லியடியைச் சேர்ந்த இவர் நெல்லை நடேசன் என்ற பெயரில் கட்டுரைகளையும் செய்திகளையும், எழுதிவந்தார். 1991ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் வீரகேசரி, சக்தி ரி.வி மற்றும் ஐ.பி.சி. நிறுவனத்துக்கான இலங்கை நிருபராகவும் பணியாற்றி வந்தார். இவர், ஆசிரியராகவும் வடக்கு, கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டபோது மாகாண சபையின் தகவல் உதவிப் பணிப்பாளராகவும் பணியாற்றியிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்படும் போது அவருக்கு அகவை 50 ஆகும்.

1990ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாண சபையை விட்டு அப்போதைய முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தலைமையிலானவர்கள் இந்தியாவுக்குச்; சென்றபோது, ஜி.நடேசன் அவர்களுடன் செல்லாது மட்டக்களப்புக்கு வந்திருந்தார்.

இதனை அடுத்து ஊடகப்பணியில் தன்னை இணைத்துக் கொண்ட ஜி.நடேசனின் கொலை தொடர்பான விசாரணைகள் முழுமையாக நிறைவுபடுத்தப்படவில்லை.

அக்காலத்தில் பல அச்சுறுத்தலையும் மீறி, தனது ஊடகப் பணியை முன்னெடுத்த நடேசன், பலி கொள்ளச் செய்த முதலாவது மூத்த ஊடகவியலாளர் ஆவார்.

இவருக்கு முன்னரும் பின்னருமாக இலங்கையில் பல ஊடகவியலாளர் பலர் பலிகொள்ளப்பட்டுள்ளனர். மேலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்னர்.

யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து வளர்ந்த ஜி.நடேசன் மட்டக்களப்பில் பல ஆண்டுகள் வாழ்ந்ததுடன், தமிழ் மக்கள் மீது அதீத பற்றுக் கொண்டவராகக் காணப்பட்டார். 

நீண்ட காலம் ஊடகப் பணி செய்து அனுபவம் பெற்றிருந்த இவர், ஊடகத்துறையில் முழு நேரமாகப் பணியாற்றாது விட்டாலும், ஒரு முழுநேர ஊடகவியலாளன் ஆற்றும் பணிக்கு ஈடாக, அல்லது அதற்கு மேலாகவும் தனது ஊடப்பணியை செவ்வனே ஆற்றி வந்தவர்.

இவரது பணிக்கு சாகித்திய விருது, சிறந்த ஊடகவியலாளர் விருது (2000), ஆளுநர் விருது போன்ற பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டமை, அவரது ஊடகப் பணிக்கு கிடைத்த சான்றுகளாகும். இவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர்கூட தனது தலைசிறந்த ஊடகப்பணிக்காக மதிப்பளிக்கப்பட்டவர்.
20 வருடங்களுக்கு மேலாக கொழும்பு வீரகேசரி பத்திரிகையின் செய்தியாளராகவும், “நெல்லை நடேசன்” என்ற பெயரில் பத்தி எழுத்தாளராகவும் இருந்த இவர், 1997ஆம் ஆண்டு முதல் லண்டனை தளமாகக் கொண்டியங்கும், ஐ.பி.சி வானொலி, மற்றும் இலங்கையில், சக்தி தொலைக்காட்சி உட்பட ஏனைய பல ஊடகங்களுக்கு தனது இறுதி மூச்சுவரைஊடகப் பணியாற்றி வந்தார்.

மட்டக்களப்பு மக்கள் மாத்திரமின்றி, பாதிப்புக்களை எதிர் கொண்ட அனைத்து பிரதேச தமிழ் மக்கள் பற்றிய விபரங்களை விரல் நுனியில் வைத்திருந்த இவர், அவ்வவ் பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும் நினைவுகூரப்பட வேண்டும் என்பதிலும், அவர்கள் பட்ட வேதனைகளும் சரித்திரமாக்கப்படல் வேண்டும் அதுபற்றிய  விபரங்களை ஏனையவர்கள், குறிப்பாக இளையோர் அறிந்திருக்க வேண்டும் என்பதிலும் கரிசனை கொண்டிருந்தவர்.

எதனையும் நேருக்கு நேர் பேசும் இவரது நடைமுறை காரணமாக, உண்மையை அல்லது மக்களிற்கு பாதகமான விடயங்களைக் கடியும் இவரது குணாம்சம் காரணமாக, பல தடவைகள் பல்வேறு எதிர்புகளையும், இன்னல்களையும் எதிர்கொண்டவர்.

பல தடவைகள் நேரடியாகவும், தொலைபேசி ஊடகவும் கொலை மிரட்டல், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த போதிலும், அவரது வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் (2000ஆம் ஆண்டு) இடம்பெற்ற போதிலும்கூட, அஞ்சாது தனது குடும்பத்துடன் இறுதிவரை மட்டு மண்ணில் இருந்து மக்களிற்காகக் குரல்கொடுத்த ஒரு சிறந்த ஊடகனானக் காணப்பட்டு வந்தார்.

பல இக்கட்டான காலங்களில்கூட இவர் போன்ற ஊடகவிலாளர்கள், (தற்பொழுது நாட்டில் வாழ முடியாது புலம்பெயர்ந்துள்ளவர்கள் உட்பட) மக்களிற்காகவும், அவர்களில் நல்வாழ்விற்காகவும், உரிமைகளுக்காவும் ஆற்றிய, ஆற்றிக்கொண்டிருக்கும் பணிகளை யாரும் மறந்துவிட முடியாது.
இவரது படுகொலை தொடர்பாக, நேரடியான சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு, கொலையாளிகள் இனங்காட்டப்பட்ட நிலையிலும் இதுவரையில் எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டதாகத் தென்படவில்லை.

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஜி.நடேசன், மாமனிதர் சிவராம், மயில்வாகன் நிமலராஜன், லசந்த விக்கிரதுங்க என டிச்சர்ட் டி சொய்சா முதல் இன்றுவரை முப்பதிற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இதுவரை படுகொலை செயப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குரிய நீதி இதுவரை கிடைக்கவும் இல்லை.

இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியராளர் ஒன்றியம், இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களைக் கௌரவப்படுத்தும் நோக்கிலும், அவர்களது ஞாபகர்த்த நிழ்வுகளை மேற்கொள்ளவும், அவர்களின் நினைவாக நினைவுத் தூபி ஒன்றை மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் அமைத்துள்ளது. 

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியளார்களின் ஞாபகார்த்த நிகழ்வுகளையும் ஊடகவியலாளர் நலனோம்பு விடையங்களையும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியளார் ஒன்றியம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,  என்பன வருடந்தோறும் மேற்கொண்டு வருகின்றன. 

இன்றயதினமும் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் ஐ.நடேசனின் 16 வது ஆண்டு நினைவு தினத்தை மட்டக்களப்பில் நடாத்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியராளர் ஒன்றியம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் தமிழ் ஊடவியலாளர்களின் படுகொலை தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் இந்த நாட்டில் தமிழ் ஊடகவியலாளர்கள் தமது பணிகளை சுதந்திரமாக முன்னெடுக்கமுடியாத நிலை தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2004ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட அமரர் ஐயாத்துரை நடேசனின் 16வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளது. அதிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளும் கெடுபிடிகளும் படுகொலைகளும் அதிகரித்தபோது அதற்கு எதிராகவும் அதனை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பல தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்ளும் படையினர் அதிகமான பிரசன்னமான பகுதிகளிலும் வைத்து பல தமிழ் ஊடகவியலாளர்கள் வடகிழக்கில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரையில் ஒரு ஊடகவியலாளரின் விசாரணையினையும் உரியமுறையில் மேற்கொள்ளாது காலத்திற்கு காலம் வரும் அரசுகள் அவற்றினை கிடப்பில் போட்டு வருவதுடன் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான் தொடர் அச்சுறுத்தலையும் மேற்கொண்டு வருகின்றது.

இதேபோன்றே 2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி எல்லை வீதியில் தனது அலுவலகத்திற்கு கடமைக்கு சென்று கொண்டிருந்தபோது ஊடகவியலாளர் ஜ.நடேசன் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பலத்த பாதுகாப்புக்கும் மத்தியில் இருந்த அப்பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சிலரின் பெயர்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும் அவர்கள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவும் இல்லை, அது தொடர்பில் விசாரணை செய்யப்பட வுமில்லை.

தமிழ் மக்களின் குரல் வளையினை நசுக்கும் செயற்பாடாவே தமிழ் மக்களும் தமிழ் ஊடகத்துறையும் அதனை நோக்கியது.

இதுவரையில் இலங்கையில் கொல்லப்பட்ட எந்த தமிழ் ஊடவியலாளர்களின் கொலை குறித்தும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. இன்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படமுடியாத நிலையே இருந்துவருகின்றது.

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து சர்வதேச சமூகம் எந்தவித அழுத்தங்களையும் வழங்கியதாக இதுவரையில் தெரியவில்லை.

இவ்வாறான நிலையிலேயே அமரர் நாட்டுப்பற்றானர் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜி.நடேசனின் 16வது ஆண்டு நினைவினை எமது சங்கம் கனதியான மனதுடன் அனுஸ்டிக்கின்றது. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: