29 Feb 2020

பட்டிருப்பு தொகுதி மக்களின் உணர்வுகளை இலங்கை தமிழ் அரசு கட்சி இம்முறையாவது புரிந்து கொள்ளும் காலமிது.

SHARE

(வாஞ்சியூரான்)

பட்டிருப்பு தொகுதி மக்களின் உணர்வுகளை இலங்கை தமிழ் அரசு கட்சி இம்முறையாவது புரிந்து கொள்ளும் காலமிது.


காலங்கள் கடந்து செல்லும் கணப் பொழுதில் நாளுக்கு நாள் பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை ஒவ்வொருவருடைய வாழ்வும் பல்வேறு மாற்றங்களுடனேயே பயணித்துக் கொண்டிருக்கிறது.
அவ்வாறாகவே இந்த மண்ணில் முப்பது வருடகால ஆயுதப் போராட்டம் அஹிம்சைப் போராட்டம் அனைத்தும் மௌனிக்கப்பட்டு ஜனநாயகப் போராட்டத்தினூடாக தமிழ் மக்கள் தமிழர் தாயகத்தில் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமென்ற முனைப்போடு தமிழ் தலைமைகள் பல வழிகளிலும் தங்களாலான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருந்தாலும் இன்று வரை எண்ணங்கள் எதுவும் கை கூடாதா ஒன்றாகவே உள்ளது. இதற்கான அடிப்படைக் காரணம் மாறி மாறி வரும் பெரும்பான்மையின அரசாங்கங்கள் தமிழர்கள் தங்களுடைய ஜனநாயக விழுமியங்களை பின்பற்றி அதிகார பகிர்வுடன் சுய நிர்ணய உரிமையின் கீழான சமஷ்டி ஆட்சி முறையில் வாழ வழி ஏற்படுத்த வேண்டும் என்ற இதய சுத்தியுடனான மனோபங்குவம் சிங்கள அரசுகளிடம் இருந்து இது வரை வெளிப்படுத்தப்படவில்லை.இவ்வாறான நிலையில் தான் தமிழர்கள் தங்களுடைய பிரச்சனையை தீர்க்க கூடிய ஒரு சிறந்த சூழல் 2015 ஆண்டு தமிழ்பேசும் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினுடைய ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது. இருந்தும் இரு பெரும்பான்மையின கட்சிகளுக்கு இடையிலான அதிகார போட்டி நாட்டின் ஸ்திரமற்ற தன்மை மற்றும் நாடு பிளவுபடுத்தப்படப் போகின்றது என சிங்கள மக்கள் மத்தியிலே உருவாக்கப்பட்ட மாயை போன்றவற்றினால் புதிய அரசியலமைப்பிற்கான சட்டவரைபு கூட இடைநடுவில் கைவிடப்பட்டுப் போனது.ஆனால் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஒன்றுமையாகவும் அன்புடனும் இணைந்து வாழ்வதற்கே விரும்புகிறார்கள் அவர்கள் மொழியினால் மாத்திரம் பிரதானமாக வேறுபட்டிருந்தாலும் காலாச்சாரம், சமயம், திருமணம் போன்ற பல்வேறு விடயங்களில் ஒன்றுமையாகவே வாழ்ந்து வருகின்றனர் ஆனால், குறிப்பாக சிங்கள அரசியல் தலைமைகளே தமிழ் மக்களுடைய உணர்வுகளையும் உரிமைகளையும் தங்களுடைய அரசியலுக்காக சிங்கள மக்கள் மத்தியில் தவறான வழியில் வழி நடாத்தி செல்கின்றனர் இதனாலேயே இன்று வரை தமிழ் மக்கள் தங்களுடைய சுயநிர்ணய உரிமையினை பெற முடியாமல் உள்ளது.இந்த விடயத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவே தமிழ் மக்களினுடைய ஏக பிரதிநிதிகளான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஏன் அண்மையில் கூட புதிய அரசாங்கம் சர்வதேசதுக்கு பொறுப்புக் கூற வேண்டிய ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகிக் கொள்வதாக கூட அறிவித்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் தமிழ்களுடைய உரிமையையோ அபிவிருத்தியையோ திறந்த மனதுடன் செய்வதற்கு சிங்கள அரசுகள் தயாரில்லை என்பதனை வெளிப்படையாக உணர முடிகின்றது இந்த வெளிப்படையான உண்மை கூட எல்லா தமிழ் மக்களுடைய மனங்களில் உள்ளது என்பது கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக இந்த அரசுக்கு எதிராக வாக்களித்ததனை காணமுடிகிறது.இவ்வாறான சூழ்நிலைகளில் வடகிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய காணிகள் விடுவிப்பதிலும் அரசியல் கைதிகளை விடுவிப்பதிலும் அபிவிருத்திகளை மேற்கொள்வதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்களால் முடிந்த வேலைத் திட்டங்களையும் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டாலும் எல்லா அரசுக்களும் இவ் விடயங்களில் கூட தமிழ் மக்கள் மீது உண்மையான கரிசனையினை கொண்டுள்ளதாக கூட இல்லை.அண்மையில் கூட கடந்த ஐந்து வருடங்களாக தமிழ் மொழியில் பாடப்பட்ட தேசிய கீதம் கூட கடந்த சுதந்திர தினத்தில் இல்லாமல் செய்யப்பட்டது இந்த ஒரு விடயத்தினைக் கூட அரசு செய்ய விரும்பவில்லை அப்போது எவ்வாறு அவர்களால் பூரணமான ஒரு அதிகாரப் பகிர்வினை பெற்றுத் தர முடியும் என்பது வெறும் கற்பனையான விடயமாகவே உள்ளது அவ்வாறே பெரும்பான்மையின அரசுகளுடன் இணைந்து செயல்படுகின்ற அவர்களுக்களுடன் ஒட்டி உறவாடுகின்ற அரசின் அரசியல் பிரதிநிதிகள், அமைப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் என்று சொல்வர்களால் கூட இவ் விடயங்களை தட்டிக் கேட்க முடியாத நிலை உள்ளதோடு அவர்கள் தங்களுடைய சுய இலாப அரசியலுக்காக அரசுடன் ஒட்டிக் கொண்டு மௌனிகளாக செயற்படுகின்றார்கள் என்பது தெளிவாகிறது.ஆனால் வடகிழக்கு தமிழ் மக்களினுடைய உண்மையான உணர்வுகளை சீட்டுகின்ற எம் இனத்தினை காட்டிக் கொடுத்தவர்களையும், எம் இனத்தினை மிதித்த பெரும்பான்மையின இனத்தவர்களையும் உண்மையான உணர்வுள்ள கடந்த கால வரலாற்றினை அறிந்த எந்தவொரு தமிழனும் அவர்களுடைய செயற்பாடுகளுக்கு உயிருள்ளவரை ஆதரவளிக்கவும் மாட்டார்கள் தேர்தலில் வாக்களிக்கவும் மாட்டர்கள் என்பதே நிதர்சனம்.நாட்டின் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதும் அவர்களுடைய வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவதும் ஒவ்வொரு அரசினுடைய கடைமையாகும் அதனை கூட சரி வர நிறைவேற்ற முடியாத அரசிடமிருந்து தமிழ் மக்களுக்கான உரிமையினை பெற்றெடுப்பதற்காக போராடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவர்களால் முடியுமான வரை அபிருத்தியை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் முடியுமான வரை விட்டுக் கொடுப்புகளுடனும் பேச்சுவார்த்தைகளினுடாகவும் தமிழ் மக்களுடைய நீண்டகால பிரச்சனைக்கு அரசியலமைப்பினூடாக தீர்வினை காண எத்தனித்துக் கொண்டுருக்கிறார்கள் ஆனால் இந்த அரசிடம் தமிழர்களின் தன்மானத்தை அடகு வைத்து அடி பணிந்து செயல்பட வேண்டிய தேவை எம் தமிழினத்திடம் இல்லை.ஆகவே, தமிழர்களுடைய ஒட்டு மொத்த பிரதிநிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
பேரம் பேசுகின்ற சக்தியாக எதிர்வரும் பாராளுமன்த்தில் பலமான அமைப்பாக காணப்படுவதே காலத்தின் தேவையாகவும் இதுவே தமிழ் மக்களின் ஒற்றுமையின் பிரதிபலிப்புமாகும். அதற்காக எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடகிழக்கு மகாணம் மற்றும் கொழும்பில் போட்டியிட்டு அதி கூடிய ஆசனங்களை பெற வேண்டி நிலை உள்ளது.இந்த விடயத்தில் நடைபெறப் போகும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சரியான துடிப்பான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மூலமாக தங்களை அர்பணித்து செயற்படக் கூடியவர்களை வேட்பாளாராக நியமிக்க வேண்டிய தேவை உள்ளது அதிலும் தன்மானத்தை இழக்காதவர்களாக கடந்த கால போராட்டத்தை கொஞ்சைப் படுத்தாதவர்களாகவும் சுயநல அரசியல் செய்கின்றவர்கள் அல்லாத திறைமையான கல்வி அறிவு, மொழியறிவு, மனதாபிமானம் மிக்க வேட்பாளர்களை இம் முறை இலங்கை தமிழரசுக் கட்சியானது சகல பங்காளி கட்சியுடனான ஒத்துழைப்புகளுடன் வடகிழக்கு மாகாணங்களில் முன்னிறுத்த வேண்டிய கடப்பாடு அவசியமானதாக உள்ளது.வடக்கு மாகாணத்தினுடைய மக்கள் என்றும் தெளிவானவர்களாகவும் ஒற்றுமையானவர்களாகவும் தமிழரசுக் கட்சியின் கொள்கையினை அறிந்தவர்களாக எத்தனை புதிய குழுக்கள் உருவாகினாலும் அனைவரையும் புறம்தள்ளி தமிழ்தேசியக் கூட்டமைப்பினையே வெற்றி பெறசெய்வார்கள். அவ்வாறே கிழக்கு மாகண மக்களும் ஒற்றுமையாக செயற்பபட வேண்டியதுடன் திருகோணமலை மாட்டத்தில் 2 ஆசனங்களையும் அம்பாறை மாவட்டத்தில் 2 ஆனசங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 ஆசனங்களை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும் அதற்குரிய வகையிலான வேட்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டிய விடயம் முக்கியமானதாகும்.மட்டக்களப்பு மாவட்டத்தினை பெறுத்த வரையில் 2001 ஆம் ஆண்டு 86,284 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் 2004 ஆம் ஆண்டு 161,011 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும் 2010 ஆம் ஆண்டு 66,235 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் 2015 ஆம் ஆண்டு 127,185 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருந்ததுடன் தொடர்ச்சியாக மட்டக்களப்பு தொகுதி, பட்டிருப்பு தொகுதி, கல்குடா தேர்தல் தொகுதிகளில் தொகுதிகளுக்கான பிரதிநிதித்துவம் கிடைக்கப் பெற்றிருந்தது. அதிலும் குறிப்பாக 2004இல் ஒருவரும் 2010இல் ஆண்டு இருவருமாக பட்டிருப்பு தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.ஆனால் கடந்த முறை 2015 நடைபெற்ற தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த பா.அரியநேந்திரன் மற்றும் பொ.செல்வராசா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கோவிந்தன் கருணாகரம் (ஜனா) ஆகியோர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதுடன் மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்தார்கள் குறிப்பாக இத் தேர்தலில் மக்கள் புதிய முகங்களையே தேர்வு செய்வதற்கு அதிகம் விருப்பினார்கள் ஆனால் புதிய முகங்களாக சட்டதரணிகள், வைத்தியர்கள் சமூக சேவையாளர்களை நிறுத்துவதற்கு சமூக மட்ட அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருந்தும் 2015இல் தமிழரசு கட்சி அதனை செவி சாய்க்கவில்லை இதனால் மக்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனதுடன் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் தோல்வியினையே சந்தித்ததுடன் பட்டிருப்பு தொகுதியில் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப்பட்டிருந்தது.அவ்வாறே அதனை தொடர்ந்து வந்த 2017 உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி மன்ற இடப் பங்கீட்டிலே பட்டிருப்பு தொகுதியில் இரு சபைகளை ரெலோவிற்கும் ஒரு சபையினை தமிழரசுக்கட்சிக்கும் வழங்கியிருந்ததுடன் முன்னாள் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த சீ.மூ.இராசமாணிக்கம் அவர்களுடைய பாசறையிலே வளர்ந்த உண்மையான தமிழரசுக் கட்சி பேராளிகளின் எதிர்பார்ப்புகளை மிதித்திருந்ததுடன் ஏனைய பங்காளி கட்சிகளுக்கு பட்டிருப்பு தொகுதியினை தாரை வார்த்து கொடுத்து எதிர்கால பட்டிருப்பு தொகுதியின் தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகளையும் நிலையினையும் கேள்வி நிலை உட்படுத்தியிருக்கின்றது.இவ்வாறானதொரு சூழ்நிலையில் கடந்த காலங்களில் விட்ட தவறினை இம் முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி விடக் கூடாது என்பதுடன் பட்டிருப்பு தொகுதி வாழ் மக்களுடைய உணர்வுகளை மதித்து புதிய வேட்பாளர்களை களமிறக்கி தேர்தலில் மக்களுடைய அபிமானம் பெற்றவர்களை வெற்றி பெறச் செய்வதே காலத்தின் தேவையாகவுள்ளது.அந்த வகையில் இம் முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களாக 8 பேர் போட்டியிடவுள்ளதுடன் குறிப்பாக இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் மற்றும் ஞா.சிறிநேசன் ஆகியோர் போட்டியிடவுள்ளமை உறுதியாகியுள்ளதுடன் மேலும் கட்சியின் முக்கிய பதவியிலுள்ள ஒருவர், முன்னாள் அரச அதிபர் ஒருவர், சமூக சேவையாளர் ஒருவர் உள்ளடங்கலாக 5 பேரும் புளெட் சார்பில் பட்டிருப்பு தொகுதியிலிருந்து ஒருவர் போட்டியிடவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ரெலோ சார்பில் பட்டிருப்பு தொகுதியிலிருந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் கல்குடா தொகுதியிலிருந்து இளம் சட்டத்தரணி என இருவரும் போட்டியிடவுள்ளமை உறுதிப்படுத்தப்ட்டுள்ளது.இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்களி கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியானது வேட்பாளர்களை மிக விரைவில் அறிவிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது அதிலும் குறிப்பாக பட்டிருப்பு தொகுதியில் தமிழரசுக்கட்சியினை நிலைபெற செய்ய வேண்டியது அவசியமாகியுள்ள ஓர் தேவையாக எழுந்துள்ளது.தமிழரசுக் கட்சி சார்பில் பட்டிருப்பு தொகுதியிலிருந்து போட்டியிடுவதற்கு கடந்த முறை தோல்வியினை தழுவிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் சமூக சேவையாளர் இரா.சாணக்கியன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இன்றைய முக்கிய சூழலில் தமிழரசுக் கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவக் கூடிய மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அதி கூடிய வாக்குகளைப் பெறக் கூடிய மிக பொருத்தமான ஒருவராக தற்போதைய சூழ்நிலையில் காணப்படும் ஒருவரே சீ.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்டம் பூராக தன்னுடைய அமைப்பின் மூலமாக பல உதவித் திட்டங்களை செய்து வருகின்றவருமான இராசமாணிக்கம் இராஜபுத்திரன் சாணக்கியன் காணப்டுகின்றார்.முன்னாள் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்து பட்டிருப்பு தொகுதியினை தமிழரசுக் கட்சியினுடைய பாசறையாக வளர்த்த சீ.மூ.இராசமாணிக்கம் அவர்களுடைய பேரனாகிய இராஜபுத்திரன் சாணக்கியன் அவுஸ்திரேலியாவில் தன்னுடைய பொருளியல் பட்டத்தினை பூர்த்தி செய்திருந்ததுடன் அதன் பின்னர் தன்னுடைய பிரதேசத்துக்கு சேவையினை செய்ய வேண்டுமென்ற விருப்பத்தில் தேசியக் கட்சி ஒன்றின் அழைப்பின் பேரில் கட்சி அமைப்பாளர் பதவியினை பெற்றுக் கொண்டதுடன் அதன் மூலம் மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென்ற முனைப்புடன் செயற்பட்டார்.இருப்பினும் பேரினவாத கட்சிகளின் செயற்பாடுகள் மூலம் தமிழர்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படுவதனை உணர்ந்த இரா.சாணக்கியன் தன்னுடைய அரசியல் பயணம் தவறான பாதை என்பதனை அறிந்து கொண்டதுடன் அரசியலில் இருந்து இரண்டு வருடங்கள் விலகி முழுமையாக தன்னுடைய பாட்டனாரினுடைய பெயரிலே சமூக சேவை மக்கள் அமைப்பினுடாக பரந்து பட்ட சேவையை ஆற்றத் தொடங்கினார் இதனால் சமூகத்தோடு நெருக்கிய தொடர்பினைக் கொண்டிருந்தன் பலனாக மக்களுடைய உணர்வுகளை அறிந்த அவர் அபிவிருத்தி ஒரு புறமிருக்க தமிழர்களுடைய உரிமை முதலில் நிலைநாட்டப்பட வேண்டுமென்பதனை மக்களிடமிருந்து அறிந்து கொண்டு இதற்காக பாடுபடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது விருப்பம் கொண்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக இணைந்து கொண்டதுடன் கட்சியினுடைய வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகின்றார்.குறிப்பாக கடந்த பல வருட காலமாக பல கோடிக்கணக்கான உதவித் திட்டங்களை தன்னுடைய சீ.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினுடாக செயற்படுத்தி பின் தங்கிய குடும்பங்களின் வாழ்வாதார வசதிகள், மாணவர்களின் கல்வி வளர்ச்சி, விளையாட்டுக் கழகங்களின் வளர்ச்சி, 2030 இல் எதிர் கால மட்டக்களப்பு என்ற எண்ணக்கருக்கள் ஊடாக தன்னால் முடிந்த உதவிகளை தன்னுடைய அமைப்பு மூலமாக செய்து வருவதுடன் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் செயற்பட வேண்டிய செயற்பாடுகளை விட பல உதவித் திட்டங்களை நடைமுறைப்டுத்தி வருகின்றார் குறிப்பாக மும்மொழியிலும் தேர்ச்சி பெற்ற இவர் இப் பிரதேசங்களிலுள்ள மக்களுடைய பொதுப் பிரச்சனைகளின் போது அரச அதிகாரிகளை தொடர்பு கொண்டு தீர்க்க கூடிய ஓர் சிறந்த ஆளுமை மிக்க ஒருவராக காணப்படுகின்றவராகவும் திகழ்கின்றார்.இருப்பினும் இரா.சாணக்கியன் அரசின் தேசியக் கட்சியினுடாக தன்னுடைய முதலாவது அரசியல் பயணத்தை ஆரம்பித்திருந்தாலும் சிங்கள அரசுகளின் அடக்குமுறையினையும் மக்களுடைய உணர்வுகளை புரிந்து கொண்டே தமிழ்த் தேசியத்தின் பால் தன்னை அர்ப்பணித்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் அவருடைய மக்கள் செல்வாக்கு ஆளுமை என்பற்றில் அச்சம் கொண்ட சிலர் அவருக்கு சேறு பூசும் செயற்பாடுகளில் ஈடுபட்டாலும் உண்மையான ஒரு மக்களுடைய தேவையறிந்த சேவகனாக இன்று பலராலும் பேசப்படுகின்ற இளைஞராகவே இரா.சாணக்கியன் காணப்டுகின்றார்.அதனடிப்படையில் எதிர்வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து போட்டியிடுகின்ற இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளர்களில் வெற்றி பெறக் கூடிய ஒரு வேட்பாளராகவும் பட்டிருப்பு தொகுதியினுடைய தமிழரசுக் கட்சியினுடைய பிரதிநிதித்துவத்தினை மீளப் பெறக் கூடிய ஒருவராகவும் ஏனைய வேட்பாளர்களோடு போட்டியிட்டு வெற்றி பெறக் கூடிய ஒருவராகவும் பட்டிருப்பு தொகுதி மாத்திரமல்ல மட்டக்களப்பு மாவட்ட மக்களினதும் தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர்களினாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுபவராக இரா.சாணக்கியன் காணப்படுகின்றார்.2015 கடந்த முறை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற தேர்தலில் மக்கள் செல்வாக்கு கொண்ட புதியவர்களை வேட்பாளர்களாக நியமிக்கவில்லை அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களை கைவிட்டு ரெலோவிற்கு இரு சபைகளை வழங்கியிருந்தது இவ்வாறான தொடர்ந் தேர்ச்சியான தவறினை விடாமல் தமிழரசுக் கட்சியினை வளர்க்க கூடிய வெற்றி பெறக் கூடிய ஒரு தகுதியான வேட்பாளராக காணப்படுகின்ற இரா.சாணக்கியன் அவர்களை இம் முறை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக நியமிக்குமாறு பட்டிருப்பு தொகுதி வாழ் மக்களும் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களும் வேண்டி நிற்பதுடன்,இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர், செயலாளர், ஊடகப் பேச்சாளர், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமண்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும்
மக்களின் உணர்வுகளைப் புரிந்து உணர்வுகளுக்கு மதிப்பளித்து இரா.சாணக்கியன் அவர்களை எதிர்வரும் நாடளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்
SHARE

Author: verified_user

0 Comments: