12 Feb 2020

பல்கலைக் கழகங்களில் பகிடி வதைப் போக்கு தொடர்பாக சட்ட, சமூக நெறி விழிப்புணர்வு.

SHARE
பல்கலைக் கழகங்களில் பகிடி வதைப் போக்கு தொடர்பாக சட்ட, சமூக நெறி  விழிப்புணர்வு.
சம காலத்தில் பல்கலைக் கழகங்களில் ஒரு போக்காக (வுசநனெ) மாறி வரும் பகிடி வதை சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்த ஏற்ற ஒழுங்குகளைச் செய்துள்ளதாக மட்டக்களப்பு  மாவட்ட “அருவி”  பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான மயூரி ஜனன் தெரிவித்தார்.

இது விடயமாக புதன்கிழமை கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, சிறிது காலம் மங்கலாகத் தெரிந்த பகிடி வதைப் போக்கு மீண்டும் பல்கலைக் கழகங்களில் தலையெடுத்திருப்பது குறித்து சமதாயத்திலுள்ள சகல தரப்பினரும் விழிப்படையவேண்டியது சமகாலத் தேவையாகவுள்ளது.

சமீபத்தில் யாழ் பல்கலைக் கழகத்தில் நடந்ததாகக் கூறப்படும் பகிடி வதைச் செயற்பாடு பற்றி அனைவரும் அக்கறை கொள்ள வேண்டும்.

அதன் காரணமாக கிழக்குப் பல்கலைக் கழகத்தில் விழிப்புணர்வு நிகழ்வை நடாத்த ஒழுங்கு செய்துள்ளோம்.

மேலும், அதற்கு இணையாக “பகிடி வதையின் பாரதூரம்” எனும் விழிப்புணர்வு பிரசுரங்களையும் பரவலாக விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்த இளம் சமுதாயத்தின் முன்னுதாரண இடங்களாகவும், ஆக்கபூர்வ அறிவுத் தேடலுக்கும் அபிவிருத்திக்குமான மையங்களாகவும் திகழ வேண்டிய உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் இத்தகைய பகிடி வதை போன்ற அழிவுபூர்வமான செயல்கள் வரவேற்கத் தக்கவை அல்ல.

இதனை வலியுறுத்தும் வகையில் சட்ட ஏற்பாடுகள், சமூக செல்நெறிக் கொள்கைகள் சம்பந்தமாக பல்கலைக் கழக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப்பட வேண்டிய தேவை உள்ளது.

கடந்த கால யுத்தத்தின் காரணமாக குறிப்பாக வடக்கு கிழக்கு சமுதாயத்தினர் இழந்த கல்வியை மீண்டும் பெறுவதில் பல்கலைக் கழக பகிடி வதைகள் ஒரு கேடாக அமைந்து விடக் கூடாது என்பதில் சமூக ஆர்வலர்களும், பெற்றோரும், கற்றோரும் என சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு ஆர்வலர்களும் அக்கறை கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். 
SHARE

Author: verified_user

0 Comments: