17 Jan 2020

கிழக்கு மாகாணத்தின் முன்பள்ளி ஆசிரியைகளை வாய்மொழித் தேர்வுக்காக கொழும்புக்கு அழைப்பித்து சிரமத்திற்குள்ளாக்க வேண்டாம் நைற்றா முன்னாள் தலைவர் நஸீர் அஹமட் புதிய தலைவரிடமும் அமைச்சின் செயலாளரிடமும் வேண்டுகோள்.

SHARE
கிழக்கு மாகாணத்தின் முன்பள்ளி ஆசிரியைகளை வாய்மொழித் தேர்வுக்காக கொழும்புக்கு அழைப்பித்து சிரமத்திற்குள்ளாக்க வேண்டாம்.
நைற்றா முன்னாள் தலைவர் நஸீர் அஹமட் புதிய தலைவரிடமும் அமைச்சின் செயலாளரிடமும் வேண்டுகோள்.

தகைமைச் சான்றிதழ் வழங்கும் ஏற்பாட்டின் அடிப்படையில் வாய்மொழித் தேர்வுக்காக கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியைகளை கொழும்புக்கு அழைப்பித்து வீண் சிரமத்திற்குள்ளாக்க வேண்டாம் என தான் நைற்றாவின் தற்போதைய தலைவரிடமும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக  தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் (NAITA - National Apprentice and Industrial Training Authority) முன்னாள் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையிள் (NAITA - National Apprentice and Industrial Training Authority) கீழ், முன்பள்ளி ஆசிரியர்கள் NVQ-4 National Vocational Qualification  Level  தேசிய தகைமைச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய் மொழிமூல நேர்முகத் தேர்வு எதிர்வரும் 19ஆம் திகதி கொழும்பில் நைற்றா தலைமைக் காரியாலயத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பையடுத்து தேசிய தகைமைச் சான்றிதழ்களுக்கான பயிற்சிகளை நிறைவு செய்து அதில் சித்தியடைந்த நிலையில்  கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியைகள் மேலும் ஒரு வாய்மொழித் தேர்வுக்காக தாங்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு பொருளாதார, குடும்ப கஷ்டங்களுடன் வாழும் தங்களுக்கு இது வீண் அலைச்சலையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும் என்றும் நைற்றாவின் முன்னாள் தலைவர் நஸீர் அஹமட்டின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இதனையடுத்து பயனாளிகளின் இந்த விடயத்தை தான் தற்போதைய நைற்றாவின் தலைவர் தரங்க நலின் கம்லத்தின் கவனத்திற்கும் அமைச்சின் செயலாளர் டி.எம். சரத் அபேகுணவர்தனவின் கவனத்திற்கும் உடனடியாகக் கொண்டு வந்ததாக நஸீர் அஹமட் தெரிவித்தார்.
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் உள்ள பல நூற்றுக் கணக்கான ஆசியைகளை கிழக்கு மாகாணத்திலிருந்து கொழும்பிற்கு அழைப்பிப்பதை விட நைற்றாவின் தலைமையகத்திலுள்ள  நேர்முகத்தேர்வு நடத்தக் கூடிய அதிகாரிகள் ஒரு சிலர் (ஆகக் கூடியது 3 பேர்தான்) அவர்கள் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலைக்கு விஜயம் செய்து ஆசிரியைகளிடம் நேர்முகத் தேர்வை நடத்த முடியும் என்றும் தான் ஆலோசனை வழங்கியுள்ளதாக முன்னாள் தலைவர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் தலைவராக  நியமனம் பெற்றதன் பின்னர்  அவரது சிந்தனையில் உதித்த இந்த முன்பள்ளி ஆசிரியர்களையும் NVQ-4 National Vocational Qualification  Level N தேசிய தகைமைச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதற்காக உள்வாங்கும் செயல்திட்டம் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஏற்கெனவே அமுல்படுத்தப்பட்டு தற்போது முன்பள்ளி ஆசிரியைகள் பயிற்சிகளையும் நிறைவு செய்துள்ளார்கள்.

இச்செயற்திட்டம் பல்வேறு பொருளாதாரச் சிரமங்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புக்கள் தியாகங்களோடு பல்லாண்டுகளாகச் சேவையாற்றி வரும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று ஏற்கெனவே  இத்திட்டத்தில் இணைந்து கொண்டு தகைமைச் சான்றிதழ்களைப் பெற்ற ஆசிரியைகள் குறிப்பிடுகின்றனர். 
SHARE

Author: verified_user

0 Comments: