10 Oct 2019

நில உரிமைக்கான பொறுப்புக் கூறல்; ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பு நிகழ்வு.

SHARE
நில உரிமைக்கான பொறுப்புக் கூறல்; ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பு நிகழ்வு.
அம்பாறை மாவட்ட நில உரிமைக்கான பொறுப்புக் கூறல்; ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வு சனிக்கிழமை 12.10.2019 இடம்பெறவுள்ளதாக காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் இணைப்பாளர் கே. நிஹால் அஹமட் தெரிவித்தார்.

இது தொடர்பாக அந்த அமைப்பின் சார்பில் புதன்கிழமை 09.10.2019 அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாடு சுதந்திரம் பெற்றது தொடக்கம் அடிப்படை மனித உரிமை மீறல்களில் பிரதான ஒன்றாக திட்டமிட்ட நிலப்பறிப்புக்கள் அமைந்துள்ளன.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் 4652 குடும்பங்களினது 14127 ஏக்கர் பரப்பளவான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பான முறைப்பாடுகள் எமது அமைப்புக்கு இது வரைக்கும் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன் அடிப்படையில் நாம் அவற்றின் உண்மைத்தன்மைகளை ஆவண ரீதியாகவும், ஆய்வு ரீதியாகவும் பகுப்பாய்வு செய்து காணிகளை இழந்த மக்களின் உரிமைக்காக கைகோர்த்து செயற்பட்டு வருகின்றோம்.

அதன் ஒரு கட்டமாக எதிர்வரும் 12.10.2019ம் திகதி மீனோடைக்கட்டு அல் சக்கி மண்டபத்தில் காலை 9 மணிக்கு நாம் நடாத்த ஒழுங்கு செய்துள்ள காணி உரிமைக்கான பொறுப்புக்கூறல் நிகழ்வில் இக்காணிப் பிரச்சினைகளை எடுத்துரைக்கும் ஆய்வு அறிக்கையினை சமர்ப்பித்து அம்பாறை மாவட்ட காணிப் பிரச்சினை தொடர்பான ஆவண படத்தினையும் திரையிட திட்டமிட்டுள்ளோம்.

இதனூடாக பொறுப்புவாய்ந்தவர்களது பொறுப்புக்கூறலை அதிகரிக்கவும் விளைகின்றோம்.
இந்நிகழ்வில் பாதிக்கப்பட்ட முஸ்லிம், தமிழ், சிங்கள மக்களின் மாவட்ட மட்ட பிரதிநிதிகள் 500 பேர்களுடன், பொறுப்புவாய்ந்த அரசியல் பிரமுகர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள், தேசிய, சர்வதேச மட்டத்திலான அமைப்புக்கள், மனித உரிமை பாதுகாப்பு அமைப்புக்கள்  செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், ஊடகங்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் என பல்வேறுபட்ட பங்குதாரர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




SHARE

Author: verified_user

0 Comments: