11 Jul 2019

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் ஆயுதமுனையில் உருவாக்கப்பட்டதாகும் என்பது முழுக்க முழுக்கச் சோடிக்கப்பட்ட ஒரு பொய் - கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் - தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்

SHARE
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் ஆயுதமுனையில் உருவாக்கப்பட்டதாகும் என்பது முழுக்க முழுக்கச் சோடிக்கப்பட்ட ஒரு பொய் - கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் - தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும்படியான தமிழர்களின் கோரிக்கைக்கு எதிராக முஸ்லிம் தரப்பிலிருந்து ஊடகங்களுக்கு அறிக்கையிடும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் பிரமுகர்களும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் முப்பது வருடங்களுக்கு முன்னர் ஆயுதமுனையில் உருவாக்கப்பட்டதாகும் என்கின்றனர். இது முழுக்க முழுக்கச் சோடிக்கப்பட்ட ஒரு பொய் ஆகும். 

என கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தiலைவர் - தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பில் புதன்கிழமை (10) மாலை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது….

1988ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தவிசாளரும் பதில் செயலாளருமான காலஞ்சென்ற ரஞ்சன்விஜயரட்ண அவர்கள் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார். அவ்வேளை அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கத்தின் அப்போதைய தலைவரும் முன்னாள் நாவிதன்வெளி - அன்னமலைக் கிராம சபையின் தலைவருமான வீ. சின்னத்துரை அவர்களின் தலைமையில் அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கத்தின் குழுவொன்று அப்போது பொத்துவில் தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக விளங்கிய திருமதி. ரங்கநாயகி பத்மநாதனின் உதவியுடன் ரஞ்சன்விஜயரட்ணவைச் சந்தித்துக் கல்முனைத் தொகுதியிலும் (கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோயில் வீதியைப்பிரிக்கும் எல்லையாகக் கொண்டு கல்முனை வடக்குக்கு என தனியான தமிழ்ப் பெரும்பான்மை நிருவாக அலகு), சம்மாந்துறைத் தொகுதியிலும் (முன்னாள் மல்வத்தை கிராமசபைப் பிரதேசத்தையும் முன்னாள் நாவிதன்வெளி – அன்னமலைக் கிராம சபைப் பிரதேசத்தையும் அவற்றுடன் வீரமுனை மற்றும் வீரச்சோலைக் கிராமங்களையும் இணைத்ததான ஒரு தனியான தமிழ்ப் பெரும்பான்மை அலகு) இரு மேலதிகமான உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை உருவாக்கித் தரும்படியான கோரிக்கைகள் அடங்கிய ஜனாதிபதிக்கு முகவரியிட்ட 22.06.1988 திகதியிட்ட மகஜரைக் கையளித்தனர். கொழும்பு திரும்பிய ரஞ்சன்விஜயரட்ண அவர்கள் அப்போதைய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் காலஞ்சென்ற கே.டபிள்யு. தேவநாயகம் அவர்களினூடாக மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக கரவாகு (கல்முனை) வடக்கிலும், நாவிதன்வெளியிலும் இரு சுற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை (ஊசைஉரவை யு.பு.யு. னுiஎளைழைn) திறப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கே. டபிள்யு, தேவநாயகம் அவர்கள் தனது அமைச்சின் 12.01.1989 திகதியிட்ட ஆஃர்யு.6ஃ89 இலக்கக் கடிதத்தின் மூலம் அம்பாறை அரசாங்க அதிபருக்குப் பணிப்புரை விடுத்திருந்தார். எனினும் அப்போது கல்முனைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலஞ்சென்ற ஏ.ஆர். மன்சூர் மற்றும் சம்மாந்துறைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலஞ்சென்ற எம்.ஏ. அப்துல்மஜீத் ஆகியோரின் அரசியல் தலையீட்டினால் அவை நடைபெறாமல் தடுக்கப்பட்டன. 

பின் 1989ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலை அடுத்து அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கத்தின் உபதலைவர் காலஞ்சென்ற   கே. கணபதிப்பிள்ளை (அதிபர், கவிஞர் பாண்டியூரன், இவர் பின்னர் 1990 கலவரத்தில் காணாமல் போனார்) அவர்களின் தலைமையில் கல்முனை வடக்கில் தனியான தமிழ்ப்பெரும்பான்மை நிருவாக அலகை – உதவி அரசாங்க அதிபர் பிரிவை ஏற்படுத்தித்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கல்முனை உதவி அரசாங்க அதிபர் அலுவலக வாயிலை மறித்துக் கல்முனைத் தமிழர்கள் சாத்வீகப் போராட்டத்தை மேற்கொண்டார்கள். இதனால் கல்முனை உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தின் நாளாந்த அலுவல்கள் ஸ்தம்பித்தன. 

இவ்விடயம் பொதுநிருவாக, மாகாண சபைகள், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இவ்விடயம் பற்றி அப்போதைய பொது நிருவாக, மாகாண சபைகள், உள்நாட்டு அலுவல்கள அமைச்சர் காலஞ்சென்ற யூ.பி. விஜயகோன் அவர்கள், ஏ.ஆர். மன்சூர் (வர்த்தக கப்பல்துறை அமைச்சர்), பி. தயாரத்ன (காணி, நீர்ப்பாசன, மகாவலி அபிவிருத்தி அமைச்சர்) அமரா பியசீலி ரத்நாயக்கா (உள்நாட்டு அலுவல்கள்  இராஜாங்க அமைச்சர்), அ. அமிர்தலிங்கம் (பா.உ), நிகால் வக்மீவெவ (பா.உ), எம்.எச்.எம். அஷ்ரப் (பா.உ), ஜே. திவ்வியநாதன் (பா.உ) ஆகியோருடன் கலந்துரையாடி மேற்கொண்ட தீர்மானத்தின் படியே 12.04.1989 அன்று கல்முனை வடக்கு உபபிரதேச செயலகம் திறக்கப்பட்டது. 

பின்னர் 28.07.1993 இல் கூடிய அமைச்சரவையினால் இலங்கை முழுவதும் நாடளாவிய ரீதியில் 28 உப அலுவலங்கள் பிரதேச செயலகங்களாகத் தரமுயர்த்தப் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டது. உள்நாட்டு அலுவல்கள் மாகாண அமைச்சு இராஜாங்க செயலாளர் என்.ஏ. ஓவடகே என்பவரால் ஒப்பமிடப்பெற்று 1993.09.03 ம் திகதியிட்ட அறிவித்தல் இதனை உறுதிப்படுத்துகின்றது. 

இவ்வாறு தரமுயர்த்தப்பட்ட இருபத்தியெட்டு உபஅலுவலகங்களில் வடக்குகிழக்கு மாகாணங்களில் வெருகல் (ஈச்சிலம்பத்தை), ஒட்டிசுட்டான், காரைதீவு, கல்முனை (தமிழ்ப் பிரிவு), கந்தளாய் ஆகியன அடங்கியிருந்தன. இதில் கல்முனை (தமிழ்ப் பிரிவு) தவிர்ந்த ஏனைய இருபத்தியேழு உப அலுவலகங்களும் பிரதேச செயலகங்களாகத் தரமுயர்த்தப்பட்டன. கல்முனை (தமிழ்ப்பிரிவு) தரமுயர்த்தல் அமுலாக்கம் பெறாமைக்குக் காரணம் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற எம்.எச்.எம். அஸ்ரப் (பா.உ.) மற்றும் அமைச்சர் காலஞ்சென்ற ஏ.ஆர்.மன்சூர் ஆகியோரின் அரசியல் விருப்பமின்மையும் தலையீடும் ஆகும். 

12.04.1989 அன்று உருவான கல்முனை வடக்கு உபபிரதேச செயலகம்தான் கடந்த முப்பது வருடங்களாக இதுவரை தரமுயர்த்தப்படாமல் பெயரளவில் இயங்கி வருகிறது. 

உண்மைச் சம்பவங்கள் இவ்வாறிருக்க முஸ்லிம் தரப்பினரில் சிலர் இவ் உபபிரதேச செயலகம் முப்பது வருடங்களுக்கு முன் ஆயுதமுனையில் உருவாக்கப்பட்டதென்று கூறுவதும், பிரதேச செயலகமொன்றினை உருவாக்கும் விடயம் மாகாண சபைகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதல்ல என்பதைத் தெரிந்து கொண்டும் முஸ்லிம் தரப்பின் சட்ட முதுமானி ஒருவர் இவ் உபபிரதேச செயலக உருவாக்கத்துடன் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாளின் பெயரை இவ்விடயத்திற்குள் இழுப்பதும், இந்திய அமைதி காக்கும் படையை இவ்விடயத்தோடு சம்பந்தப்படுத்துவதும் பொய்யும் தீய நோக்கங்கள் கொண்டதுமாகும்.

முஸ்லிம் தரப்பினர் தங்களது தரப்பு வாதங்களை முன்வைப்பது தவறல்ல. ஆனால் பொய்யான கூற்றுக்களையும் ஆதாரமற்ற தகவல்களையும் முன்வைப்பதையும், கல்முனை குறித்த உண்மை வரலாறுகளை மூடி மறைப்பதையும் தவிர்த்துக் கொள்வதே ஏற்புடையதாகும். என அவர் இதன்மூலம் குறிப்பிட்டுள்ளார். 

SHARE

Author: verified_user

0 Comments: