1 Jun 2019

எந்த கொள்கையும், காரண காரியமும் இல்லாமல் இவ்வாறான அப்பாவி மக்களை வதைப்பதை பகுத்தறிவு ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் ஏற்றுக் கொள்ள முடியாது

SHARE
எந்த கொள்கையும், காரண காரியமும் இல்லாமல் இவ்வாறான அப்பாவி மக்களை வதைப்பதை பகுத்தறிவு ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் வாழைச்சேனை மயிலங்கரச்சை வாழ் மக்களும் இணைந்து தற்கொலை குண்டு தாக்குதலால் உயிர்நீத்த உறவுகளுக்கு 41 ஆம் நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வாழைச்சேனை மயிலங்கரச்சை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை (31) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்…. 

மயிலங்கரச்சை பகுதியில் உள்ள காணிகளை யாரும் விற்பனை செய்ய வேண்டாம். நீங்கள் காணிகளை விற்பனை செய்வதால் பூர்வீகமாக வாழ்ந்த இடங்கள் இல்லாமல் போய் விடும் நிலைமை உருவாகி விடும். பண தரகர்கள் தாங்கள் வாங்குவது போன்று வாங்கி வேறு நபர்களுக்கு விற்பனை செய்கின்றார். இந்த காரியத்தை நீங்கள் செய்ய வேண்டாம். இதனால் உங்களது பிள்ளைகள் இங்கு வாழ்வதற்கு இடமில்லாமல் போகும் நிலை வந்துவிடும்.

உயிர்த்த ஞாயிறு தினமன்று படுபாதகமான அராஜக மிலேச்சல்தனமான செயல் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமல்லாமல் எட்டு இடங்களில் அரங்கேற்றப்பட்டது. கிறிஸ்தவ மதஸ்தலங்களை நோக்கியதாக நடைபெற்றது. குண்டுத் தாக்குதல் நடைபெற்ற பின்னர் கொடுத்த பதில் நகைப்பாக இருந்தது.

மதஸ்தலங்களில் வழிபாட்டில் ஈடுபட்ட குழந்தைகள், சிறார்கள், பெரியவர்களை குண்டுத் தாக்குதலில் கொலை செய்தவர்களுக்கு சொர்க்க வாசல் திறந்திருப்பதாக ஆன்மீகம், அறிவியல், தர்ம நெறிக்கு அப்பாற்பட்ட கருத்தினை சொல்லி இருந்தார்கள். வெட்கப்பட வேண்டிய விடயம்.

அப்பாபி குழந்தைகள், சிறார்கள், பெரியவர்களை கொலை செய்தவர்களுக்கு சொர்க்க வாசல் திறந்திருக்கும் என்றால் அதனைப் போல் ஒரு மூட நம்பிக்கை என்றும் கிடையாது. ஆனால் இவ்வாறு இஸ்லாமிய மதத்தில் கூறப்பட்டிருக்காது. இவ்வாறான வழி நடத்தலை இஸ்லாமிய மதம் செய்திருக்க மாட்டாது. பிழையான கருத்தியலை கொண்டவர்கள் இந்த செயலை செய்துள்ளனர். இது ஒரு வடி கட்டிய பயங்கரவாதமாகத்தான் பார்க்கப்படுகின்றது.

எந்த கொள்கையும், காரண காரியமும் இல்லாமல் இவ்வாறான அப்பாவி மக்களை வதைப்பதை பௌத்தறிவு ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இவ்வாறான கருத்துக்கள் எந்த மதத்திலும் இல்லை என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களாக எஸ்.நல்லரெட்ணம், எஸ்.பகிரதன்;, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னனி தலைவர் எஸ்.தீபாகரன், மயிலங்கரச்சை விகாராதிபதி ஸ்ரீமகிந்த லங்கார, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்கள் உட்பட பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
  





SHARE

Author: verified_user

0 Comments: