11 May 2019

எனக்கு நடந்தது போன்று இனி எவருக்கும் நடக்கக் கூடாது

SHARE
மட்டக்களப்பு-வவுணதீவில் கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற இரட்டைக் கொலை சம்வத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் முன்னாள் போராளி அஜந்தன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் விடுதலையான அஜந்தனை பாதுகாப்பு தரப்பினரே அவரது இல்லத்திற்கு நேரடியாக அழைத்துச் சென்று அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் வவுணதீவு பொலிஸ் சோதனைச் சாவடியில் இரவு நேர கடமையில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் துப்பாக்கியால் சுட்டும் கழுத்து அறுத்தும் கொலை செய்யப்பட்டிருந்தனர். அந்த இரட்டைக் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்திலேயே அஜந்தன் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார்.
ஆனால் கடந்த மாதம் 21ஆம் திகதி ஸ்ரீலங்காவில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலினையடுத்து மூன்றாவது நாள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு அந்த தாக்குதலை தாமே நடத்தியதாக உரிமை கோரியிருந்தனர். அத்துடன் வவுணதீவு இரட்டைக்கொலையும் தாமே மேற்கொண்டதாகவும் தெரிவித்திருந்தனர்.
அதனடிப்படையில் அஜந்தன் குற்றமற்றவர் என்பது நிரூபனமானதையடுத்து இன்றைய தினம் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எனக்கு நடந்தது போன்று இனி எவருக்கும் நடக்கக் கூடாது என்று விடுதலையான முன்னாள் போராளி அஜந்தன் கவலை வெளியிட்டார்.
வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் போராளியான கதிர்காமத்தம்பி ராசகுமாரன் எனப்படும் அஜந்தன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் இன்று காலை விடுவிக்கப்பட்டார்.
விடுதலையான அஜந்தன் கருத்து தெரிவிக்கையில்,
எனது கைதால் எனது குடும்பம், எனது பிள்ளைகள் பாதிக்கப்பட்டு விட்டனர்.
அதனை சீர்செய்ய சில காலங்கள் செல்லும். இப்படியான துயர சம்பவங்கள் தமிழ் இளைஞர்களுக்கு நடந்துவிடக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: