4 May 2019

கிழக்குமாகாண ஆளுனரின் சந்திப்புக்கு அழைக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளவில்லை.

SHARE
கிழக்குமாகாண ஆளுனரின் சந்திப்புக்கு அழைக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளவில்லை.
கடந்த ஏப்ரல் 21ம் நாள் கிறிஸ்தவ மக்களின் உயிர்ப்பு ஞாயிறு என்னும் திவ்விய நாள். அன்று தான் மட்டக்களப்பு, கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் எட்டு இடங்களில் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளின் மனிதக் குண்டுகள் வெடித்தன. வழிபடச் சென்ற மக்கள் வன்கொலைக்கு ஆளானார்கள். சில நட்சத்திர விருந்தினர் விடுதிகளிலும் இத்தகைய படுகொலைகள் இடம்பெற்றன. இவை நடைபெற்று இரண்டு வாரங்கள் கூடக் கழியாத நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் வைபவ ரீதியான சந்திப்பு ஒன்றுக்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான எங்களை அழைத்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தலைவர், உபதலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.

இந்த சந்திப்பு உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்றுக்கு மேலதிகமான ஒன்றாக மெருகூட்டப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ சந்திப்பு எனினும் இது மாகாணசபை மண்டபத்தில் அல்லது ஆளுநர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம். உவர்மலை “வெல்கம் ஹோட்டலில்”, மதிய உணவுடனான சந்திப்பு என்பது இதனை வைபவ ரீதியான விழா ஒன்றாக மாற்றியுள்ளது. மக்கள் மனதிலே குடிகொண்டுள்ள சோகம் தனியாத இந்த நிலையிலே இவ்வித சந்திப்பொன்றில் கலந்து கொள்வதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான நாங்கள் தவிர்த்துக் கொள்வதாகத் தீர்மானித்துள்ளோம்.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இவ்விடையம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்புக் காரியாலயத்தில் சனிக்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

இந்த உடனடிக் காரணங்களுக்கு மேலதிகமாக பின்வரும் காரணங்களும் இத்தீர்மானத்திற்கு வலுச் சேர்ப்பதாக உள்ளன.

01.  புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்காக பல விடயங்களை எமது கட்சி முன்மொழிந்துள்ளது. அதிலே ஆளுநர்கள், அரசியல்வாதிகளாக இருக்கக்கூடாது என்பதும் ஒன்றாகும். இவ்விடயம் இடைக்கால அறிக்கையிலே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக அரசியல்வாதியான றோஹித போகொல்லாகம அவர்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் இந்த மாகாணத்தைச் சேர்ந்தவராக இல்லாதிருந்தமையால் அது பற்றி நாங்கள் அதிக அக்கறை கொள்ளவில்லை. ஆனால் தற்போதைய ஆளுநர் இம்மாகாணத்தைச் சேர்ந்தவராக உள்ளார்.

02.  இதனை விட இவரது அரசியற் பின்னணி முற்றுமுழுதாக தமிழ் மக்கள் மீதான துவேசத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அவற்றைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

Ø  சந்திரிக்கா அம்மையாரின் முதலாவது ஆட்சிக் காலத்தில் “பிராந்தியங்களின் ஒன்றியம்” என்ற அடிப்படையிலான அரசியல் வரைபு ஒன்று ஆக்கப்பட்டது. இதனை உருவாக்குவதில் அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் ஒத்துழைத்தது. எனினும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இன்றைய ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள் அவரது தலைவரையும், இத்தீர்வுத் திட்டத்தையும் எதிர்த்து மட்டக்களப்பு மாவட்;ட முஸ்லீம் பிரதேசங்களில் ஒருநாள் ஹர்த்தாலை கடைப்பிடிக்கச் செய்தார். இது தமிழ்பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிரான தனி ஒரு ஹிஸ்புல்லா அவர்களின் செயற்பாடாகும்.

Ø  ஓட்டமாவடியில் அமைந்திருந்த தமிழ் மக்களின் பொதுமயானத்தையும், அதற்குச் சேர்ந்த காணிகளையும் முறையற்ற வழிகளைக் கையாண்டு கையகப் படுத்துவதிலே முன்நின்று உழைத்தார். அந்த இடங்களில் தான் தற்போதைய ஓட்டமாவடிப் பிரதேச செயலகமும், நூலகமும் அமைந்துள்ளன. இவ்விடயத்தை அவர் தானே செய்ததாக அழுத்தம்  திருத்தமாகக் குறிப்பிடுகின்ற காணொளி ஒன்று வலைத்ளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

Ø  இத்தகைய இன்னொரு காணெளியில் ஓட்டமாவடியில் அமைந்திருந்த இந்துக் கோயிலை இடித்து அதிலே சந்தையொன்றை அமைத்ததாகவும் இது தொடர்பாக அன்றைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்த போதிலும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்ற தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தக் காரியத்தைச் செய்து முடித்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார். வேறொரு காணொளியில் வழக்கொன்றின் தீர்ப்பை சாதகமாகப் பெறுவதற்காக நீதிபதியையே மாற்றியதாகவும் குறிப்பிடுகின்றார்.

Ø  விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை இராணுவமே முகங்கொடுத்ததென்றும் முஸ்லீம்கள் ஆயுதம் தூக்கவில்லை என்றும் இன்றை ஆளுநர் ஹிஸ்புல்லா உள்ளிட்ட முஸ்லீம் அரசியல்வாதிகள் வலியுறுத்திச் சொல்லியிருந்தார்கள். எனினும், தற்போது வைரலாகும் காணொளி ஒன்றில் ஹிஸ்புல்லா அவர்கள் தானே ஆயுதம் ஏந்தி முஸ்லீம் இளைஞர்களோடு நின்று முஸ்லீம் கிராமங்களைப் பாதுகாத்ததாகக் குறிப்பிடுகின்றார்.

மேலே குறிப்பிடப்பட்ட தமிழ் மக்களுக்குச் சொந்தமாயிருந்த மயானம் மற்றும் ஆலயம் உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்த தமிழ் மக்கள் ஆளுநர் அவர்கள் குறிப்பிடும் அவருள்ளிட்ட ஆயுததாரிகளால் தான் விரட்டப்பட்டார்கள் என்பதை ஊகிக்கக்கூடியதாக உள்ளது. மேலும், இரத்த ஆறு ஓடும் என்று அவர் பாவித்த வாசகமும் மீண்டும் மீண்டும் அதனை உறுதிப்படுத்தவதும் இளைஞர்களை வன்முறையின்பால் ஈர்க்கும் வகையிலான ஒன்றாகவே அமைகின்றது.

03.  கடந்த ஏப்ரல் 21இன் பின் வெளிவந்து கொண்டிருக்கின்ற ஐஎஸ் ஐஎஸ் தொடர்பான பல்வேறு செய்திகளுடனும் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் தொடர்பு படுத்தப்படுகின்றார். இவ்விடயம் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும்.

மேற்குறித்தவற்றை தொகுத்து நோக்குகின்ற போது கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு எதிராக அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்து செயற்பட்டு வந்துள்ளார் என்பதும், தற்போதும் அதே செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றார் என்பதும் மாகாண நிருவாகத்தை அரசியல் மயப்படுத்துகின்றார் என்பதும், தெளிவாகின்ற அதே வேளை இனங்களுக்குள்ளே துவேச உணர்வினை தூண்டிக் கொண்டிருக்கின்ற ஒருவராகவே இவர் அடையாளப்படுத்தப்படுகின்றார்.

மூன்று இன மக்களும் வாழுகின்ற கிழக்கு மாகாணத்தில் இன நல்லுறவை ஏற்படுத்தக் கூடிய அடித்தளத்தைக் கொண்ட ஒருவரே ஆளுநராக செயற்பட வேண்டும். தற்போதைய நிலையிலே இன்றைய ஆளுநர் அவர்கள் தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநராக இருப்பது இன நல்லுறவை ஏற்படுத்துவதற்கு மாறாக எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும்.

இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டே கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களின் இன்றைய அழைப்பை நாங்கள் நிராகரித்ததோடு அங்கு சமூகமளிப்பதை தவிர்த்துக் கொள்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைபிபின் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள், உபதலைவர்களும் இதிலே பங்குபற்ற மாட்டார்கள்.

அத்தோடு கிழக்கு மாகாணத்தில் சுமூக நிலைமையையும், சமூக நல்லுறவையும் பேணிப் பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுக்கும் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இவ்விடயங்களைக் கவனத்தில் எடுத்து கிழக்கு மாகாணத்தின் தற்போதைய தலைமை நிருவாகியான ஆளுநர் தொடர்பில் தீர்க்கமான முடிவு ஒன்றினை எடுப்பது அவருடைய இலக்கை அடைவதற்கு பொருத்தமாயிருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவ்வூடக சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், முன்னாள் பிரதித் தவிசாளர் பி.இந்திரகுமார், முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினர்களான மா.நடராசா, இரா.துரைரெத்தினம், கோ.கருணாகரம், கலையரசன், இராஜேஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: