31 May 2019

மட்டக்களப்பில் உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக வங்கியின் நிதி பங்களிப்பின் மூலம் ஐந்தாண்டு வேலைத்திட்டத்தை மாவட்டத்தில் மேற்கொள்ளுவதற்கான ஆரம்பக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் வியாழக்கிழமை(30) நடைபெற்றது.
உலக வங்கியின் 2500 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்புடன் விவசாய அமைச்சின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் மூலம் சிறிய, நடுத்தர, பாரிய குளங்கள் புனரமைப்பு, பச்சை இல்லப் பொறிமுறையுடன் விவசாய, நீர்ப்பாசன வேலைகள் முன்னெடுத்தல், புதிய தொழிநுட்பத்தின் ஊடாக விவசாய தரவுகள் பேணப்பட்டு சிறப்பான விவசாய வேலைகளை முன்னெடுத்தல், கிரான்புல்சேனை அனைக்கட்டு வேலைத்திட்டம், முந்தையன் ஆறு வேலைத்திட்டங்களை மேம்படுத்தல் உட்பட பல விடயங்கள் ஆராயப்பட்டது.

இவ்வேலைத்திட்டத்தை  விவசாய அமைப்புக்கள் மூலம் தீர்மானிக்கப்பட்டு அதனை பிரதேச விவசாய குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு திட்டம் முன்மொழியப்பட வேண்டும். அதற்கு பிற்பாடு மாவட்ட விவசாய குழுக்கூட்டத்தில் முன்மொழியப்பட்டு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கிழக்கு மாகாண பிரதம செயலாளர் குறித்த திட்டத்திற்கான நிதியை விடுவித்து வேலைகளை சிறப்பாக மேற்கொள்ள முடியும்.

இக்கூட்டத்தில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய வேலைத்திட்டப் பணிப்பாளர் எந்திரி என்.சிவலிங்கம், பிரதிப்பணிப்பாளர் கலாநிதி ஆரியதாச, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, விவசாய, நீர்ப்பாசன, கமநல சேவைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.



SHARE

Author: verified_user

0 Comments: