15 May 2019

வீட்டு முன் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் நள்ளிரவில் எரிப்பு

SHARE
வீட்டு முன் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் நள்ளிரவில் எரிப்பு பல நாட்களுக்கு முன்னர் இருந்தே குறுஞ்செய்தியில் தனக்கு அச்சுறுத்தல் வந்தவண்ணமிருந்ததாக உரிமையாளர் தெரிவிப்பு.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலடங்கும் புகையிரத நிலைய வீதியை அண்டியுள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று பெற்றோல் குண்டு வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவைத் தாண்டிய சற்று நேரத்தில் புதன்கிழமை 15.05.2019  அதிகாலை 12.15 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அதன் உரிமையாளர் ஏ.எஸ்.எம். நௌஷ‪hத் (வயது 38) தெரிவித்தார்.‬

மூவரடங்கிய குழுவினர் வீட்டு மதிலால் ஏறிப் பாய்ந்து தனது காரிற்குள் பெற்றோல் குண்டை வெடிக்க வைத்து தீப்பற்ற வைத்து விட்டு தப்பியோடியதாகவும் அவர் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தினால் கார் முற்றாக எரிந்துள்ளதுடன் வீட்டிற்கும் பகுதியளவில் சேதமேற்பட்டுள்ளது.

இச்சம்பத்தைப் பற்றி பொலிஸ் அவசர தொடர்பு இலக்கமான 119 இற்கு அறிவிக்கப்பட்டதும் சம்பவம் நடைபெற்று சுமார் 1 மணித்தியாலத்தின் பின்னர் பொலிஸார் ஸ்தலத்திற்கு வந்து சேரந்தபோதும் ஏற்கெனவே கார் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிவித்த தீக்கிரையாக்கப்பட்ட காரின் உரிமையாளர் தனக்கு கடந்த மாதமிருந்தே கைப்பேசியில் எச்சரிக்கைக் குறுஞ்செய்திகள் வரத்துவங்கியதாகவும் இது பற்றி ஏப்ரில் 25ஆம் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததாகவும் தெரிவித்தார்.

கடைசியாக செவ்வாய்க்கிழமை மாலை 4.10 அளவிலும் எனது மனைவியைக் கொல்லப்போவதாக அச்சுறுத்தல் குறுஞ் செய்தி கைப்பேசிக்கு வந்திருந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும் ஏற்கெனவே தனது கார் இயங்க முடியாத வகையில் சில விஷமிகள் காரின் என்ஜின் பகுதிக்குள் சீனியைத் திணித்திருந்தது கண்டறியப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

சம்பவம் நடைபெற்ற ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகளும் படை அதிகாரிகளும் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.










SHARE

Author: verified_user

0 Comments: