10 Apr 2019

தவணைப் பரீட்சைகளில் பணம் சம்பாதிப்பதே குறியாகிப் போயிருப்பது வருத்தமளிக்கிறது கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம்.

SHARE
தவணைப் பரீட்சைகளில் பணம் சம்பாதிப்பதே குறியாகிப் போயிருப்பது வருத்தமளிக்கிறது கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம்.
தேசிய கல்வி மட்டத்தோடு ஒப்பிடுகையில் மிகவும் பின்னடைந்துள்ள கிழக்கு மாகாணம் அதன் கல்வி நடவடிக்கைகளிலன்றி தவணைப் பரீட்சைகளில் பணம் சம்பாதிப்பதையே குறியாகக் கொண்டு இயங்கி வருவது வருத்தமளிப்பதாக கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தின் சமகாலக் கல்வி நிலை தொடர்பாகவும் தவணைப் பரீட்சைகளில் நிலவும் குளறுபடிகள் சம்பந்தமாகவும் கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவக்கொழுந்து ஜெயராசா புதன்கிழமை 10.04.2019 வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'முன்னொரு காலத்தில் கல்வியில் கொடி கட்டிப் பறந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வித்தரம் வீழ்ச்சி அடைந்து வருவது கவலையளிக்கின்றது.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் 3 தசாப்த காலமாக ஒரு அசாதாரண சூழ் நிலைகளுக்குள் கட்டுண்டு கிடந்தன.

அக்காலப் பகுதியில் சட்டம் ஒழுங்கு நிருவாகம் என்பன சீர் குலைந்திருந்திருந்த போதிலும் சில அர்ப்பணிப்பான அணுகுமுறைகளைக் கடைப்பிடித்து வடக்கு கிழக்கின் கல்விச் செயற்பாடுகளை நகர்த்த வேண்டியிருந்தது.

அதேவளை, கல்வித் தரத்தைப் பேணுவதில் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் அக்கறையோடு இருந்ததாலும் அரசாங்கத்தின் கல்வி தொடர்பான சட்ட திட்டங்களை மதித்தொழுகியதாலும் கல்வித் தரத்தைக் கட்டிக் காக்க முடிந்தது.

ஆனால், சமீப சில ஆண்டுகளில் இந்த அர்ப்பணிப்பான கல்விச் சேவை தரம் தாழ்ந்து போயிருப்பதற்கு கல்விச் சேவை வியாபாரமாக மாறிவிட்டிருப்பது ஒரு பிரதான காரணமாகும்.

அதிலும் குறிப்பாக அரசாங்க சுற்றறிக்கைகளை மீறி தவணைப் பரீட்சைகளை பணம் சம்பாதிக்கும் ஒரு சந்தர்ப்பமாக மாற்றி விட்டிருக்கிறார்கள்.

இது எதிர்காலத்தை குழி தோண்டிப் புதைத்து விட்டதற்குச் சமனாகும்.
தமிழ்க் கல்வி வலயங்களிலும் பணம் சம்பாதிப்பதை மாத்திரம் குறியாகக் கொண்டியங்கும் இத்தகைய கல்விச் சீர்குலைவுகள் இருந்தபோதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் கல்வி வலயங்களில் இவ்வாண்டின் முதலாம் தவணைப் பரீட்சை அரசாங்க சுற்றறிக்கைகளையும் மீறி தான்தோன்றித் தனமாக நடாத்தப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.

இது தவறான முன்னுதாரணமாகும். இந்த முதலாம் தவணைப் பரீட்சையை தமது பணம் சம்பாதிக்கும் நோக்கத்தை மாத்திரம் குறியாகக் கொண்டு அதிகார மட்டத்திலுள்ளோர் அரசாங்க சுற்றறிக்கைகளை மீறி பல குளறுபடிகளைச் செய்து பரிட்சைகளைக் குழப்பியிருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.

மேலும், இந்தக் குளறுபடிகளுடனான பரீடசைகளால் பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோர் அதிக உளைச்சல்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

இத்தகைய தவறான முன்னுதாரணங்கள் எதிர்காலத்தில் நிகழா வண்ணம் தவறுகள் சீர் செய்யப்பட வேண்டும்.”


SHARE

Author: verified_user

0 Comments: