13 Mar 2019

பிரதமரின் கவனத்திற்கு மூன்று முக்கிய விடயங்களை முன்வைத்துள்ளேன் தேசிய பயிலுநர், கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவர் நஸீர் அஹமட்

SHARE
பிரதமரின் கவனத்திற்கு மூன்று முக்கிய விடயங்களை முன்வைத்துள்ளேன்
தேசிய பயிலுநர், கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவர் நஸீர் அஹமட்


பிரதமரின் கவனத்திற்கு மூன்று முக்கிய விடயங்களை முன்வைத்துள்ளதாக தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் National Apprentice and Industrial Training Authority (NAITA)  புதிய தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கட்டுநாயக்கவில் அமைந்துள்ள பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை 12.03.2019 நடைபெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே பயிலுநர்கள், அதிகாரிகள் மத்தியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ என்மீது நம்பிக்கை வைத்து தேசிய பயிலுநர், கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் தலைவராக என்னை நியமித்துள்ளார்.

அவரது எண்ணம் நிறைவேறும் வகையில் எனது பணிகளை நான் மேற்கொள்வேன்,

இது போன்ற பயன்தரும் பணிகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கியமைக்கு முதற்கண் எனது நன்றிகளைப் பிரதமருக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதேவேளை இந்த பதவியை நான் பொறுப்பேற்றுள்ள நிலையில் பிரதமரின் கவனத்துக்கு முக்கிய மூன்று விடயங்களை முன் வைத்திருக்கின்றேன்.

முதலாவது ஒரு லட்சம் தொழில்வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது என்ற திட்டம்.

இரண்டாவது நைற்றாவால் வழங்கப்படும் பயிற்சிகள் ஊடான சான்றிதழ்களைப் பெற்றவர்கள் அந்த சான்றிதழ்களை தம்வசம் வைத்துக் கொண்டு வெளிநாடுகளில் தொழில், மேலதிக கல்வி வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கான திட்டம்.

குறிப்பாக வெளிநாடுகளிலுள்ள தனியார் பல்கலைக்கழகங்களின் ஊடாக மேலதிக கல்வி வாய்ப்புகளையும் தொழில்களையும் பெறும் நிலைமைகளை உருவாக்குதல் முக்கியமானதாகும்.

மூன்றாவதாக இன்று ஆரம்பிக்கப்பட்ட கல்விநெறிகளுக்கு 1600 பேர் வரையில் விண்ணப்பித்துள்ளனர் எனினும் 450 பேருக்கே அனுமதிகளை வழங்க முடிந்துள்ளது.

விண்ணப்பித்த அனைவருக்கும் பயிற்சி நெறிகள் கிடைக்கும் வகையில் எதிர்காலத்தில் திட்டங்களை மேற்கொள்ளலாம் என்பது ஆகிய திட்டங்களை முன்மொழிந்துள்ளேன்.

இவை குறித்து கூடிய விரைவாக பிரதமரின் வழிநடத்தலில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன்” என்றார்.








SHARE

Author: verified_user

0 Comments: