31 Mar 2019

கோட்டைக்கல்லாற்றில் இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலி.7பேர் படுகாயம்.

SHARE
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கோட்டைக்கல்லாறு பிரதானவீதியில் இடம்பெற்ற வாகனத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் படுகாயமாடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் சனிக்கிழமை (30.3.2019) மாலை 7.30 மணியளவில் கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில்  இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தின்போது  துறைநீலாவணை 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 26 வயதுடைய யோகராசா கௌதமன்(றொபின்) சம்பவம் நடைபெற்ற இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் உயிரிழந்துள்ள இளைஞன் துறைநீலாவணை கிராமத்தில் உள்ள மத்திய விளையாட்டுக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினராகவும், கிரிக்கெட் அணித்தலைவருமாக இருந்து பிரதேசத்தில் நடைபெற்ற பல போட்டிகளில் பங்குபற்றியும்,விளையாட்டுக் கழகத்திற்காக தன்னை அர்ப்பணித்தவர் ஆவார். இவ் இளைஞன் சகல இளைஞர்களுடன் நட்பாகவும், அன்பாகவும் பழகக்கூடியவர். இவரது உயிரிழப்பு காரணமாக துறைநீலாவணை கிராமம் தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.  


இச்சம்பவம் பற்றி தெரியவருவது யாதெனில்;

துறைநீலாவணை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் காத்தான்குடிக்குச் சென்று  பொருட்களை எடுத்துக்கொண்டு மீண்டும் துறைநீலாவணை கிராமத்தை நோக்கி மட்டக்களப்பு-கல்முனை நெடுஞ்சாலை வழியாக வந்து கொண்டிருந்தனர்.

ஓந்தாச்சிமடத்திலிருந்து நான்கு (4 )இளைஞர்கள் காரில் பெரியகல்லாறு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சென்று எரிபொருளை நிரப்பச் சென்றுள்ளார்கள். எரிபொருள் நிரப்பிவிட்டு மீண்டும் ஓந்தாச்சிமடத்திற்கு பயணிக்கையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்தும், வந்த பாதையைவிட்டு வெளியேறியும், மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டும், மோட்டார்சைக்கிள் வீசப்பட்டும், பலமாக அடிக்கப்பட்டும் அருகாமையில் உள்ள வீட்டிக்குள் நுழைந்துள்ளது.

இவ்விபத்தில் மேலும் வீதியில் இருந்த 4 மரங்கள், வேலியில் உள்ள 4 கொங்கிறீட் தூண்கள், வேலியில் பொருத்தப்பட்ட 3 தகரங்கள் உடைந்து சேதமடைந்தும், வீட்டின் ஒரு பகுதி சிதைவடைந்தும், மோட்டார்சைக்கிள் உடைக்கப்பட்டும், கார் சேதமடைந்தும் காணப்படுகின்றது.

இக்காரினை செலுத்தி வந்த சாரதியை போக்குவரத்து பொலிசாரால் மீட்டு பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு மீண்டும் சிசிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள்.

இவ்விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த, காரில் பயணித்த மற்றும் பிரத்தியேக வகுப்புக்குச் சென்று துவிச்சக்கர வண்டியில் வந்துகொண்டிருந்த மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு படுகாயமடைந்த நபர்களில் 3 பேர்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிசிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இவ்விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இவ்விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த துறைநீலாவணை கிராமத்தைச் சேர்ந்த அ.சதீஸ்குமாரும்(வயது-34)காரில் சென்ற ஓந்தாச்சிமடத்தை சேர்ந்தவர்களான கார்ச்சாரதியான சி.ஆதித்தன்(வயது-18)மற்றும் சு.தனுஸ்காந்(வயது-20),கா.றிஷிவர்மா(வயது-17),வி.டிருஜன்(வயது-19)மற்றும் துவிச்சக்கரவண்டியில் வந்த கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த பி.சனத்(வயது-17),ச.நிதுசாந்(வயது-17)படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதேவேளை களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கோயிற்போரதீவில் சனிக்கிழமை (30) மாலை 7.40 மணியளவில்  மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளார்கள். கோயிற்போரதீவைச் சேர்ந்த எஸ்.சாஜகான்(வயது-16),அ.சபேசன்(வயது-24)ஆகியோர்களே படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் உள்ள பெரியகல்லாற்றில் சனிக்கிழமை(30) மாலை 7.00 மணியளவில்  மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு பெண் ஒருவர் படுகாயமடைந்து கல்முனை வைத்தியசாலையில் அவசர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை(31)காலை 9.00 மணியளவில்  கோயிற்போரதீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 60 வயதான முதியவர் படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிசிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது








SHARE

Author: verified_user

0 Comments: