17 Feb 2019

பட்டிருப்பு தொகுதி மக்களுக்கு கம்பரெலிய வேலைத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு புறக்கணிக்கப்பட்டால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வீதியில் இறங்கிப் போராடுவதற்கும் தயார்.

SHARE
பட்டிருப்பு தொகுதி மக்களுக்கு கம்பரெலிய வேலைத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு  புறக்கணிக்கப்பட்டால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வீதியில் இறங்கிப் போராடுவதற்கும் தயார்.
பட்டிருப்பு தொகுதி மக்களுக்கு கம்பரெலிய வேலைத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு  புறக்கணிக்கப்பட்டால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வீதியில் இறங்கிப் போராடுவதற்கும் தயார் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

கம்பரெலிய வேலைத்திட்டத்தின் பட்டிருப்பு தொகுதிக்கான நிதி ஒதுக்கீடு சம்பந்தமாகவும்,பொதுமக்களின் அபிவிருத்தி சம்பந்தமாகவும் ஞாயிற்றுக்கிழமை (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்….

பட்டிருப்பு தொகுதியானது தற்போது எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தெரிவு செய்யப்படாத தமிழ் தொகுதியாகவும், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் பார்வைக்கு தெரியாத தொகுதியாகவும் காணப்படுகின்றது.

இப்பிரதேச மக்களின் தேவைகள், அபிவிருத்திகள், குறைபாடுகள் உள்ளடக்கப்பட்ட கோரிக்கைகளை பிரதேச செயலாளர் ஊடாக முன்வைத்து செயற்படுத்துமாறு அரச சுற்று நிரூபம் குறிப்பிடுகின்றது. இருந்த போதிலும் ஆளும் தரப்புக்கு ஆதரவு தெரிவிக்கின்ற ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் 150 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில்; மட்டக்களப்பு மாவட்டத்தில் அவ்வாறு ஒதுக்கப்படும் நிதியில் 2 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், 2 சகோதர முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமாக 600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டால் 4 பாராளுமன்ற உறுப்பினர்களும் கம்பரெலிய வேலைத்திட்டத்தின் பட்டிருப்பு தொகுதியையும், தொகுதிமக்களையும் மறந்து தத்தமது தொகுதிக்கே நிதி ஒதுக்கீடு செய்து அபிவிருத்தியை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இவ்வாறான நிலையில் கம்பரெலிய வேலைத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு பட்டிருப்பு தொகுதிக்கு மறுக்கப்பட்டால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வீதிக்கு பொதுமக்களை இறக்கிப் போராடும் நிலையேற்படும். மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, கல்குடா, பட்டிருப்பு தொகுதிகள் என மூன்று இருந்தும் பட்டிருப்பு தொகுதி தவிர்ந்த ஏனைய தொகுதியில்தான் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.

இம்மூன்று தொகுதிகளுக்குமாக 900 மில்லியன் ரூபா அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டால் பட்டிருப்பு தொகுதியையும், தொகுதி மக்களையும் 4 பாராளுமன்ற உறுப்பினர்களும் படுமோசமாக புறக்கணிப்பார்கள் என்பதில் எந்தகருத்துக்கும் இடமில்லை. 80 வீதம் தமிழ்சமூகம் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 960 கிராமங்கள் காணப்படுகின்றது. ஒவ்வொரு கிராமமக்களின் தேவைகளையும், அபிவிருத்தியையும் செய்வதற்கு அரசாங்கம் ஒதுக்கப்படும் நிதியினால் பட்டிருப்பு தொகுதி புறக்கணிக்பட்டு வருகின்றது.

பட்டிருப்பு தொகுதியில் உள்ள களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, பட்டிப்பளை போன்ற பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறுமைப்பட்ட பொதுமக்கள் கடந்த யுத்தத்தினால் பாரிய அழிவுகளை சந்தித்தமக்கள் என்பது எல்லோரும் அறிந்த உண்மையாகும். கடந்த வருடம் கம்பரெலிய வேலைத்திட்டத்தில் பட்டிருப்பு தொகுதிக்கு மிகக்குறைந்த நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏறாவூர் நகர்பகுதிக்கு 78 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு வேலைத்திட்டம் செய்யப்பட்டது. ஆனால் 16 மில்லியன் மட்டுமே போரதீவுப்பற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது பட்டிருப்பு தொகுதி மக்களுக்கு செய்த வெறும் கண்துடைப்பாகும். இவ்விடயம் நால்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு அயராது உழைத்த அரசியல்வாதிகளின் பார்வைக்கு இதுவரையும் புலப்படவில்லை.
சிறுபான்மையின மக்களின் வாக்குகளால் தெரிவான ஜனாதிபதியும், அவரது ஆட்சிக்கு கைகோர்த்து நிற்கும் அரசியல்வாதிகளும், பட்டிருப்பு தொகுதி மக்களுக்கு சமத்துவமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும். அவ்வாறு நிதிகள் குறைவாக கிடைக்கும் பட்சத்தில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பொதுமக்களை வீதிகளுக்கு இறக்கி மக்களோடு மக்களாக போராட்டத்தில் குதிப்தற்கு தயார் எனத்தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: