17 Feb 2019

மாவட்டத்தின் தேவை அறிந்து அரச சார்பற்ற நிறுவனங்கள் திட்டங்களை தயாரிக்க வேண்டும் - மட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள் நிதி வழங்குனர்களின் நோக்கம் அறிவுறுத்தல்களுக்கப்பால் மாவட்டத்தின் தேவைகள், பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதற்கேற்ப திட்டங்களை இனங்கண்டு நடைமுறைப்படுத்தலும் முக்கியமாகும் என மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (16) நடைபெற்ற மாவட்டத்தில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களின் 2019 ஆம் ஆண்டுக்கான செயற்திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்,
மட்டக்களப்பு மாவட்டமானது பல்வேறு தேவைகளைக் கொண்ட பல பிரதேசங்களை உள்ளடக்கியதாகும். பிரதேசங்களுக்கு ஏற்றால் போல் திட்டங்களை அடையாளம் கண்டு நடைமுறைப்படுத்துவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் தயாராக வேண்டும். ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட பிரதேசங்களில் மேலும் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் தவிர்க்கப்பட வேண்டும்.

குறித்த பிரதேசத்தில் இரண்டு மூன்று அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுதல் தவிர்க்கப்படல் வேண்டும்.

அதே நேரத்தில் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது அதன் நிறைவில் அடைவு மட்டம் சிறப்பானதாக இருப்பது கட்டாயமாகும். அதனை இலக்காகக் கொண்டு நிறுவனங்கள் செயற்படுவது முக்கியமாகும் என்றும் தெரிவித்தார்.

இதன் போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் செயற்படும் நிறுவனங்கள் தங்களது செயற்திட்ட அறிக்கைகளை தனித்தனியாக ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் வழங்க வேண்டும், பிரதேச செயலகங்களில் மாதாந்தம் நடைபெறும் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்கள், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான கூட்டங்களில் கட்டாயமாகக் கலந்து கொள்ள வேண்டும் எனவும் மாதாந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இக் கூட்டத்தின் போது, அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்திட்டங்கள் குறித்து  ஆராயப்பட்டதுடன், விளக்கங்கள் வழங்கப்பட்டு குறைபாடுகளை நிவர்த்திக்கும் வகையிலான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

உதவி மாவட்டச் செயலாளர் அ.நவேஸ்வரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச சார்பறற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, வவுணதீவு அபிவிருத்தி நிறுவனம், கரித்தாஸ் - எகெட், இளைஞர் அபிவிருத்தி அகம், இலங்கை சமூக முயற்சிகள், சிறுவர் அபிவிருத்தி நிதியம், சோஆ, செட்ஸ், சீரி, காவியா - பெண்கள் அபிவிருத்தி நிலையம், வை.எம்.சீ.ஏ., வேல்ட் விசன் லங்கா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது 2019ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்து விளக்கங்களை முன்வைத்தன.








SHARE

Author: verified_user

0 Comments: