27 Jan 2019

கிழக்கின் கல்வி வளர்ச்சிப்போக்கானது வீழ்ச்சியடைந்துள்ளதை மாணவர்களோ அல்லது பெற்றோர்களோ இதுவரையும் சிந்திக்கவில்லை

SHARE
(விஜய்)

கிழக்கின் கல்வி வளர்ச்சிப்போக்கானது வீழ்ச்சியடைந்துள்ளதை மாணவர்களோ அல்லது பெற்றோர்களோ இதுவரையும் சிந்திக்கவில்லை. கல்வியை தமிழர்கள் விருப்புடன் கற்றால்தான் தமிழர்களின் இருப்பை கிழக்கில் தொடர்ச்சியாக காப்பாற்றிக்கொள்ளலாம் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியானது வியாழக்கிழமை (24) பிற்பகல் 2.30 மணியளவில் கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் அதிபர் திருமதி. பிரபாகரி இராஜகோபாலசிங்கம் தலைமையில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராசா சரவணபவனும்,கௌரவ  அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் வே.மயில்வாகனமும், விசேட அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் வீ.லவக்குமார் மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர் க.அருட்பிரகாசம், கல்லடி பேச்சியம்மன் சித்திவிநாயகர் ஆலய முகாமையாளர் நவசிவாயம் ஹரிதாஸ்,பிரதி அதிபர்களான வீ.அமிர்தலிங்கம், திருமதி.பவளசாந்தி பிறேமகுமார், உதவி அதிபர் திருமதி.சாந்தி சிவலிங்கம்,ஆசிரியர்களான திருமதி.நித்தியகலா சிவநாதன்,திருமதி.வசந்தா குமாரசாமி,திருமதி.சுசாந்தினி சிவநாதன்,திருமதி.டிலாணி ராஜ்குமார், ரீ.அருள்தாசன், கே.சரவணபவன், திருமதி.ரீ.ராஜதுரை, திருமதி.ஜெயலட்சுமி நரேந்திரன்,சீ.டீ.குணநாதன்,உட்பட ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள்,  மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.

அவர் தொடர்ந்து பேசுகையில்…. கடந்த வருடம் (2018) மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து க.பொ.த உயர்தர பரீட்சைக்கு 20,000 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்கள். இவர்களில் அண்ணளவாக 9,000 பேர் மட்டுமே மூன்று பாடச்சித்திகளை பெற்றிருந்தார்கள். கிட்டத்தட்ட 11,000 பேர் எதிர்பார்ப்பற்றதாக சித்தியடையவில்லை. இவர்களில் 2000 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் முழுமையாக சித்தியடையவில்லை. இவ்வாறு சித்தியடையவில்லை என்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழர்களுக்கு பாரியதொரு இழப்பாகும். இதனை ஒவ்வொரு மாணவர்களும், பெற்றோர்களும் உணர்ந்து படித்தால்தான் கிழக்குத் தமிழர்களின் இருப்பை தொடர்ச்சியாக பாதுகாக்க முடியும். கல்வியில் தமிழர்கள் சாதித்த வரலாறுகள் உண்டு. அது தற்போது பல கிலோமீற்றருக்கு அப்பால் காணப்படுவது மனவேதனையைத் தருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் கல்வியில் சாதிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கவேண்டும். பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பினால் மட்டும் போதாது.அவர்கள் சரியாக பாடசாலைக்கு போகின்றார்களா அல்லது பெற்றோர்களை ஏமாற்றுகின்றார்களா என பெற்றோர்கள் உத்வேகத்துடன் சிந்திக்க வேண்டும்.

இன்று பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் கையடக்கதொலைபேசி, சினிமா, உள்ளிட்ட தகவல் தொழிநுட்ப யுகத்திற்குள் மூழ்கிக்கொண்டு மீளமுடியாமல் தத்தளிக்கின்றார்கள். இதனால் மாணவர்களின் கல்வி வளர்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளது. இதனை உணராத பெற்றோர்களும் சமூகத்தில் இருக்கின்றார்கள். எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை கல்வியில் வலுவூட்ட வேண்டும். இக்கல்லூரியானது கடந்த ஆறு வருடங்களாக விளையாட்டில் சாதித்துள்ளார்கள்.இதனை தொடர்ச்சியாக வலுப்படுத்த வேண்டும்.விளையாட்டுத்துறை ஊக்குவிக்கப்படவேண்டும். எமது மாநகரசபை விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றது. எமது பிரதேசத்தில் நீச்சல் தாடக வீரர்களை உருவாக்கும் பொருட்டு மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் இலவசமாக நீச்சல் பயிற்சியைப்பெற திங்கள், செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் பிற்பகல் 4மணி தொடக்கம் 6மணி வரையுள்ள காலப்பகுதியில் அனுமதித்துள்ளது. இதனையும் பிரதேசத்தில் உள்ளவர்கள் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: