10 Jan 2019

மழை பெய்யாவிட்டால் மானாவாரி நெற்செய்கை கருகும் நிலை ஏற்படும் - விவசாயிகள் கவலை கட்டுமுறிவுகுளம் விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம்

SHARE
மழை பெய்யாவிட்டால் மானாவாரி நெற்செய்கை கருகும் நிலை ஏற்படும் - விவசாயிகள் கவலை
கட்டுமுறிவுகுளம் விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம்
இம்முறை மாரிகால பருவ மழை போதியளவு பெய்யாத காரணத்தினால் மானாவாரி எனப்படும் வான் மழையை நம்பிய நெற்செய்கையும் ஏனைய உப உணவுப் பயிர்ச் செய்கைகளும் கருகிப் போகக் கூடிய நிலைமை இருப்பதாக மட்டக்களப்பு மானாவாரி விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு கட்டுமுறிவுகுளம் விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம் வியாழக்கிழை 10.01.2019 இது தொடர்பாக மேலும் கூறியதாவது, இம்முறை மாரிகால பருவமழை போதியளவாகப் பெய்யவில்லை.

பருவ மழை போதியளவு இல்லாமல் பொய்த்துப் போனதால் பாசன வசதியின்றி வான் மழையை மாத்திரம் நம்பி எதிர்பார்த்துச் செய்கை பண்ணப்பட்ட பல நூற்றுக் கணக்கான ஏக்கர் மானாவாரி நெற் செய்கையும், ஏனைய மேட்டு நில சேனைப் பயிர்ச் செய்கைகளும் கருகிப் போகும் நிலையை எதிர்கொண்டுள்ளன.

அடுத்து வரும் ஓரிரு தினங்களுக்குள்ளாக மழை பெய்யாவிட்டால் நெற் கதிர்கள் வெளியிவந்த நிலையில் உள்ள வயல்கள் வாடி மடிந்துவிடும் சாத்தியம் உள்ளது.

அவ்வாறு இடம்பெறுமாயின் ஏழை நெற் செய்கை விவசாயிகளுக்கும் சிறு பயிர்ச் செய்கையாளர்களுக்கும், சேனைப் பயிர்ச் செய்கையாளர்களுக்கும் அது பெருத்த இழப்பையும் மனச் சோர்வையும் ஏற்படுத்தும்” என்றார்.

கடந்த சுமார் இரு வாரங்களுக்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை பெய்யவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, குளங்களின் நீரைப் பெறக் கூடியதாக உள்ள கீழ் நில பாசனப் பிரதேசங்களில் நெற்செய்கை சுமாரான வளர்ச்சியுடன் அறுவடைக்குத் தயாராவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறிருக்க, 90 நாட்களில் அறுவடை செய்யக் கூடிய நெல்லினங்களைப் பயிரிட்ட விவசாயிகள் ஏற்கெனவே அறுவடையைத் துவங்கி விட்டதாக மட்டக்களப்பு மத்தி விவசாய வலய உதவிப் பணிப்பாளர் எஸ்.எம். சலீம் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: