20 Jan 2019

புதிய போக்குவரத்துச் சேவை ஆரம்பம்

SHARE
புதிய போக்குவரத்துச் சேவை ஆரம்பம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள எல்லைக் கிராமமான நவகிரிநகர் பிரதேச மக்களின் நன்மை கருதி  போக்குவரத்துச் சேவை  சனிக்கிழமை 19.01.2019 ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடந்த கால யுத்த நிலைமைகளின்போது இடம்பெயர்ந்திருந்த இப்பகுதி மக்கள் கடந்த சில வருடங்களில் மீளக் குடியமத்தப்பட்டுள்ளனர்.

எனினும் தமக்கு போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினால் தாம் பல அசசௌகரியங்களையும் நேர விரயத்தையும் பொருளாதார இழப்புக்களையம் சந்தித்து வருவதாக அதிகாரிகளிடம் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.

கடந்த காலங்களில் இப் பிரதேச மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளிலும் உழவு இயந்திரங்களிலும்  பாடசாலைக்கு ஐந்து கிலோ மீற்றர் தூரம் வரை சென்று  கல்வி கற்று வந்தனர், மேலும் பாலையடிவட்டை, நவகிரிநகர் பிரதேச மக்கள் தமது அன்றாட தேவைகளுக்காக சுமார் 25 கிலோமீட்டர் தூரம் வரை பேருந்து வசதியில்லாமல் போக்குவரத்து செய்து வந்த நிலையிலே தற்போது இந்த பேரூந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையானது அவர்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

பிரதேச மக்களின் வேண்டுகோளைக் கருத்திற்கொண்டு  முன்னாள் பிரதி அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தியினால் இலங்கை போக்குவரத்துச் சபையிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இலங்கை போக்குவரத்துச் சபை இப் பேருந்துச் சேவையினை ஆரம்பித்துள்ளது.

புதிய பஸ் சேவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் சோமசுந்தரம் கணேசமூர்த்தி, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி, இலங்கை போக்குவரத்துச் சபையின் கிழக்கு பிராந்திய முகாமையாளர் ஆர்.எம்.டீ. விஜிதகமசேன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இப்புதிய பஸ் சேவை களுவாஞ்சிகுடியிலிருந்து வெல்லாவெளி, பாலையடிவட்டை ஊடாக நவகிரி நகர்வரை இடம்பெறவுள்ளது என இலங்கை போக்குவரத்துச் சபையின் கிழக்கு பிராந்திய முகாமையாளர் விஜிதகமசேன தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: