25 Dec 2018

நாட்டை மீட்டெடுக்கும் தூரநோக்கு சிந்தனையாளர்கள் அனைத்து சமூகங்களிலிருந்தும் உருவாக வேண்டும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட்

SHARE
அரசியல் அழுக்கு நிறைந்த குட்டையில் ஊறிய மட்டைகளாக அன்றி சிறந்த தூரநோக்கும் மனிதநேயமும் நாகரிகமும் அறிவாற்றலும் நிறைந்த அரசியல்வாதிகள் அனைத்து சமூகங்களிலுமிருந்தும் உருவாக வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் முன்னாலுள்ள பணிகள் குறித்த கரிசனையை அறிக்கையொன்றின் மூலம் அவர் வெளியிட்டுள்ளார்.

செவ்வாயக்கிழமை 25.12.2018 வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை சுதந்திரமடைந்ததாகக் கூறப்பட்டதன்  பின்னர் ஒட்டுமொத்த நாட்டையும் பற்றிச் சிந்திக்காது இனவாதத்தால் தூண்டப்பட்ட அரசியல்வாதிகள் விதைத்து விட்டுச் சென்ற நச்சுக் கனிகளை நாடு இப்பொழுதும் அறுவடை செய்து கொண்டிருக்கின்றது. ஆனால், அந்த அரசியல் தலைமைகள் இப்பொழுது இல்லாவிட்டாலும் அதன் எச்ச சொச்சங்கள் பாலுக்குள் விசம் கலந்தாற்போல பரவியிருக்கிறது.

இழிவான சிந்தனைகளைக் கொண்டு உருவாக்கிய அரசியல் வழிநடத்தல்கள் இன்றளவும் நாட்டைச் சீரிழித்துக் கொண்டே இருக்கின்றது.

எப்பாடுபட்டாவது இந்த அழிவுசார் நிலைமையை மாற்றியமைக்க வேண்டும்.
அதற்குள்ள ஒரே வழி, பாரம்பரிய இழிநிலை அரசியல் சிந்தனைகளை அகற்றி விட்டு புதிய நோக்கு, பதிய பாதை என்பனவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அனைத்து சமூகங்களிலிருந்து அடுத்த சமூகத்தை அரவணைத்துச் செல்லும் இழிநிலை இனவாதமற்ற அரசியல் தலைமைகள் இளந் தலைமுறையிலிருந்து உருவாக வேண்டும்.

இவ்வாறான அரசியல் தலைமைகளை வளர்த்தெடுப்பது இந்த நாட்டில் வாழும் ஒட்டு மொத்த அனைத்து சமூகங்களினதும் கடமைப்பாடாகும்.

ஆளும் அரசு எந்த இனம், அமைச்சர் எந்த இனம், அதிகாரி எந்த இனம் என்று துருவிப் பார்க்கும் நடைமுறை நிலைமைகள் மாறி அனைத்து சமூகங்களையும் அரவணைத்துச் செல்லும் தகுதியான அரசு, தகுதியான அமைச்சர், தகுதியான அதிகாரியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டுமாயின் முதலில் அத்தகைய சிறந்த இளந் தலைவர்களை அனைத்து சமூகங்களும் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு இடம்பெறுமாக இருந்தாலேயொழிய வேறு வழியில் இந்த நாட்டை ஓரணியில் மீட்டெடுக்கவே முடியாமற் போகும்.

இனவாதத்தின் காரணமாக ஈடு செய்ய முடியாத இழப்புக்களைச் சந்தித்த இந்த நாடு, யுத்தம் ஓய்ந்த பின்னரும், இன்னமும் இங்கு வாழும் அனைத்து சமூகங்களினதும் மனங்களை வென்றெடுக்கவில்லை.

எனவே, கடந்த கால கசப்பான அனுபவங்களிலிருந்து படிப்பினை பெறாவிட்டால் இந்த நாட்டின் எதிர்காலமும் இருளடைந்ததாகவே இருக்கும் என்பது உறுதி.

இனவாதம் பேசும் அரசு, அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு இந்த நாட்டின் தூரநோக்கு சிந்தனையுள்ள அனைத்து சமூகத்தினரும் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

இதுவே எதிர்கால இலங்கையின் சுபீட்சத்துக்கு வழிவகுக்கும். தற்போதைய புதிய அரசும் நாட்டுக் தேவையான கூட்டுப் பொறுப்பைக் கொண்டு வருவதில் சவால்களை எதிர்நோக்கவே செய்யும். ஏனென்றால் தெளிவான அரசியல் சிந்தனைகள் தற்போதைய அரசின் சமகால அரசியல்வாதிகளில் பெரும்பாலானோரிடம் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: