17 Dec 2018

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பிள்ளை உளநலம் தொடர்பான நட்புதவியாளர் செயலமர்வானது

SHARE

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பிள்ளை உளநலம் தொடர்பான நட்புதவியாளர் செயலமர்வானது'சிடாஸ் ஸ்ரீலங்கா-கனடா' நிறுவனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் குறிஞ்சாமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.


முன்பள்ளி ஆசிரியர்களின் உளநலம் தொடர்பான வாண்மை விருத்தியை மேம்படுத்தும் பொருட்டும், பிள்ளைகளின் முன்பிள்ளைப்பருவ விருத்திக்கு உதவும் நோக்கிலும்,இச்செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டு தொடர்ச்சியாக ஆறு நாட்கள் இடம்பெற்றது.
இச்செயலமர்விற்கு வளவாளர்களாக முதன்மை உளவளத்துணையாளரும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளருமான எம்.புவிராஜா,முதன்மை உளவளத்துணையாளர் .ரவிச்சந்திரன் ஆகியோர் பணியாற்றியிருந்தனர்.

இதன்போது எம்மைப் புரிந்து கொள்வோம், ஆரோக்கியம், உளநெருக்கீடு, ஆளுமை, ஆரோக்கியமான குடும்பம், உதவி தேவைப்படுவோரை இனங்காணுதல், உதவி தேவைப்படுவோர்க்கு உதவுதல், சாந்தவழி பயிற்சி, கோபத்தைக் கையாளுதல், முரண்பாடு தீர்த்தல், துஷ்பிரயோகத்திலிருந்து பிள்ளைகளைப் பாதுகாத்தல், போதைப்பொருள் பாவனைக் குறைப்பு அல்லது ஒழிப்பு போன்ற விடயங்கள் செயன்முறையாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது.

பிள்ளை உளநலம் தொடர்பான நட்புதவியாளர் செயலமர்வை வெற்றிகரமாக நிறைவு செய்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் இறுதி வைபவம் சனிக்கிழமை(15) நடைபெற்றது.

இவ் வைபவத்தில் மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம்,முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.கணேஸ், ,உதவிக் கல்விப் பணிப்பாளர் ஞா.சிறிதரன், 'சிடாஸ் ஸ்ரீலங்கா' அமைப்பின் செயலாளரும் ஓய்வுநிலை கோட்டக் கல்வி அதிகாரியுமான .சுகுமாரன், அமைப்பின் பொருளாளரும் ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகருமான திரு.ஜெ.சகாயநாதன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.


SHARE

Author: verified_user

0 Comments: