17 Dec 2018

நாடு உருப்பட வேண்டுமாயின் மக்கள் ஜனநாயகப் பாதையைத் தெரிவு செய்ய வேண்டும் அரச கொள்கை ஆய்வாளரும் அபிவிருத்தித்துறை மதியுரைஞருமான ஆர். பாலகிருஷ்ணன்

SHARE
நாடு உருப்பட வேண்டுமாயின் மக்கள் ஜனநாயகப் பாதையைத் தெரிவு செய்ய வேண்டும் அரச கொள்கை ஆய்வாளரும் அபிவிருத்தித்துறை மதியுரைஞருமான ஆர். பாலகிருஷ்ணன் நாடு உருப்பட வேண்டுமாயின் மக்கள் ஜனநாயகப் பாதையைத் தெரிவு செய்ய வேண்டும் என அரச கொள்கை ஆய்வாளரும் அபிவிருத்தித்துறை மதியுரைஞருமான ஆர். பாலகிருஷ்ணன்  தெரிவித்தார்.
தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவை மற்றும் மாவட்ட சிவில் சமூக ஒன்றியம் ஆகியவற்றினால் ஒழுங்கு செய்யப்பட்ட “ஜனநாயகத்தைப் பாதுகாப்பது மக்களின் கடமைப்பாடாகும்”எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கும் கலந்துரையாடலும் மட்டக்களப்பு கூட்டுறவுக் கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை 16.12.2018 இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையின் மாவட்ட இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் மாவட்டத்திலுள்ள அரசியல் ஆர்வலர்கள். அரசியல்வாதிகள், சர்வமத சமாதான செயற்பாட்டாளர்கள், தேசிய சமாதானப் பேரவையின் திட்ட அலுவலர் கிங்ஸ்லி ராஜசிங்கம்,  உட்பட பலர் கலந்து ஆகியோர் கொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆர். பாலகிருஷ்ணன். கடந்த   70 வருட கால இலங்கையின் ஜனநாயக ஆட்சிப் பொறுப்பின் பின்பும் இன்னமும் ஜனநாயகத்தைப் பற்றியே பேசி வலியுறுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில்தான்  இலங்கையின் ஜனநாயக பிரஜைகள் இருக்கின்றார்கள்.

நானும் கிட்டத்தட்ட கடந்த 40 வருடங்களாக பல்வேறு பரப்புக்களிலே ஜனநாயகம், நல்லாட்சி, அபிவிருத்தி பற்றி ஆய்வு செய்து, எழுதி, பேசி வருகின்றேன்.

30 வருடங்களுக்கு முன்னரே நல்லாட்சி பற்றி ஒரு புத்தகத்தை எழுதி இந்த நாட்டின் அரசியல் வாதிகள், பிரஜைகள், வாக்காளர்கள் மாணவர்களுக்கு நல்லாட்சி பற்றிய புரிதலை உண்டாக்க கலந்துரையாடலை ஏற்பாடு செய்து வந்துள்ளேன்.

இன்னும் அந்த தலைப்பில்தான் செயற்பட வேண்டியுள்ளது என்பது ஒரு நெகிழ்ச்சியான விசயம்தான்.

ஜனநாயகம் என்றால் என்ன என்பதுதான் இன்றும் மக்களுக்கு முன்னாலுள்ள புரியாத புதிராக இருந்துகொண்டிருக்கின்றது.

கடந்த இரண்டு மாத காலமாக அரசியல் யாப்பு என்றால் என்ன என்று தெரியாத நிலையில் நாடும்  தடுமாறிக் கொண்டிருக்கின்றது.

அதேவேளை இந்த நாட்டு மக்கள் தான் சார்ந்த அரசியல் அணி, இனம், ஆகியவற்றை வேதமாக எடுத்துக் கொண்டு அந்த அணி என்ன சுலோகங்களைக் கொடுக்கின்றதோ அதனை அரசியல் மந்திரமாக உச்சரித்துக் கொண்டு சரி பிழைக்கு அப்பால் அணிவகுத்துச் செல்வதைத்தான் காணக் கூடியதாகவுள்ளது.

இது தவறு இது சரி என்று நின்று நிதானித்து செயற்படுவதற்குரிய ஜனநாயகப் பண்பை இழந்து பண்பாடற்ற அரசியலை வளர்த்துக் கொண்டு அதன் மூலம் அழிவுப் பாதையைத் தெரிவு செய்வதிலேயேதான் ஆர்வம் காட்டுபவர்களாக நாட்டு மக்களில் பெரும்பாலானோர் காணப்படுகின்றார்கள்.

கடந்த கால அழிவு தரும் ஜனநாயகமற்ற அரசியல் அசிங்கங்களை  சாக்கடையில் வீசி எறிந்து விட்டு சுதந்திரமான நாகரீகமான ஐக்கியமான பண்பாடுள்ள ஜனநாயக மக்கள் இயக்கம் கட்டி எழுப்பப் படவேண்டும் என்பதில் இயங்குபவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலான சொற்பமானவர்களாகவே இருக்கின்றார்கள்.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் தளம்பல் கடந்த ஒக்ரோபெர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல.

ஜனநாயகம் என்றால் என்னவென்று தெரியாமலிருந்த வேளையில் அதிகாரத்திற்கு மண்டியிடுகின்ற, அதிகாரவாத கருத்தியலோடு ஒன்று சேர்ந்த, நிலப் பிரபுத்துவ கால கட்டத்தில் வாழ்ந்த எங்களுக்கு 1948ஆம் ஆண்டு பெப்பரவரி 04ஆம் திகதி ஜனநாயகம் என்ற போர்வையில் “சுதந்திரம்” என்று மற்றொரு வகையான அதிகாரம் திணிக்கப்பட்டது.

இதன் விளைவுதான் இந்த நாட்டிலே 70 வருடங்களாகச் செயற்படுகின்ற எந்தவொரு அரசியல் கட்சியும் இன்று வரை உள்ளக ஜனநாயகத்தை மதித்து செயற்பட முடியவில்லை.

தமிழர்களுடைய, சிங்களவர்களுடைய, முஸ்லிம்களுடைய எந்தக் கட்சியாக இருந்தாலும் தாங்கள் நினைப்பதை மக்கள் மீது அதிகாரத்தைச் செலுத்தித் திணிப்பதுதான் ஜனாநயகமாக விளங்கிக் கொண்டு செயற்பட்டு வருகின்றன.

எனவேதான் கடந்த கால சாக்கடை அரசியல் வழிகாட்டல்களை துக்கி வீசி விட்டு அனைத்து சமூகங்களும்  ஓரணியில் திரண்டு ஜனநாயகத்துக்காக பாடுபட வேண்டும். அப்பொழுதுதான் இந்த நாடு உருப்படும்” என்றார்.



SHARE

Author: verified_user

0 Comments: