11 Dec 2018

ஒரு பயன் தரும் மரம் வெட்டும் போது பத்து மரங்களை நட வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை பேண வேண்டும் - நியூ ஒலிம்பிக் கழக தலைவர் ந.புருஷோத்மன்

SHARE
ஒரு பயன் தரும் மரம் வெட்டும் போது பத்து மரங்களை நட வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை பேண வேண்டும் - நியூ ஒலிம்பிக் கழக தலைவர் ந.புருஷோத்மன்.
ஒரு பயன் தரும் மரம் வெட்டும் போது பத்து மரங்களை நாம் நட வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை நாம் எமக்குள்ளே பேண வேண்டும். எதிர் காலத்தில் இத் திட்ட கொள்கை நாடு பூராகவும் உள்வாங்கபட வேண்டும் என களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் கழகத் தலைவர் ந.புருஷோத்மன் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் சிரஞ்சீவி சுகாதாரப் பிரிவின் ஏற்பாட்டில் மாபெரும் மர நடுகைத் திட்டம் கழகத் தலைவர் ந.புருஷோத்மன் தலைமையில் திங்கட்கிழமை (10) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

மனிதர்கள் இல்லாமல் மரங்கள் வாழ முடியும் ஆனால் மரங்கள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது “மரம் மண்ணின் வரம்" அந்த மரங்கள் வீசுகின்ற காற்றினை நாம் சுவாசிக்கின்ற நம் மூச்சாக மாற்றித் தருகின்றன அந்தளவுக்கு அளப்பரிய பணியினை இந்த மரங்கள் செய்கின்றன. குறிப்பாக வீதியால் செல்கின்ற ஒரு வாகனம் வெளியிடுகின்ற நச்சு வாயுவினை சுத்தப்படுத்துவதற்கு ஆறு மரங்கள் தேவைப்படுவதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. அந்தளவு மிகவும் பெறுமதியான கொடையாக இறைவன் இந்த மரங்களை எமக்காக படைத்திருக்கிறான்.

உண்ண கனி, உடலுக்கு மருந்து, தடவ தைலம், தாளிக்க எண்ணெய், அடைக்க கதவு, அணிய ஆடை, எழுத காகிதம், எரிக்க விறகு இவ்வாறாக ஒட்டு மொத்ததில் எல்லாம் மரமாகத் தான் காணப்படுகின்றது ஆனால் அதனை மறந்து மனிதர்கள் செயற்படுகின்றனர் என குறிப்பிட்டார்.

“வீட்டுக் ஒரு மரம்” எனும் செயற் திட்டத்தின் மூலம் களுவாஞ்சிகுடி பூராகவும் 3000 பயன்தரு மற்றும் நிழல் தரும் மரங்கள் நடும் நிகழ்வின் முதற்கட்டம் திங்கட்கிழமை களுவாஞ்சிகுடி மாணிக்க பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் ஆலயங்கள் மற்றும் களுவாஞ்சிகுடி வடக்கு -1 கிராம சேவகர் பிரிவிலுள்ள 200 குடும்பங்களுக்கு இன்றைய தினம் மரக் கன்றுகள் வழங்கி கன்றுகள் நடப்பட்டு வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் களுவாஞ்சிகுடி நகரத் தலைவர் அ.கந்தவேள், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ச.சசிகுமார் குருமன்வெளி சிவசக்தி மகா வித்தியாலய அதிபர் க.சத்தியமோகன் களுவாஞ்சிகுடி பட்டிருப்பு தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் நா.நாகேந்திரன் களுவாஞ்சிகுடி ஆலயங்களின் பரிபாலன சபை நிர்வாகத்தினர் மற்றும் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. 




SHARE

Author: verified_user

0 Comments: