10 Dec 2018

ஆர்ப்பாட்டம்

SHARE
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்தும் எதிர் காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறக் கூடாது என்பதை வலியுறுத்தியும் சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையார் ஆலய முன்றலில் ஞாயிற்றுக்கிழமை (09.12.2018) ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஏற்பாட்டில் கல்குடா தொகுதி அமைப்பாளர் டி.எம். சந்திரபால தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி உறுப்பினர்கள், பெண்கள் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

“ஆயுதக் கலாசாரத்தை ஒழிப்போம், யுத்தம் இல்லாத பூமி வேண்டும், ஒற்றுமையாம் வாழ்வோம், யுத்தம் அற்ற தேசத்தை உருவாக்குவோம், சமத்துவமாய் வாழ்வோம், பொலிஸ் எங்களைப் பாதுகாக்கிறது அவர்களை நாம் பாதுகாப்போம், அந்நிய சக்திகளை இல்லாதொழிப்போம், பயங்கரவாதம் வேண்டாம், பயங்கரவாதத்தினை இல்லாதொழித்து நல்லுறவைப் பேணுவோம், இன நல்லுறவைக் காப்போம், மீண்டும் பயங்கரவாதம் வேண்டாம்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்ட முடிவில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஏறாவூர்ப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயசுந்தரவிடம்  கையளித்தனர்.

கல்குடா தொகுதி அமைப்பாளர் டி.எம்.சந்திரபால கருத்து தெரிவிக்கையில் -  மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகம் காணப்படுகிறார்கள். அதிகமான விதவைகள் உள்ளார்கள் மீண்டுமொரு யுத்த சூழல் ஏற்பட்டு விதவைகளின் எண்ணிக்கை அதிகரிக்க இடமளிக்க கூடாது.

தமிழ் முஸ்லிம் சிங்களம் ஆகிய மூன்று சமூகங்களும் இணைந்து  பொலிஸாருக்கு உதவி செய்ய வேண்டும். சில தீய சக்திகள் தமது தேவைகளுக்காக மீண்டும் யத்த சூழலை உருவாக்குவதற்கு முயற்சிக்கிறார்கள் அதனை எமது மக்கள் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்” என்றார்.

கடந்த 30ஆம் திகதி அதிகாலை இந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் குத்தியும், வெட்டியும், துப்பாக்கியால் சுடப்பட்டும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.







SHARE

Author: verified_user

0 Comments: