4 Nov 2018

அடுத்தவரைச் சீண்டுதலே அனைத்துப் பின்னடைவுகளுக்கும் பிரதான காரணமாகும்எஸ். அப்துல் றஹீம் பிரதேச செயலக அதிகாரி

SHARE
அடுத்தவரைச் சீண்டுதலே அனைத்துப் பின்னடைவுகளுக்கும் பிரதான காரணமாகும்எஸ். அப்துல் றஹீம் பிரதேச செயலக அதிகாரி
அடுத்தவரைச் சீண்டுதலே அனைத்துப் பின்னடைவுகளுக்கும் பிரதான காரணமாக அமைந்துள்ளதென ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் நிருவாக அதிகாரி எஸ். அப்துல் றஹீம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் “பிள்ளைகளைப் பாதுகாப்போம் எமது பிணக்குகளை நாமே தீர்த்துக் கொள்வோம்” எனும் தொனிப்பொருளிலமைந்த, மாணவர்களிடையே மத்தியஸ்தத்தை உருவாக்கும் திட்டம் ஞாயிற்றுக்கிழமை 04.11.2018 ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மத்தியஸ்த சபையின் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியத்துக்கான பயிற்சி அலுவலர் எம்.ஐ.  முஹம்மத் ஆஸாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நீதியமைச்சின் பயிற்சி அலுவலர் எஸ். அத்னான் முஹம்மத், போதனாசிரியர்களான உமா செல்வகுமார், மஹ்ஜுத் ஜெஸிலா பானு, ஏறாவூர் நகர பிரதேச செயலக களஞ்சிய அலுவலர் எஸ். அப்துல் ஜவாத் உட்பட இன்னும் வளவாளர்களும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டில் இடம்பெறும் இப்பயிற்சி நெறியில் தரம் 10, 11, 12 ஆகிய வகுப்புக்களைச் சேர்ந்த ஆண் பெண் மாணவர்களை மாணவர் மத்தியஸ்த சபைக்குள் உள்வாங்குவதற்காக  முரண்பாடு, தொடர்பாடல், கலந்துரையாடல், மத்தியஸ்தம், ஆகிய விடயதானங்களில் பயிற்சியளிக்கப்படுகின்றது.

நிகழ்வை ஆரம்பித்து வைத்து தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலகத்தின் நிருவாக அதிகாரி எஸ். அப்துல் றஹீம்,

மாணவர்களிடையே பரஸ்பரம் எழும் சிறிய சர்ச்சைகள் பெரிய முரண்பாடுகளாக உருவெடுத்து விடுகின்றன.

பின்னர் அது கோஷ்டி மோதல்களாகவும் சிலபோது சமூகக் குழப்பங்களாகவும் வியாபித்து விடுகின்றன.

பல்கலைக்கழகங்களில் கோஷ்டி மோதல்கள் அடிக்கடி இடம்பெறுவதை சம காலத்தில் நாம் கேள்விப்படுகின்றோம்.

மாணவர்களிடையே பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வகுப்பு ரீதியாக, பால் ரீதியாக முரண்பாடுகள் தலைதூக்குகின்றன. அதுமட்டுமல்லாமல் கல்விச் சமூகத்தில், ஆசிரியர்களிடையே, அதிபர்களிடையே, பாடசாலைகளிடையே என்று முரண்பாடுகள் விரிசலடைவதையும் நாம் காண்கின்றோம்.

பின்னர் இந்த முரண்பாட்டு மன நிலை சமூகங்களுக்குள்ளும் பிரதேசங்களுக்குள்ளும் நாடுகளுக்கிடையிலும் வியாபித்துச் செல்கின்றது.

எனவே. முரண்பாடுகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் எனும் ஆக்கபூர்வச் சிந்தனைப் போக்கு இப்பொழுது வளர்ந்து வருகின்றது.

அதனடிப்படையிலேயே ஜனாதிபதி செயலகம் இந்த விடயத்தில் அக்கறை கொண்டு நீதியமைச்சின் கீழ் இயங்கும் மத்தியஸ்;த சபை பிரிவின் வழிகாட்டுதலுடன் “பிள்ளைகளைப் பாதுகாப்போம் எமது பிணக்குகளை நாமே தீர்த்துக் கொள்வோம்” எனும் திட்டத்தில் மாணவர்களை உள்வாங்கியுள்ளது.

முரண்பாடுகள் சிறியதாகவோ பெரியதாகவோ எந்த வடிவத்தில் உருவெடுத்தாலும் அவை ஒருபோதும் ஆக்கபூர்வமாக இருப்பதில்லை. அழிவுக்கே அவை வழிவகுக்கின்றன.

எனவே, நாம் அழிவுகளைத் தவிர்த்துக் கொண்டு ஆக்கபூர்வமாக அணிதிரண்டு முன்னேற வேண்டுமாக இருந்தால் முரண்பாடுகளை சிறந்த முறையில் கையாள வேண்டும்.

பிணக்குகளை ஆக்கபூர்வமான முறையில் முகாமை செய்யாமையே மாணவர் தமது கல்வி மற்றும் புறக்கிருத்திய செயற்பாடுகளில் பின்தங்கிப் போவதற்கு பிரதான காரணமாகும்.

பாடசாலையில் மாணவர்களிடையே எழும் எல்லா வகையான பிணக்குகளையும் பரஸ்பர கலந்துரையாடல் அடிப்படையில் தீர்த்துக் கொள்ளும் வகையில் வன்முறைகளுக்குப் பதிலாக மென் முறைகளைக் கையாள மாணவர்களைத் தயார்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

மாணவர்கள் வளர்ந்து பெரியவர்களாக பல்வேறு சமூகப் பாத்திரங்களை வகிக்கும்போது அவர்கள் வன்முறையற்ற சூழலைத் தவிர்த்து அபிவிருத்திக்கான ஆக்கபூர்வமான ஆற்றல்களைக் கொண்டிருக்க வேண்டும்.”என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: