14 Nov 2018

அதிவேகமாகச் சென்ற இரண்டு மோட்டார்களால் மோதி இழுத்துச் செல்லப்பட்ட யுவதி நினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

SHARE
அதிவேகமாகச் சென்ற இரண்டு மோட்டார்களால் மோதி இழுத்துச் செல்லப்பட்ட யுவதி நினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
அதிவேகமாகச் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஒன்றினால் மோதுப்பட்ட நிலையில் பின்னால் வந்த மற்றைய மோட்டார் சைக்கிளினால் இழுத்துச் செல்லப்பட்ட யுவதி நினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவி;ல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் 5ஆம் குறிச்சியைச் சேர்ந்த வி. வினித்தா (வயது 21) என்ற  யுவதியே செவ்வாய்க்கிழமை மாலை 13.11.2018 இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்தவராகும்.

இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, ஏறாவூர் நகரிலுள்ள இலங்கையின் பிரபல அங்காடி (பல்பொருள் விற்பனை நிலையம்) க் கிளையில் பணிபுரியும் இந்த யுவதி கடமை நேரம் முடிந்து கால்நடையாக வீடுநோக்கிச் செல்லும்வேளையில்  மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையைக் கடக்கவேண்டியேற்பட்டுள்ளது.

அப்போது பாதசாரிக் கடவையான வெள்ளைக் கோட்டில் சென்று கொண்டிருக்கும்போது அதிவேகமாக வந்து கொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஒன்று முன்னதாக யுவதியை மோதியுள்ளது.

அதன்போது கீழே விழுந்த அவர் பின்னால் வந்த மற்றைய மோட்டார் சைக்கிளால் இழுத்துச் சென்று வீசப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட யுவதியை உதவிக்கு விரைந்தோர் மீட்டெடுத்து உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யுவதி மட்டக்களப்பு போதனா வைத்திசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

ஒவ்வொரு மோட்டார் சைக்கிலும் தலா மூன்று பேராக தலைக்கவசமும் அணியாமல் வேகக் கட்டப்பாட்டை இழந்து பயணித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வறுமை நிலையான குடும்பத்திலுள்ள இந்த யுவதி கடந்த வாரமே இலங்கையின் பிரபல பல்பொருள் அங்காடியில் வேலைவாய்ப்புப் பெற்று இணைந்து கொண்டவர் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம்பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: