26 Nov 2018

வாகரை கட்டுப்பாட்டுத் தபாலகத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லை

SHARE
வாகரைப் பிரதேச கட்டுப்பாட்டுத் தபாலகத்தில் (Divisional Controlling Post Office) வெளித் தபால் பெட்டி, பெக்ஸ் வசதி, வயோதிபர்கள் அமர்ந்திருக்க இருக்கை வசதிகள் என அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத நிலையில் இயங்கி வருவதாக மேற்படி தபாலகத்தின் வாடிக்கையாளர்களான பிரதேச பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தபாலகம் நவீனமயப்படுத்தப்பட்ட கட்டிடங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டு 2014 ஆம் ஆண்டு  பிரதேச கட்டுப்பாட்டு தபால் நிலையமாக புதிய கட்டிடத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது.

இருந்தபோதும் இதுவரை வெளித் தபால் பெட்டிகளோ, பெக்ஸ் வசதியோ தபாலகத்திற்கு அலுவல்களை நாடி வரும் முதியோர் வந்தமர்வதற்கான இருக்கைகளோ இன்றிச் செயற்பட்டு வருவது தமக்கு பெருத்த அசௌகரியத்தை அளிப்பதாக வாகரை பிரதேச முதியோர் சம்மேளன பொதுச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம் தெரிவித்தார்.

முதியோர் உட்பட கைக் குழந்தைகளுடன் தபாலகத்தை அலுவல்களுக்காக நாடி வரும் பெண்களும், பொதுமக்களும் தபாலகத்தின் படிக்கட்டுகளிலும், தரையிலும் அமர்ந்திருக்க வேண்டியுள்ளது.

தபால் நிலையத்தில் குப்பை இடும் பெட்டிகளே முன்னால் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் வெளியில் தபால் பெட்டிகள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கவில்லை.

அதேவேளை, தபால் நிலையத்திற்கு உள்ளே வைக்கப்பட்டிருக்கும் தபால் பெட்டியில் தபால் நிலையம் திறந்திருக்கும் அலுவலக நாட்களில் மாத்திரம்  பெட்டியில் தபால்களைப் பொதுமக்கள் இட முடியும்.

விடுமுறை நாட்களிளோ அலுவலக நேரத்திற்கு முன்னராகவோ, அலுவலகம் முடிந்த நேரங்களிலோ தபால்களை இடுவதற்கான எந்த ஒரு வசதியும் இங்கில்லை.
இதனால் இந்தத் தபாலகத்தை நாடி, கடிதம் அனுப்ப வருபவர்கள் தபால்களை இட தபால் பெட்டி இல்லாததால் ஏமாற்றத்தத்தைச் சந்திக்க வேண்டி ஏற்படுகின்றது. என அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து தாம் பல தடவை தபாலக அதிகாரிகளுக்கு எடுத்துரைத்ததாகவும் ஆனால் தீர்வு காணப்படாத குறைபாடுகளாக அவை வருடக்கணக்கில் தொடர்வதாகவும் குருகுலசிங்கம் மேலும் தெரிவித்தார்.

வாகரைப் பொதுமக்களின் நலன் கருதி அஞ்சல் திணைக்கள அதிகாரிகள் இந்த விடயம் குறித்து அக்கறை எடுக்க வேண்டும் என பிரதேச பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: