28 Oct 2018

அடுத்தவரின் கௌரவத்தை அங்கீகரித்தால் அமைதியை நிலைநாட்டலாம். ஆசிய மன்றத்தின் சமாதானத்திற்கும் சமூகக் கலந்துரையாடலுக்குமான நிகழ்ச்சித் திட்ட அலுவலர் செலினா கிறேமர்

SHARE

நமக்கு அருகிலுள்ளவர் சாதி, சமயம், இனம், மொழி என்று எந்தப் பின்னணியைக் கொண்டிருந்தாலும் அதுபற்றி அலட்டிக் கொள்ளாமல் அடுத்தவரைக் கண்ணியப்படுத்தி கௌரவிக்கக் கற்றுக் கொண்டால் அமைதியை நிலைநாட்டலாம் என ஆசிய மன்றத்தின் சமாதானத்திற்கும் சமூகக் கலந்துரையாடலுக்குமான நிகழ்ச்சித் திட்ட அலுவலர் செலினா கிறேமர் (Celina Cramer – Program Officer for Peacebuilding and Community Dialogதெரிவித்தார்.
சமாதானம் நல்லிணக்கம் தொடர்பாக மாணவர்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்வு மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை 28.10.2018 இடம்பெற்றது.
தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழு இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் சம்சுதீன் ஷாபி நயாஜ்,  தமிழ் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
அங்கு தொடர்ந்து மாணவர்களுக்கு நல்லிணக்கத்துக்கான சிந்தனைக் கருத்துக்களை முன்வைத்த செலினா கிறேமர், சமாதானம், மதிப்பளித்தல், இரக்க உணர்ச்சி. சகிப்புத்தன்மை, நேர்மை பரஸ்பர உதவியும் ஒத்துழைப்பும் உள்ளிட்ட பல விடயங்களில் தனி நடவடிக்கைகள், குழுச் செயற்பாடுகள் மூலமாக விழிப்புணர்வூட்டினார்.

மேலும் மாணவர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், ஒருவர் தான் கொண்டுள்ள உயர்தர விழுமியங்களால்தான் அவர் சிறந்த மனிதராக உருவாக முடியும்.
அந்த வகையில் விழுமியங்கள்தான் சமூக, அரசியல், சமய, கலாச்சார வாழ்க்கையின் படிகளாகும்.

விழுமியங்களே தனிமனிதரதும், சமூகத்தினதும் நடத்தையை வழிநடத்துகின்றன.
தலைசிறந்த விழுமியப் பண்புகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் அடுத்தவரை அங்கீகரித்து கௌரவித்து கண்ணியமாக நடத்தும் மனப்பாங்கை செயற்பாட்டில் காட்ட முடியும்.

அதன்மூலமே, எல்லோரும் சமமானவர்கள் என்ற பற்றுறுதியோடு எல்லோருக்கும் நீதியையும் இணக்கப்பாட்டையும் உருவாக்க முடியும்.

நாங்கள் யாவரும் சாதி மதம் இனம் மொழி பால் வயது வித்தியாசத்தைக் கடந்து நம்மை வழிநடத்தப் போதுமான உன்னத விழுமியங்களைக் கற்றுக் கொண்டு  கடைப்பிடிப்பதன்மூலம் நமக்கும்  நமது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் இந்த நாட்டிற்கும் நன்மையைத் தேடித் தர முடியும்.

நமது நாடம்டின் தற்போதைய சூழலில் நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் மதித்து நடந்தால் நிலைமை எவ்வளவு கௌரவமாகவும் அமைதியாகவும் ஆக்கபூர்வமாகவும் இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க வேண்டும்.

அப்போது இலங்கை நாடு எப்படி இருக்கும், இலங்கை நாடு அப்படி இருந்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்.

மாறாக அவமதிப்பை மற்றவருக்கு வழங்கி அதே பரிசாக அவரிடம் இருந்து அவமதிப்பையே நாம் பெறும்போது நமது அமைதி சீர்குலைவதோடு அழிகள்தான் மிஞ்சும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மதிப்பைக் கொடுத்து மதிப்பைப் பெற்றால் இலங்கையில் இன சமய மொழி பேதமின்றி எல்லோரும் அமைதியாக வாழ முடியும்.

சிறந்த விழுமியங்களைக் கடைப்பிடித்தொழுகக் கற்றுக் கொண்டால் எதிர்கால இலங்கை சபீட்சமும் அமைதியும் மிக்கதாய்த் திகழும். தற்போதைய மாணவர்களான நீங்கள் சிறந்த விழுமியங்களைக் கொண்டவர்களாக எதிர்கால இலங்கையின் தலைவர்களாக இருப்பீர்கள்” என்றார்.


SHARE

Author: verified_user

0 Comments: