4 Jun 2018

260 தேசியப் பாடசாலைகளில் பதில் அதிபர்களே பொறுப்பு அதிபர்களாகக் கடமை புரிகின்றார்கள். கல்வி நிருவாகப் பின்னடைவுக்கு இது வழிவகுக்கும் கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம்.

SHARE
நாட்டிலுள்ள 260 தேசியப் பாடசாலைகளில் பதில் அதிபர்களே பொறுப்பு அதிபர்களாகக் கடமை புரிகின்றார்கள் இத்தகைய நிலைமை தொடர்ந்து நீடித்தால் அது கல்வி நிருவாகப் பின்னடைவுக்கு இட்டுச் செல்லும் என கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவக்கொழுந்து ஜெயராஜா இது விடயமாக ஞாயிற்றுக்கிழமை 03.06.2018 வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் மொத்தம் 352 தேசியப் பாடசாலைகள் உள்ளன. இவற்றில் 92 பாடசாலைகளில் மாத்திரம் பொருத்தமான பொறுப்பு அதிபர்கள் கடமை புரிகின்றார்கள்.

கல்வி அமைச்சு, கல்வித் திணைக்களம், மாகாணக் கல்வித் திணைக்களம் என்பன முற்றிலும் அரசியல் மயப்படுத்தப்பட்டிருப்பதே பாடசாலைகளில் இவ்வாறு நிர்வாகச் சீர்கேடு இடம்பெறுவதற்கான பிரதான காரணமாகும்.

பொருத்தமானவர்களை கிரமமாக நியமிப்பதற்கான  தேசிய கொள்கைகள் இருந்தும் அவை பல்வேறு அரசியல் சுழியோட்ட செல்வாக்குளால் செயலிழந்து போயுள்ளன.

இதேபோன்றதொரு நிலைமையே மாகாண சபைகளினால் நிருவகிக்கப்படும் பாடசாலைகளின் வருடாந்த ஆசிரியர் இடமாற்றமும் முறையற்ற நிகழ்ச்சி நிரலுக்குள் தள்ளப்பட்டு கல்விச் செயற்பாடுகளில் தளம்பல் நிலை தோன்றியுள்ளது.
வருடா வருடம் அந்த ஆண்டின் துவக்கமான ஜனவரி மாத முதலாந் தவணையில் இடம்பெற்றிருக்க வேண்டிய ஆசிரியர் இடமாற்றம் ஆண்டின் நடுப்பகுதி கடந்தும் இடம்பெறாமல் இருக்கின்ற நிலைமை ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி அலுவலர்களையும் ஆகியோரையும் ஒட்டு மொத்த கல்விச் செயற்பாடுகளையும் பாதித்து வருகிறது.

முறையற்ற விதத்தில் ஆண்டின் நடுப்பகுதியில் வழங்கப்படும் ஆசிரியர் இடமாற்றங்களால் மாணவர்களின் கல்வி உட்பட நிருவாகச் செயற்பாடுகள் அத்தனையும் குழப்பிப் போய் விடுகின்றன.

ஆகவே இத்தகைய குழப்பகரமான நிலைமைகளைத் தவிர்த்துக் கொள்வதற்காக அரசியல் கலப்படமற்ற முறையான ஆசிரியர் இடமாற்றக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.அது பரிபூணமாக அமுல்படுத்தப்பட வேண்டும்.


SHARE

Author: verified_user

0 Comments: