7 Aug 2016

காத்தான்குடி தள வைத்தியசாலையில் நிலவும் அதிகப்படியான ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்திக்க உறுதியளிப்பு 105 பேருக்கு தேவைப்பாடு

SHARE
மட்டக்கப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள காத்தான்குடி தள வைத்தியசாலையில் தற்போது நிலவும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்திக்கப்போவதாக சனிக்கிழமை (ஓகஸ்ட் 06, 2016) அங்கு திடீர் விஜயமொன்றை
மேற்கொண்ட சுகாதார சேவைகள் பிரதியமைச்சர் பைஷல் காஷிம் மற்றும் சுகாதார அமைச்சின் திட்டமிடல் பிரிவு பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எச். நீலமணி தலைமையிலான குழுவினர் உறுதியளித்துள்ளனர்.

வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட மேற்படி குழுவினரிடம் காத்தான்குடி தள வைத்தியசாலையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை திருப்தியான வைத்திய சேவைக்கு ஒரு சவாலாக இருப்பதாக வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜாபீர் தலைமையிலான வைத்திய அதிகாரிகள் குழுவினரால் எடுத்துக் கூறப்பட்டது.

இதனைக் கேட்டறிந்து கொண்ட பிரதியமைச்சர் குழுவினர் ஆளணிப் பற்றாக்குறையை வெகு விரைவில் நிவர்த்தி செய்வதற்கு தாம் நடவடிக்கை எடுப்பதாக வைத்தியசாலை நிருவாகத்திடம் உறுதியளித்தனர்.

மேலும், வைத்தியசாலையின் திருத்த வேலைகள், கட்டுமானப் பணிகள் என்பனவற்றை உடனடியாக மேற்கொள்வதற்கும் பிரதியமைச்சர் குழுவினர் வாக்குறுதியளித்ததாக அபிவிருத்திக்குழு செயலாளர் டாக்டர் எம்.ரீ. மாஹிர் தெரிவித்தார்.

இந்த வைத்தியசாலையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை பற்றி மேலும் தெரிவித்த வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜாபீர்,
தற்போது காத்தான்குடி வைத்தியசாலையில் 110 ஆளணியினரே கடமை புரிகின்றனர்.

ஆனால், இந்த வைத்தியசாலையில் சிறப்பான சேவைகளை முன்னெடுப்பதாயின் மேலும் குறைந்தது 18 வைத்தியர்கள், விஷேட வைத்திய நிபுணர்கள் 04 பேர், தாதி உத்தியோகத்தர்கள் 30 பேர், மருத்துவ மாதுக்கள் 06 பேர், கண்காணிப்பாளர்கள் 13 பேர், சிற்றூழியர்கள் 30 பேர், மருந்தகர்கள் 05 பேர் என்ற அடிப்படையில் மேலும் 105 ஆளணியிராவது தேவை என்று குறிப்பிட்டார்.
காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எஸ்.எம். ஜாபிர் வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு செயலாளர் டாக்டர் மாஹிர் உட்பட  வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் ஆகியோர் பிரதியமைச்சரின் விஜயத்தின்போது சமுகமளித்திருந்தனர்.

இதேவேளை, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் நீண்ட காலத் தேவையாக இருந்த சத்திர சிகிச்சைப் பிரிவு முதன்முறையாக கடந்த ஜுலை 20ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
  






SHARE

Author: verified_user

0 Comments: