23 Jul 2016

கடந்த அரசு பெற்றெடுத்த பிள்ளைகளைப் பதிவு செய்கின்ற செயற்பாட்டில்தான் நல்லாட்சி அரசும் ஈடுபட்டிருக்கின்றது-வியாழேந்திரன் எம்.பி

SHARE
கடந்த அரசு பெற்றெடுத்த பிள்ளைகளைப் பதிவு செய்கின்ற செயற்பாட்டில்தான் நல்லாட்சி அரசும் ஈடுபட்டிருக்கின்றது. நல்லாட்சி அரசு தமிழர்
பிரச்சினைக்குத் தீர்வைத் தராதபோதும் தமிழ் பேசும் மக்கள் இன்னமும் நம்பிக்கை இழக்காமலிருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று 1 கல்வி வலயத்திலுள்ள ஐயன்கேணி தமிழ் வித்தியாலயத்தில் மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம். மனோகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஜுலை 22, 2016) இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எத்தனையோ பாடசாலைகள் போதிய வசதிகள் இன்றி தகரக் கொட்டகை, ஓலைக் கொட்டகைகளுக்குள் வகுப்புக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

யுத்த காலத்தில் சில பாடசாலைகளில் நிலைகொள்ளத் தொடங்கிய படையினர் இன்னமும் அந்தப் பாடசாலைகளை மாணவர்களிடம் கையளிக்கவில்லை, மீள்குடியேற்றம் மட்டக்களப்பில் இடம்பெறவில்லை, இராணுவ முகாம்களுக்குள்ளே மக்கள் குடியிருப்புக்கள் இருக்கின்றன. ஆயினும் இன்னமும் மக்கள் இந்த அரசிலே நம்பிக்கை இழக்கவில்லை.

கடந்த கால அரசாங்க நடவடிக்கைகளுக்கு புதுப்பொலிவாக மைபூசுவதிலேயே இந்த நல்லாட்சி அரசு ஈடுபடுகின்றது.

இதனை விடுத்து இந்த அரசைக் கொண்டு வருவதில் பெரும்பங்காற்றிய தமிழ் பேசும் சிறுபான்மையினரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இந்த அரசு தீவிர அக்கறை காட்ட வேண்டும்.

காலகாலமாகப் பாதிக்கப்பட்டு வந்த சிறுபான்மை இன மக்களின் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், வாழ்வாதாரம் என்பவற்றைச் சீராக்க வேண்டும்.

குறிப்பாக கிழக்கு மாகாணம் பலவகையிலும் புறந்தள்ளப்படுகின்றது.
ஓரக்கண்கொண்டு பார்க்கும் நடவடிக்கையை நல்லாட்சி அரசு நிறுத்திக் கொண்டு, இன்னும் இந்த அரசு விமோசனம் தரும் என்று ஏக்கப்பெருமூச்சுக்களோடு நம்பிக்கை வைத்திருக்கின்ற சிறுபான்மையினரின் நலன்களில் அரசு அக்கறை கொள்ள வேண்டும்.

அரசியல் யாப்பு மாற்றத்தில் சிறுபான்மையினருக்கும் கௌரவமான தீர்வைப் பெற்றுத் தரும் வழிவகைகளை அரசு ஏற்படுத்த வேண்டும்.” என்றார்.


SHARE

Author: verified_user

0 Comments: