1 Jun 2016

10 மாதம் சிறையிலிருந்து பிணையில் வந்த இளம் பெண் முந்திரிக் காட்டிலிருந்து சடலமாக மீட்பு

SHARE
தனது பச்சிளம் பாலகனைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 10 மாதங்களாக சிறையிலடைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த இளம்பெண் முந்திரி மரக் காட்டிலிருந்து புதன்கிழமை பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கோரகல்லிமடு கொலனி,
முருகன்கோயில் வீதியைச் சேர்ந்த ராசையா ரஞ்சனா (வயது 25) என்பவரின் சடலமே சந்திவெளியிலுள்ள முந்திரித் தோட்டத்தில் முந்திரி மரமொன்றில் தொங்கியவாறு மீட்கப்பட்டது.

கடந்த 10 மாதங்களாக சிறையிலடைக்கப்பட்டிருந்த இவர் கடந்த 5 தினங்களுக்கு முன்னரே சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பியிருந்தார் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

கடந்த 2015.07.16 ஆம் திகதி பிறந்த சிசு அன்றைய தினமே கொலை செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டின் பேரில் அந்த சிசுவின் தாய் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.

சம்பவ தினமான செவ்வாய்க்கிழமை 31.05.2016 அன்று மாலை தனது கணவருடன் திகிலிவெட்டைக் கிராமத்திற்குச் செல்லவிருந்தபோது காணாமல் போயுள்ளார், உடனடியாக கணவரும் உறவினர்களும் தேடுதலில் ஈடுபட்டபோது அருகிலுள்ள சந்திவெளிக் கிராம முந்திரிக் காட்டின் முந்திரி மரமொன்றில் சடலமாகத் தொங்கிக் கொண்டிருப்பதை உறவினர்கள் கண்டள்ளனர்.

இதுபற்றி பொலிஸாருக்கும் பிரேத பரிசோதனை அதிகாரிக்கும் அறிவித்ததன் பேரில் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனையில் செவ்வாய்க்கிழமை 31.05.2016 ஆங்கிலப்பாட சேவைக்கால ஆலோசகர் ஒருவர் தற்கொலை செய்யதிருந்தார் என்று பிரதேச மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தர். 

SHARE

Author: verified_user

0 Comments: