27 Apr 2016

களப்பு மீனவர் ஒன்றிணைந்த நல்லாட்சி குழு கூட்டம்

SHARE
கண்டல் தாவரங்கள் வளர்கின்ற களப்புகளை அண்டிய பிரதேசங்கள் முக்கியத்துவம் மிக்கவையாக இருந்தாலும் மட்டக்களப்பில் அப்பிரதேசங்களுக்கு காணிப்பத்திரங்களைச் சமர்ப்பிக்கின்ற நிலை காணப்படுகிறது
என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான களப்பு மீனவர் ஒன்றிணைந்த நல்லாட்சி குழு கூட்டத்தில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,

மட்டக்களப்பு வாவிகளை அண்டியிருக்கின்ற முக்கியத்துவம் வாய்ந்த கண்டல் தாவரங்கள் வளர்ந்திருக்கின்ற பிரதேசங்களுக்கு  கண்டல் தாவரங்கள் வளர்ந்திருக்கின்ற பகுதிகளுக்கு தனியார்கள் காணி ஆவணங்களைச் சமர்ப்பிக்கின்றார்கள். இது எங்களுக்கு பாரியதொரு சவாலான விடயமாக இருக்கின்றது. இது எங்களது அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட விடயமாகவும் இருக்கின்றது. என்பதுடன், இப்படியான விடயங்களை  கடல்தொழில், நீரியல்வளத்திணைக்களம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துரு கொண்டான் பிரதேசம் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக இனங்காணப்பட்டாலும் இப்பிரதேசத்திலுள்ள காணிகளுக்கு தனியார்கள் ஆவணங்களைச் சமர்ப்பிக்கின்ற விடயங்களுக்காக வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. எனவே முக்கிய வளங்களான கண்டல் தாவரங்கள், களப்புப் பிரதேசங்களைப் பாதுகாப்பது அவசியமானதொரு விடயமாக உள்ளது. எனவே இப்பிரதேசங்களைப் பாதுகாக்கின்ற, பேணுகின்ற நடவடிக்கைகளை குறிப்பிட்ட திணைக்களம் மேற்கொள்வது இப்போதைய நிலையில் முக்கியம் மிக்கதாகும் எனக் கேட்டுக் கொண்டார்.

கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கிறிஸ்ரி லால் பெர்ணாண்டோ, கிழக்கு மாகாண நன்னீர் மீன்பிடித் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.சுதாகரன், கடல்தொழில் நீரியல் வளங்கள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ருக்சான் குருஸ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பார்ம் பவுண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளர் சுனில் தும்பேபொல, பார்ம் பவுண்டேசன் நிறுவனத்தின் வடக்கு கிழக்கு பிராந்திய உதவிப் பணிப்பாளர் எஸ்.பாஸ்கரன் ,  களப்பு நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர்களான எச்.கத்துரு சிங்க, சினேசா கருணாரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், களப்பு மீனவர்களின் முகாமைத்துவக் குழுப் பிரதிநிதிகள், மீனவ அமைப்புகள், பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதன் போது அமைக்கப்பட்ட களப்பு மீனவர் ஒன்றிணைந்த நல்லாட்சி குழுவில், மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர், பிரதேச சபையினர், நகர அபிவிருத்தி அதிகார சபைப் பிரதிநிதி, கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களப் பணிப்பாளர், கரையோரம் பேணல் திணைக்களத்தின் பிரதிநிதி, மத்திய சூழல் அதிகார சபையின் அதிகாரி உள்ளிட்ட அனைத்துத் திணைக்களங்களின் சார்பிலான உத்தியோகத்தர்களும், களப்பு மீனவர்களின் முகாமைத்துவக் குழுக்களின் பிரதிநிதிகளும் உள்ளடங்குவர்.

இக்குழுவில் தலைவராக மாவட்ட அரசாங்க அதிபரும், செயலாளராக கடல்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளரும் செயற்படுவார்கள். கடற்தொழில் நீரியல் வளங்கள் சட்டம் 2013 ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க, கடற்தொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் படி இந்த களப்பு மீனவர் ஒன்றிணைந்த நல்லாட்சி குழுவானது அமைக்கப்பட்டுள்ளது.

களப்பு வளங்களைப் பாதுகாத்து, வளப்படுத்திப் பராமரித்து முகாமைத்துவம் செய்வதுடன், மீனவர்களின் வாழ்வாதாரத்தினையும் மேம்படுத்துவதற்கான வேலைகளில் இந்த களப்பு மீனவர் ஒன்றிணைந்த நல்லாட்சி குழு ஈடுபடும். எதிர்வரும் காலத்தில் களப்பு தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளைக் கலந்துரையாடி சட்டப்படியான தாபன முறைப்படுத்தப்பட்ட முறையிமையினை ஏற்படுத்தும் வேலைகளில் ஈடுபடும்.

மாவட்ட செலயகம் மற்றும் கடல் தொழில் நீரியல் வளத் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து பிரக்ரிகல் அக்சன், பார்ம் பவுண்டேசன் ஆகியன நிலையான களப்புகள் மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான களப்பு மீனவர் ஒன்றிணைந்த நல்லாட்சி குழு அமைக்கப்பட்டுள்ளது
SHARE

Author: verified_user

0 Comments: