19 Apr 2016

கிராம சேவையாளர் உயிரிழப்பு: இருவர் விளக்கமறியலில்

SHARE
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழூர் பிரதேசத்தில் கிராம சேவையாளர் உயிரிழந்துள்ளமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதவான்
எஸ்.றிஸ்வி சனிக்கிழமை(16) உத்தரவிட்டார்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழூர், கேணி வீதியில் வெள்ளிக்கிழமை(15) இரவு 9.00மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று மின்கம்பத்தடன் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த கிராம சேவையாளர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ஓந்தாச்சிமடம் பகுதியில் கிராம சேவையாளராக கடமையாற்றிவரும் மகிழூர் பகுதியை சேர்ந்த சு.விக்னேஸ்வரன் (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். எனினும், இவர்களை குறித்த பிரதேசத்தில் சிலர் கடுமையாக தாக்கிய நிலையிலேயே தூணில் மோதியுள்ளதாகவும் குறித்த கிராம சேவையாளரின் தலையின் பின்புறத்தில் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த கிராம சேவையாளரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த கிராம சேவையாளரின் மரணம் தாக்குதலினால் ஏற்பட்டதா,விபத்தினால் ஏற்பட்டதா என பிரேத பரிசோதனையின் பின்னரே தெரியவரும் என களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, குறித்த கிராம சேவையாளருடன் சென்று படுகாயமடைந்த நபர், களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரை சனிக்கிழமை(16) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.றிஸ்வியின் இல்லத்தில் ஆஜர்படுத்தியபோதே, இவ்வாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user

0 Comments: