23 Apr 2016

வடமுனை ஊத்துச்சேனையில் குடிநீரின்றித் தவிக்கும் 1850 குடும்பங்களுக்கு குடிநீர் வசதிக்காக கிழக்கு முதலமைச்சரினால் ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கீடு

SHARE
மட்டக்களப்பு பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள தூரப்புறக் கிராமமான வடமுனை ஊத்துச்சேனையில் குடிநீரின்றித் தவிக்கும் 1850 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் ஏற்பாட்டிற்காக கிழக்கு முதலமைச்சரினால் ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு
மாகாண முதலமைச்சரின் இணைப்பாளர் எஸ்.எம். ஸரூஜ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கீழ் வரும் பொலொன்னறுவை மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள இந்தக் கிராமத்து மக்கள் கோடை காலத்தில் குடிநீருக்காக அல்லலுறுவதைக் கருத்திற் கொண்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தனது மாகாணசபை பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து இந்த நிதியை வழங்கியுள்ளார்.

இந்த நிதியைக் கொண்டு முக்கிய இடங்களில் நீர்த் தாங்கிகளையும் பொதுக் கிணறுகளையும் அமைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

காலாகாலமாக இந்த தூரப் புறக் கிராமமான வடமுனை ஊத்துச்சேனை மக்கள் கோடை காலங்களில் குடிநீருக்காக குளம் குட்டைகளை நோக்கி நீண்ட தூரம் அலைந்து திரிவது குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தது.

இந்த குடிநீர் வசதியளிக்கும் வேலைகளை உடனடியாகத் தொடங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சரின் இணைப்பாளர் ஸரூஜ் மேலும் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: