3 Jan 2023

கட்டுரை : “டிசம்பர் 25 ஓர் விடுதலையின் திருநாள்”

SHARE

உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகின்றார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார். செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகின்றார்லூக்2:53

கிறிஸ்துவுக்குள் பிரியமான இறை சகோதரங்களே, புதிய பணிக்களமான மீன்பாடும் தேனாடாம் மட்டு மண்ணிலிருந்தும் நத்தார்  புதுவருட செய்தி மடலினூடாக உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம்.

என அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் கிழக்கு மாகாணம் பிராந்திய குருமுதல்வர் கிறிஸ்துவின் திருப்பணியில் அருட்பணி. மணி.லூக்ஜோன் தெரிவிக்கின்றார்.

கிறிஸ்து பிறப்பின் நாள்  தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்… 2022நம் அனைவருக்கும் மிகவும் சவால் மிக்க ஆண்டாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த ஆண்டில் நம் அனைவருக்கும் கிடைத்த அனுபவம், 2023எப்படி இருக்கும் என்ற மிகப்பெரிய கேள்வியை நமக்குள் கொண்டுவந்துள்ளது. இந்த ஆண்டில் நடைபெற்ற மாபெரும் மக்கள் போராட்டம், போராட்டத்தின் விளைவாக ஆட்சியாளர்கள் பதவி துறப்பு என்று பல நிகழ்ந்த போதும் சாதாரண மக்களின் வாழ்வியலில் பெரும் மாற்றத்தை நாம் காணமுடியவில்லை. இத்தகைய சூழலில் டிசம்பர்25, கிறிஸ்து பிறப்பின் நாள் எமது அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் வெறும் பதிலை மட்டுமல்ல மாறாக எங்கள் விசுவாச வாழ்வை தொடர்ந்தும் ஓடி முடிக்கக்கூடிய நம்பிக்கையை தருகின்றது. டிசம்பர்25 நமது ஆண்டவர் இயேசுவின் காலத்தில் எவ்வளவு முக்கியமான வரலாற்று பின்னணியைக் கொடுத்தது என்பதனை நாம் புரிந்து கொண்டால் மாத்திரமே எமது கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்கும்.

கி.மு 2ஆம் நூற்றாண்டளவில் அரசும் சமயமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்ததாகவே காணப்பட்டது. எருசலேமின் சமூக கட்டமைப்பு குருக்களாலும் தலைமைக் குருக்களாலும் நிர்வகிக்கப்பட்டது. மகாஅலெக்ஸாந்தர் கிரேக்க பேரரசை மிக அழகாக விரிவுபடுத்தியதனால் பல நாடுகள் தங்கள் கலாச்சாரத்தை விடுத்து புதிய கலாச்சாரத்தை விரும்பி பின்பற்றினர். கிரேக்க காலனித்துவ செல்வாக்கு யூதேயா முழுவதிலும் இருந்த போதும் யூதர்கள் தங்கள் நாளாந்த வாழ்க்கை முறையினை தனித்தன்மையுடன் காத்து வந்தனர்.

எருசலேமில் உள்ள அனைத்து யூதர்களுக்கும் புனித ஆலயம் அதாவது எருசலேம் தேவாலயம் மிக முக்கியமான ஓர் கட்டமைப்பாக இருந்தது. இது யூத மக்களின் சமய மற்றும் சமூக மையமாக இருந்தது. எருசலேம் ஆலயம் இருப்பதன் மூலம் தம்மத்தியில் கடவுள் உடனிருந்து செயலாற்றுவதாக யூதர்கள் நம்பினர்.

இத்தகைய சூழலில் கி.மு 198இல் செலுக்கிய பேரரசு தொலமி அரசை வெற்றி கொண்டு யூதேயா முழுவதையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. தொலமி பேரரசு யூதர்களுக்கு சமூக கலாச்சார மற்றும் மதஉரிமைகளை வழங்கியது போல செலுக்கிய பேரரசு வழங்கவில்லை. செலுக்கிய பேரரசின் ஆட்சியாளர் மூன்றாம் அந்தியோக்கு யூதசமயத்தை முற்று முழுதாக கிரேக்கமயப்படுத்த விரும்பியவராவார்.

கி.மு 175இல் செலுக்கிய பேரரசில் அரியணை ஏறிய நான்காம் அந்தியோக்கு எப்பிபானஸ் தனது தந்தையை விட பல படிகள் மேலே சென்று உலகளாவிய கிரேக்க மயமாக்களை செய்ய விரும்பினார். இவர் இரண்டு கொள்கைகளை தீவிரமாக செயற்படுத்த விரும்பினார்முதலாவது தனது ஆட்சிக்குட்பட்ட மக்களை ஒன்றுபடுத்துவது. இரண்டாவது தன் அரசை விரிவபடுத்துவது. அதாவது வரலாற்றிலே மகா அலெக்ஸாந்தருக்கு பக்கத்திலே தான் வர வேண்டுமென எண்ணி தன் முன்னோடிகளுக்குள் தன்னை வேறுபடுத்தி கொள்ள முனைந்தார். எனவே இதனை செய்து முடிக்க மக்கள் தங்கள் பாரம்பரிய கலாச்சாரங்களை கைவிட்டு கிரேக்க கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என மக்களை வற்புறுத்தினார்.

எருசலேம் ஆலயத்திற்கு வெளியே ஓர்உடற்பயிற்சி கூடத்தை உருவாக்கி அதன் மூலமாக யூதசமூகத்திற்குள் கிரேக்க கலாச்சாரத்தை வலுப்படுத்தினார். இந்த பயிற்சிக் கூடத்திற்கு வருபவர்கள் ஆடையின்றி நிர்வாணமாக வரவேண்டும். யூத சட்டத்தின் படி எந்த ஒரு ஆணும் பொது வெளியில் நிர்வாணமாக போகக் கூடாது. அப்படி செய்தால் கடவுளின் உடன்படிக்கைச் சட்டத்தை மீறியவர்களாவர். இந்த சட்டங்களை அறிந்திருந்த அந்தியோக்கு எப்பிபானஸ் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை சட்டமாக்கி அனைவரும் ஒருமுறையேனும் சென்று வரவேண்டும் என பணித்தார். இதன் வெற்றியை கண்டு உற்சாகமடைந்த அந்தியோக்கு எப்பிபானஸ் யூதரை இன்னும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கினார்.

நான்காம் அந்தியோக்கு எப்பிபானஸ் எருசலேமை கொள்ளையிட்டு ஆலயத்தை தீட்டுப்படுத்தினார். பலிபீடத்தை அழித்து அதன் மீது ஒரு சிலையையும் அமைத்தார். விருத்தசேதனம் செய்தல், ஓய்வு நாள் ஆசரிப்பு ஆகிய சமய நடைமுறைகளை சட்ட விரோதமாக்கினார். கிரேக்க கடவுள்களுக்கான பலிபீடங்களும் சிலைகளும் ஒவ்வொரு ஊர்களிலும் வைக்கப்பட்டன. இந்த கடவுள்களை வழிபடாதவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த கிரேக்கமயமாக்குதலை யூதேயாவிலுள்ள உயர்மட்ட மக்கள் எதிர்க்கவில்லை. அவர்கள் ஆளும் அரசோடு ஒன்றித்துப்போயினர். ஆனால் சாதாரண மக்கள் இதனை அடியோடு வெறுத்தனர். இவர்கள் தங்கள் சமயத்தையும் கலாச்சாரத்தையும் கைவிட்டுவிட விரும்பவில்லைஅதற்காக தங்கள் உயிரையும் கொடுக்க தயாராக இருந்தனர் (2மக்கபேயர்6:18-7:42). யூத மக்களுக்கு எதிரான துன்புறுத்தல்களும் யூத சமயத்தை கடைப்பிடிக்கப் போடப்பட்ட தடைகளும் யூதேயாவிலுள்ள யூதர்களை ஒன்றிணைத்தது. ஆனால் அவர்களை வழிநடத்த ஓர் தலைமை அங்கு தேவைப்பட்டது.

இக்காலப்பகுதியில் குரு மத்தியாஸ் என்பவர் இந்த அடக்குமுறைகளையெல்லாம் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்தார். குருமத்தியாஸ் அந்தியோக்குவின் கொடுமைகளைக் கண்டு தங்கள் ஆடைகளை கிழித்துக் கொண்டு சாக்குடைகளை அணிந்து மிகவும் புலம்பிக்கொண்டிருந்தவர் ஒருவர் (1மக் 2:14). எப்பிபானஸின் அதிகாரிகள் குரு மத்தியாசிடம் கிரேக்க சிலைகளுக்கு பலியிடுமாறு கட்டளையிடுகின்றனர். ஆனால் குரு மத்தியாஸ் அதனை செய்ய மறுத்து விடுகின்றார். இதற்கு மாறாக அரசனது கொடுமைகளை நிறைவேற்ற வந்த அதிகாரிகளையும் அவர்களுக்கு பணிந்த யூதர்களையும் கொன்று விட்டு திருச்சட்டத்தின் பேரில் பேரார்வமும் உடன்படிக்கை மீது பற்றுறுதியும் கொண்டவர்கள் என் பின்னால் வரட்டும் ( மக் 2:27) என்று அறைகூவல் விடுத்தார்.

இப்பொழுது யூதர்களுக்கு தாம் எதிர்பார்த்திருந்த தலைவர் கிடைத்து விடுகின்றார். இவரும் இவரது ஐந்து புதல்வர்களுமான யோவான், சீமோன், யூதா, எலயேசர், யோனத்தான் ஆகியோர் யூதர்களை ஓர் அணியாக திரட்டினர். இந்த ஒருங்கிணைப்பு தான் யூத தேசியவாதத்திற்கான முதலாவது விதையாக விழுந்தது. இவ்வாறு உரிமைப்போராட்டத்திற்கு தலைமைத்துவம் கொடுத்த (கி.மு 167) மத்தியாசின் குடும்பம் மக்கபேயர் என அறியப்பட்டனர். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான ஒருங்கிணைப்பும் புரட்சியும் ஒரு சமய தலைவரினால் ஏற்படுத்தப்பட்டது என்பதனை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கிரேக்க அரசன் யூதாவின் தலைமையிலான யூதர்களின் கிரேக்க கெரில்லா இராணுவத்தை அழிக்க பல முறை முயன்ற போதும் யூதா அவற்றை சிறப்பாக கையாண்டு பலமிக்க கிரேக்க படையை பலமுறை தோற்கடித்தார். எனவே யூதாவின் இவ்வலிமையை கண்டு யூத இளைஞர்கள் பலர் அவரோடு போராட்டத்தில் இணைந்தனர். யூதா தனது இராணுவத்துடன் எருசலேம் நோக்கி படையெடுத்து எருசலேம் நகர் மற்றும் ஆலயத்தை தம்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார் (1மக்4:36-40). கி.மு 165டிசம்பர் 25அன்று தேவாலயம் சுத்தம் செய்யப்பட்டு ஆண்டவருக்கென்று மீளவும் பிரதிஸ்டை செய்யப்பட்டது. இந்த விழா ஏழு நாட்களுக்கு கொண்டாடப்பட்டது. அந்த நாளை யூதர்கள் இன்று வரை கனுக்கா பண்டிகை என கொண்டாடி வருகின்றனர்.

கிறிஸ்து பிறப்பின் பண்டிகையை டிசம்பர் மாதம் 25ஆம் திகதி கொண்டாடும் எமக்கு மேற்கூறப்பட்டுள்ள வரலாற்று பின்னணியை விட ஓர் சிறந்த உதாரணம் கிடைக்கப்போவதில்லை. கிறிஸ்துவின் பிறப்பு ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் விடுதலையின் திருநாளில் நிகழ்ந்த ஒன்று. உரிமைக்காக போராடிய இனத்தின் விடுதலை நாளை கடவுள் தமது குமாரனின் பிறப்பு நாளாக தெரிந்து கொண்டார் என இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும். அல்லது கிறிஸ்துவின் பிறப்பின் நாளை ஆதித்திருச்சபை யூதர்களின் விடுதலையின் நாளுடன் இணைத்து பொருள் கண்டது என நாம் புரிந்து கொள்ள வேண்டும். எது எப்படி இருப்பினும் டிசம்பர் 25யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சாதாரண ஓர் தினம் அல்ல.

அன்னை மரியாளின் பாடல் டிசம்பர் 25ற்கு இன்னும் வலுவூட்டுகின்றதாக அமைகின்றது. “உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகின்றார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார். செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகின்றார்என்னும் அன்னை மரியாளின் வார்த்தைகள் ஒடுக்கப்பட்ட மக்களுடன் கடவுள் தொடர்ந்தும் செயலாற்றுகின்றார். அதிகாரத்திலிருந்து மக்களை நசுக்கி பிழிகின்ற எப்பிபானஸ் போன்றவர்களை கடவுள் அதிகாரத்திலிருந்து தூக்கி எறிவார் என்னும் நம்பிக்கை தரும் வார்த்தைகளை தனது இனத்தின் விடுதலை வரலாற்று அனுபவத்திலிருந்து மரியாள் எமக்கு தருகின்றார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமான இறை சகோதரங்களே! இந்த வருடம் கொரோனாவின் தாக்கம் ஓரளவு குறைந்த போதும் மறுபுறத்தில் அதிகரித்துள்ள விலைவாசி உயர்வு யுத்தகாலத்தில்கூட இல்லாத அளவிற்கு மக்களின் நாளாந்த வாழ்க்கையை ஓர் போராட்ட களமாக மாற்றியுள்ளது. ஒரு நேர உணவை குறைத்தால் தான் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியும் என்ற நிலையில் நாம் வாழ்கின்றோம். மூன்று வேளையும் திருப்தியாக உண்டு வாழ்வோரைவிட உணவில்லாமல் வாழ்வோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. பெற்றோலும் டீசலும் பெற்றுக்கொள்ள நாம் அனுபவித்த கஸ்டங்கள் இந்த நூற்றாண்டில் எவரும் கண்டிராத ஒன்று. இலங்கையில் வாழும் அனைத்து இனத்தாரும் தங்களின் எதிர்காலத்தை குறித்து கேள்விகளோடு வாழும் போது டிசம்பர் 25சம்பவங்கள் அனைத்தும் நம்பிக்கையின் செய்திகளாக நம்மை நோக்கி வருகின்றது.

டிசம்பர் 25மறுபடியும் நம் அனைவருக்கும் ஓர்
விடுதலையின் நாளாக இம்முறையும் வந்துள்ளது. இனிமேலும் வரும். இந்த பொன்நாள் விடுதலை தரும் நாள். மக்களை அடக்கி வன்கரம் கொண்டு ஆட்சி செலுத்தும் எங்களின் எப்பிபானசுக்களை கடவுள் துக்கி வீசுவார். அதேவேளையில் மத்தியாஸ் போன்ற துணிவுள்ள, தன்னலம் இல்லாத தலைவர்கள் எம்மிடையே எழும்ப வேண்டுமென நாம் ஆண்டவரிடம் மன்றாடுவோம். எங்கள் கஸ்டங்கள் துன்பங்கள், கவலைகள் அனைத்தும் வெகு சீக்கிரத்தில் இன்பமாக மாறும் என்ற டிசம்பர் 25நம்பிக்கையோடு 2023ஆம் ஆண்டில் கால்களை பதிப்போம். இறையாட்சி நம் அனைவருக்கும் விடுதலையை தரும் ஆட்சியாக அமைவதாக என அவர் குறிப்பிடுகின்றார்.SHARE

Author: verified_user

0 Comments: