தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் வெல்லாவெளிக்கு விஜயம் எதிர்ப்பையடுத்து எல்லைக் கல் இடும் நடவடிக்கை இடைநிறுத்தம்.
மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பெருநிலப்பரப்பிற்குட்பட்ட போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் எல்லைக் கற்கள் இடுவதற்காக திங்கட்கிழமை(12) தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் விஜயம் செய்திருந்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அந்த அந்த இடங்களில் ஒன்று கூடிநின்றனர். அத்தோடு மிகப்பிரதான இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள வெல்லாவெளி கல்லடிப் பிள்ளையார் ஆலயத்தில் மக்கள் இன்றயத்தினம் மாபெரும் சிரமதானப் பணியையும், அன்னதான நிகழ்வையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
தமது நடவடிக்கைகளுக்கு மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் எதிர்ப்புத் தெரிவிப்பதாக அறிந்த தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் ஆரம்பத்தில் வெல்லாவெளியில் அமைந்துள்ள பிரதேச செயலகத்தினுள் சென்று பிரதேச செயலாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையறிந்த மக்கள் பிரதிநிதிகளாகிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா போரதீவுப் பற்றுப்பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி, மற்றும் பிரதேச சபை உறுப்பினர் தியாகராஜா உள்ளிட்ட பலர் பிரதேச செயலகத்திற்குச் சென்று பிரதேச செயலாளருடனும், தொல்லியல் திணைக்களத்திலிருந்து எல்லைக் கற்கள் இடுவதற்கு வருகை தந்த அதிகாரிகளிடமும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
பின்னர் தமிழ் மக்களிப் பூர்வீக இடங்களை தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தி எல்லைக்கற்கள் இடுவதற்கு மக்களும், மக்கள் பிரதிநிதிகளும், எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இன்றய தங்களது நடவடிக்கைகளை கைவிடுமாறும், இவ்விடையம் தொடர்பில் கிராமமட்ட அமைப்புக்களிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும், எதிர்வரும் தைப் பொங்கல் தினத்திற்குப் பின்னர் ஒரு நாளில் கலந்துரையாடுவது என எடுத்துரைத்ததன் அடிப்படையிலும், அங்கிருந்து தலைமைக் காரியாலயத்திலுள்ள தொல்லியல் திணைக்கள அதிகாரி ஒருவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தொலைபேசியில் உரையாடி இவ்விடையத்தை தெரியப்படுத்தியதற்கு இணங்கவும், அவர்களது இன்றய நடவடிக்கை கைவிடப்பட்டது.
தமிழர்களின் பூர்வீக இடங்களாகவுள்ள தொல்லியல் பகுதி என அடையாளப்படுத்தப்பட்ட வேத்துச்சேனை, வெல்லாவெளி கல்லடிப்பிள்iயார் ஆலயம் ஆகியவற்றிற்கு இதன்போது கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகள் நேரில் சென்று நிலமையை அங்கு கூடிநின்ற மக்களுக்கு எடுத்துரைத்தனர். இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசி அமைப்பாளர் த.சுரோஸ் அவர்களும், அப்பகுதிக்குச் சென்று இந்நிலமை தொடர்பில் அங்கிருந்த மக்களுடன் கலந்துரையாடினார்.
0 Comments:
Post a Comment