1 Sept 2022

கற்பித்தல் விஞ்ஞானம் போன்ற கலையாகும் - உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்.

SHARE

 (நூருள் ஹுதா உமர்)

கற்பித்தல் விஞ்ஞானம் போன்ற கலையாகும் - உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர். 

ஆசிரியர்கள் படைப்பாற்றலுள்ளவராகக் கருதப்படுகிறார்கள். கற்பித்தல் ஒரு விஞ்ஞானம் போன்ற கலையாகுமென தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

சம்மாந்துறை வலயக் கல்விப்பணிமனை, சம்மாந்துறை நலன்புரி, அபிவிருத்திக்குமான பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில் "இஸ்லாமிய பார்வையில் புனித ஆசிரியர் சேவையும் இடர்கால கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளும்" ஆலோசனைக்கருத்தரங்கு சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
.
சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.அமீர்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இக்கருத்தரங்கிற்கு 180க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் உபவேந்தர் உரையாற்றுகையில்,

வகுப்பறைக் கற்பித்தல் முறைகளும், அதன் நுட்பங்களும் சாதாரணமாக வகுப்பறைக் கற்பித்தலில் ஈடுபடும் போது ஒரு பாட அலகைக் கற்பிப்பதற்கு மிகச்சிறந்த கற்பித்தல் முறை எதுவென யாரும் சிபாரிசு செய்ய முடியாது.

பாடத்தைக் கற்பித்தலின் நோக்கம், மாணவரின்  இயல்பு, பாட அலகின் தன்மை, பௌதீகச் சூழலின் தன்மை, பெற்றுக்கொள்ளக்கூடிய கட்புல, செவிப்புல சாதனங்கள், ஆசிரியரின் சுபாவம் ஆகிய அனைத்து சாதனங்களும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

ஆசிரியர்கள் படைப்பாற்றலுள்ளவராகக் கருதப்படுகிறார்கள், கற்பித்தல் ஒரு விஞ்ஞானம் போன்ற ஒரு கலையாகும். மிகச்சிறந்த கற்பித்தல் முறையை தேர்ந்தெடுத்துக் கொள்வது ஆசிரியரின் கடமையாகும்.

எனவே, பொருத்தமான சூழலில் பொருத்தமான பாட அலகுக்கேற்ப பொருத்தமான கற்பித்தலை மேற்கொண்டால் வகுப்பறைக் கற்பித்தல் சிறந்து விளங்கும்.

விரிவுரை முறை கற்பித்தல், குழுமுறைக் கற்பித்தல்,  வினா-விடை கற்பித்தல், கூட்டு முறைக்கற்பித்தல்,  ஒப்படை முறைக் கற்பித்தல், கண்டறிமுறைக் கற்பித்தல், படிமுறைக் கற்பித்தல், சிந்தனை சிலரால் கற்பித்தல் முறை, விளையாட்டு முறைக் கற்பித்தல்,  பாத்திரமேற்று நடித்த, நுன்முறைக் கற்பித்தல்,  போலச்செய்தல் கற்பித்தல் முறை,  வெளிக்களச் செயற்பாட்டு கற்பித்தல் முறை, முன் வைத்தல் முறை, வணிக முறைக்கற்பித்தல், பிரச்சினையைத் தீர்த்தல் முறை, செயற்றிட்ட கற்பித்தல் முறை எனப்பல்வேறு தலைப்புகளில் துறைசார்ந்த வளவாளராக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் விரிவுரையின் போது இவ்விடயங்கள் குறித்து விளக்கமளித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: