10 Sept 2022

காட்டு யானைகளின் ஊடுருவலையும் மண்ணரிப்பையும் தடுக்க ஒரு இலட்சம் பனை மரங்களை வளர்க்கும் செயல் திட்டம் வாகரையில் ஆரம்பித்து வைப்பு.

SHARE

(.எச்.ஹுஸைன் ) 

காட்டு யானைகளின் ஊடுருவலையும் மண்ணரிப்பையும் தடுக்க  ஒரு இலட்சம் பனை மரங்களை வளர்க்கும் செயல் திட்டம் வாகரையில் ஆரம்பித்து வைப்பு.

சமூக மட்ட பிரதேச மக்களின் முழுமையான  பங்கேற்புடன் காட்டு யானைகளின் ஊடுருவலையும் மண்ணரிப்பையும் தடுக்க  ஒரு இலட்சம் பனை மரங்களை வளர்க்கும் செயல் திட்டம் வாகரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் தங்கராஜா திலீப்குமார் தெரிவித்தார்.

நிலைபேறான சமூக அபிவிருத்திக்கு சூழலைப் பொருளாதார மூலதனமாக்குவோம் அதற்காக பாடுபடுவோம்எனும் தொனிப் பொருளின் கீழ் பனை விதை நடுகை விசேட செயற்திட்ட வாரம் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பால்சேனை அம்மன் குளத்தை அண்டிய நிலப்பரப்பில் வெள்ளிக்கிழமை 09.09.2022 ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திலீப்குமார் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் தேவசிங்கம் மயூரன் மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் ஜி. அருணன், திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் . சுதாகரன் உள்ளிட்ட அதிகாரிகளும்  இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவன அலுவலர்களும் பிரதேச பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ஒரு இலட்சம் பனம் விதைகளை நடும் இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொருளாதார வளர்ச்சி வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு ரூபாய்க்கு ஒரு பனம் விதை என்ற அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டு நாட்டப்படுவதாக நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்), கொகாகோலா பவுண்டேஷன், இளைஞர் அபிவிருத்தி அகம் ஆகியவை கூட்டிணைந்து முன்னெடுத்துள்ள இந்தத் திட்டத்தில் காட்டு யானைகளையும் மண்ணரிப்பையும் தடுக்கும் அரணாக ஒரு வார காலத்திற்குள் ஒரு இலட்சம் பனை விதைகள்  நாட்டப்படவுள்ளன.

அத்துடன் பனை வளத்திலிருந்து அதி உச்ச பொருளாதார வருமானத்தை ஈட்டிக் கொள்ளும் வகையிலும் திட்டங்கள் அமுலாக்கப்படவுள்ளதாக சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கானஒத்துழைப்பு நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் மயூரன் தெரிவித்தார்.

எங்களது செயற்பாடு எங்களது எதிர்காலம் - பெண்களையும் விவசாயிகளையும் வலுப்படுத்துவோம்.” எனும் சமாந்தர செயல் திட்டத்தில் கிராமப்புற பெண்களின் சமூக மற்றும் பொருளாதார சக்தியை வலுப்படுத்துவதும்நோக்கமாக உள்ளது என்றும் மயூரன் மேலும் தெரிவித்தார்.















SHARE

Author: verified_user

0 Comments: