1 Jan 2020

கட்சி ஒழுக்க விதிகளை மீறியதால் பறிபோனது பிரதேச சபை உறுப்பினர் பதவி

SHARE
கட்சி ஒழுக்க விதிகளை மீறியதால் பறிபோனது பிரதேச சபை உறுப்பினர் பதவி
மட்டக்களப்பு வாகரைப் பிரதேச சபை (கோறளைப்பற்று வடக்கு) உறுப்பினரான பாலசிங்கம் முரளீதரன் என்பவர் பதவி நீக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

முன்னதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு கோறளைப் பற்று வடக்கு பிரதேச சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த  பாலசிங்கம் முரளீதரனின் கட்சி உறுப்ரிமை நீக்கியுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து 2019ஆம்ஆண்டு டிசெம்பெர் மாதம் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட 2155ஃ9ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானப் பத்திரிகை முரளீதரனின் பதவி வறிதாக்கப்பட்ட அறிவித்தல் வெளியாகியுள்ளது.
அதனையடுத்து முரளீதரன் தனது பிரதேச சபை உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.

கட்சி ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே. துரைராஜசிங்கம் கடந்த டிசெம்பெர் முதல் வாரத்தில் அறிவித்திருந்தார்.

கடந்த காலங்களில் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறி நடந்தமை, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டே பொதுவெளிகளில் கட்சியைப் பிழையாக விமர்சனம் செய்தமை, நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் தீர்மானத்தை மீறிச் செயற்பட்டமை தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டே கட்சிக்கு எதிராகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் ஏழுபேருக்கும், இலங்கை தமிழரசுக் கட்சியின் அங்கத்தவர் ஒருவருக்கும் எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பான கடிதங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கும் உரிய தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் திணைக்களத்தின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து பதவி இழக்கும் உறுப்பினர்களின் வெற்றிடத்தை நிரப்பும் முகமாக புதிய உறுப்பினர் நியமிக்கப்படுவார் என்றும் அவர் கூறியிருந்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: