21 Jan 2019

தமிழர்களின் அடையாளம் இருக்கும் வரையில் தான் தைப்பொங்கல் இருக்கும் அதனை நாம் பாதுகாக்க வேண்டும். கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கே. துரைராசசிங்கம்

SHARE
தமிழர்களின் அடையாளம் இருக்கும் வரையில் தான் தைப்பொங்கல்  இருக்கும் அதனை நாம் பாதுகாக்க வேண்டும். கிழக்கு மாகாண முன்னாள்  விவசாய அமைச்சர் கே. துரைராசசிங்கம்
சுதந்திரம் அடைந்த இந்த நாட்டிலே மொழிக்காகப் போராடியவர்கள் நாங்கள். எமது மொழி எனும் அடையாளம் இல்லையென்றால் நாங்கள் தமிழராக இருந்து பயனில்லை, அடையாளமான எமது மொழியை நாங்கள் பாதுகாக்க வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (20.01.2019) இடம்பெற்ற தைப்பொங்கல் விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகத்திலே தன்னுடைய பிறப்புக்குக் காரணமாக இருந்த சூரியனை வழிபடுகின்ற ஒரு இனமாக தமிழினம் இருக்கின்றது. இந்த அண்டத்தின் தோற்றத்திற்கு முதற் காரணமாக இருக்கும் சூரியனை வழிபடுகின்ற இனத்திற்கு சொந்தக் காரர்களாக நாம் இருக்கின்றோம்.

திருவள்ளுவரின் பிறப்பில் இருந்துதான் எமது காலம் கணிக்கப்படுகின்றது. திருவள்ளுவரின் பிறப்பில் இருந்து 2050 ஆம் ஆண்டில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எமது பல இலக்கியங்கள் பொங்கலைப் பற்றிச் சொல்லியிருக்கின்றன. இன்று இந்தப் பொங்கல் தினத்தைப் பல்வேறு நாடுகளும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.

தமிழர்களின் திருநாள் என்று சொல்லப்படுகின்ற இந்தப் தைப்பொங்கல் தமிழர்களின் அடையாளம் இருக்கும் வரையில் தான் இருக்கும்.

பொங்கலை யாரும் பொங்க முடியும் ஆனால் இதனைத் தமிழன் பொங்க வேண்டும் என்றால் தமிழன் தமிழ் உணர்வை தன்னுள் தக்க வைத்திருக்க வேண்டும். தமிழன் தமிழனாக வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். தமிழனுக்கு அடையாளம் தமிழ் மொழிதான் அதனை நாங்கள் பாதுகாக்க வேண்டும்.

சுதந்திரம் அடைந்த இந்த நாட்டிலே மொழிக்காகப் போராடியவர்கள் நாங்கள். எமது மொழி எனும் அடையாளம் இல்லையென்றால் நாங்கள் தமிழராக இருக்க முடியாது, தமிழராக இருந்தும் பயனில்லை வெறுமனே கலாசாரமாக தைப்பொங்கலைப் பின்பற்ற முடியாது. சிலாபம், முன்னேச்சரம், தொண்டீஸ்வரம், கதிர்காமம் போன்ற பகுதிகளில் இருந்த தமிழர்கள் தற்போது எங்கே? தன்னை மறந்து, தன் நாமம், மொழி, இனம் மறந்து மாறிப் போய் விட்டனர்.

மொழியை நாங்கள் இழந்தோமானால் எமது வாழ்வையே நாம் இழந்து விடுவோம்” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: