29 Oct 2018

மண் அகழ்வால் மகாவலி பொங்கு முகம் அழிவடையும் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும் இந்த அழிவைத் தடுத்து நிறுத்தி அதனைப் பாதுகாக்க சூழலியலாளர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

SHARE

மண் அகழ்வால் மகாவலி பொங்கு முகம் அழிவடையும் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும்  இந்த அழிவைத் தடுத்து நிறுத்தி அதனைப் பாதுகாக்க சூழலியலாளர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் செயற்பாட்டாளரும் திருகோணமலை முன்னாள் நகராட்சி மன்ற உறுப்பினருமான எஸ். நந்தன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக திங்கட்கிழமை 29.10.2018 அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.


ஆறுகள் கடலுடன் கலக்கும் இடம் பொங்குமுகம் எனப்படுகிறது.

இத்தகைய பொங்கு முகங்களில் உயிர் பல்வகைமை பேணப்படுகின்றது.

ஆறுகள் அள்ளிவரும் வண்டல் மண் படிவுகளால் ஆற்றுக் கரையோரங்கள் பயிர்ச்; செய்கைக்கு உகந்த பிரதேசமாக தொன்று தொட்டு இருந்து வந்துள்ளன.

ஆனால், இந்த பல்வகை உயிரியல் மற்றும் இயற்கை விவசாயத்துக்குத் தோதான  நிலைமை தற்போது இடம்பெற்று வரும் இயற்கைச் சூழல் சமநிலையைக் குழப்பும் கேடான நிலைமையினால் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.
இலங்கையின் மிக நீளமான மஹாவலி கங்கை இறுதியாக கடலோடு கலக்கும் இடம் திருக்கோணமலை மாவட்டமாகும்.

எனினும் பணம் படைத்த தனிநபர்களும் அரசியல் பலம் படைத்த வெளி மாவட்டத்தவர்களும் கனரக வாகனங்களின் உதவியுடன் மகாவலி பொங்கு முகத்தை சூழ்ந்த பிரதேசங்களில் மணல் அகழ்வில் ஈடுபட்டு இயற்கைக்கு நாசம் விளைவிக்கின்றனர்.

கிண்ணியா, மூதூர், சேருவில, தெஹிவத்தை, நிலாப்பளை போன்ற இடங்களில் வியாபார நோக்கமாக மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் திருகோணமலை மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கரிற்கு மேற்பட்ட வயல் பிரதேசம் தரிசு நிலமாக மாறும் ஆபத்தை எதிர் கொள்வதோடு கடல்நீர் வயல் நிலங்களுக்குள் உட்புகும் ஆபத்தும் எதிர்நோக்கப்படுகின்றது.

மஹாவலி பொங்குமுகம் அழிவடையும் போது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மீனினங்கள் அழிவடையும்.

அதனால், மீன்பிடித் தொழிலை நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களும் தமது வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்படுவார்கள்.
எனவே முறையற்ற இம் மணல் அகழ்வை தடைசெய்து இயற்கைச்  சூழலை பாதுக்காக்க சூழலியலாளர்கள் உடன் களத்தில் இறங்குவதோடு முடியுமானவரை சுற்றாடல் சூழல் சட்டத்தின் கீழ் இத்தகைய பணப்புரள்வு வழியைத் தடை செய்யவும் வேண்டும்.
 

SHARE

Author: verified_user

0 Comments: