18 Oct 2018

கிழக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவு! பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம்

SHARE
கிழக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ள நிலைமைக்கான முழுப் பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுவிடயமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் புதன்கிழமை 17.10.2018 வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சமீபத்தில் நடந்து முடிந்த தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி கிழக்கு மாகாணம் மிக மோசமான கல்விப் பின்னடைவைக் கண்டிருக்கிறது.

இந்தப் பின்னடைவுக்கான   பொறுப்புக்கூறலை கிழக்கு மாகாண கல்வி அமைச்சு, அதன் செயலாளர், மாகாணப் பணிப்பாளர் மற்றுமுள்ள அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும்.

பரீட்சை அடைவு மட்டத்தை ஒப்பிடுகையில் மாகாண மட்டத்தில் கிழக்கு மாகாணம்; 8ம் நிலைக்கு பின்நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறது.

மேலும், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள் மிகவும் கவலைக்குரிய மோசமான பெறுபேறுகளால் கல்வி நிலைமையில் வீழ்ச்சியடைந்துள்ளன.

நாட்டின் 25 மாவட்டங்களில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றதில் மட்டக்களப்பு மாவட்டம் 23வது நிலையையும் திருகோணமலை மாவட்டம் 25வது நிலையையும் அடைந்திருப்பது கவலையளிக்கிறது.

வலய மட்டத்தில் நோக்குகையில் குறிக்கப்பட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றதில் மூதூர், கல்குடா மேற்கு, கிண்ணியா ஆகிய வலயங்கள் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தேசிய ரீதியில் கல்வியில் முன்னிலை வகித்த மட்;டக்களப்பு மத்திய கல்வி வலயம் 67வது நிலைக்குத் தள்ளப்படிருப்பது கிழக்கு மாகாணத்தின் மோசமான கல்வி வீழ்ச்யையும், வினைத்திறனற்ற நிருவாக செயற்பாடுகளையும் சுட்டிக்காட்டிருக்கிறது.

அத்துடன் மட்டக்களப்பு கல்வி வலயம் கடந்த ஆண்டை விட இவ்வாண்டு வெளியான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றில் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மேலதிகமான ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் காணப்படுகின்ற அதேவேளை அந்த வலயத்தில் ஆரம்பக் கல்வி, கல்வி அபிவிருத்திக்கென கல்வி நிருவாகச் சேவை உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் நியமிக்கப்படிருந்தும் பெறுபேற்றில் அந்த வலயம் வீழ்ச்சியடைந்துள்ளமை கண்டிக்கத்தக்கது.

கல்வி அமைச்சு ஆரம்பக்கல்வி மற்றும் இரண்டாம் நிலைக் கல்விக்கு தேசிய கல்விக் கொள்கைக்கு அமைவாக முக்கியத்துவம் கொடுத்து பல்வேறான ஆய்வறிக்ககைகளும், தேசிய திட்டங்களும் வகுக்கப்பட்டிருந்தும் கல்வி அதிகாரிகளால் சேவைப் பிரமாண குறிப்புகளுக்கு அமைவான சேவைப் பணிகள் கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தபடவில்லை.

வட கிழக்கு கல்வி அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதியின் செயலணிக் குழுவிற்கு கிழக்கு மாகாண ஆளுநர், கல்வியமைச்சின் செயலாளர் இனைக்கப்பட்டுள்ள நிலையில் மாகாணத்தின் கல்விப் பின்னடைவு தொடர்பாக ஆராயப்பட வேண்டும்.
யுத்ததில் மிகவும் பாதிப்படைந்த மாவட்டங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்கள் திருகோணமலை, மட்டக்ளப்பு மாவட்டங்களை விட முன்னிலை வகிக்கி;றன.


SHARE

Author: verified_user

0 Comments: