6 May 2018

கிழக்கின் வளமும் அபிவிருத்தியும் ஏன் அரசின் கரிசனைக்கு வரவில்லை? கேள்வி எழுப்புகிறார் முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமத்

SHARE
யுத்தத்தினாலும் இன்னபிற இயற்கை அழிவுகளினாலும் சிதைக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அங்குள்ள வளங்களைக் கொண்டே அபிவிருத்தி செய்ய முடியுமாக இருந்தும் ஏன் அது அரசின் கரிசனைக்கு எடுபடவில்லை என்பது புரியாத புதிராக இருப்பதாக கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத் கேள்ளி எழுப்பியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை 06.05.2018 அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கிழக்கில் எனது தலைமையிலான இரண்டரை வருட மாகாண ஆட்சி நிலவியபோது முதலில் கிழக்கிலுள்ள உள்ளுர் வளங்களைப் பயன்படுத்தி முழுக்கிழக்கு மாகாணத்தையும் மத்திய அரசுக்குப் பாரமில்லாமல் எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் என்பது பற்றிய சாத்திய வள ஆய்வுகளைச் செய்து அறிக்கைகளைப் பெற்று அதனை அரசுக்குச் சமர்ப்பித்தோம்.

பல முன்மொழிவுகளைச் செய்தோம். ஆனால், அவை எதுவும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது.
நான் மேற்கொண்ட செயற்திறன் மிக்க திட்ட முன்மொழிவுகளும், அபிவிருத்திகளும்,  இனம், மதம், மொழி,  சார்ந்து ஒருபோதும் இருந்ததில்லை.
குறிப்பாக மூவினத்தவர்களுக்கும் பயன்தரத்தக்கதாக கிழக்கு மாகாணத்தில் 3 தொழிற்பேட்டைகள், இதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு,

மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரைக்கும் புகையிரதப் பாதையை விஸ்தரித்தல், பொத்துவில் தொடக்கம் மட்டக்களப்பு ஊடான கொழும்பு யாழ்ப்பாணம் திருகோணமலை அதிவேக நெடுஞ்சாலை, உல்லாசத்திற்காக கிழக்குக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கும், உள்ளுர் பயணிகளுக்கும்,  வசதியளிக்கும் வகையில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை, பொத்துவில் ஆகிய இடங்களில் விமான நிலைய  அபிவிருத்தித் திட்டங்கள் என்பன என்னால் முன்டிமொழியப்பட்டவற்றில் சிலவாகும்.

அத்துடன் உள்ளுர் இயற்கை வளங்கள் மற்றும் மனித வளங்களைப் பயன்படுத்தி உச்சப் பயனைப் பெறும் வகையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டம் சார்ந்த முன்மொழிவுகள் அரசாங்கத்திடம் முன் வைக்கப்பட்டன.

அவற்றில் ஆயர்வேத மூலிகை உற்பத்தி, இயற்கைப் பசளை உற்பத்தி, நஞ்சு கலக்காத இரசாயனப் பாவனையற்ற உற்பத்தி, தூய பசும்பால், விவசாய உப உணவுப் பயிர்களின் உற்பத்தி, கடலுணவுகளும் மீன்வளமும் உள்ளிட்ட இன்னும் பல அபிவிருத்தித் திட்டங்களும் உள்ளடங்கும்.

மனித வளங்களையும், புத்திஜீவிகளின் வெளியேற்றத்தையும் தடுக்கும் பல்வேறு தொழில் முனைப்பு ஆலோசனைகளும் முன் வைக்கப்பட்டன.

இவற்றில் எவற்றையும் அரசு கண்டு கொள்ளாத நிலைப்பாடு தொடர்ந்து அவதானிக்கப்பட்டு வருகிறது.

இந்த விடயங்கள் கரிசனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமாக இருந்தால் கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகளின் வேலையில்லாத் திண்டாட்டம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. அத்துடன் வளப்பங்கீடு இடம்பெறுவதோடு தேசிய உற்பத்தியிலும் கிழக்கு மாகாணம் கணிசமான பங்களிப்பைச் செலுத்த முடியும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: