2 Dec 2016

மருதமுனையில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா - ஒரு பதிவும் பார்வையும் சிறப்புக் கட்டுரை.

SHARE
(ஏ.எல்.எம்.ஷினாஸ், BA (Hons)

1966ம் ஆண்டு ஜூலை மாதம் 2ம் திகதி மருதமுனையில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாடு நடைபெற்று 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா கடந்த 26, 27ம் திகதிகளில் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
இன்று உலகமெல்லாம் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் பேசப்படுவதற்டு கால் கோலாக இருந்த  மருதமுனையில் 1966 ம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டை நினைத்துப் பார்பதற்கும், அதற்கு உயிர்நாடியாக இருந்த தாஜுல்  அதிப் எஸ்.ஏ.ஆர்.எம்.செய்யித் ஹசன் மெளலானா முன்நிலையில் அதன் 50வது ஆண்டு நிகழ்வு மருதமுைனையில் நடைபெற்றது வரவேற்கத்தக்கதாகும்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்  அனுசரணையில் மருதமுனை கலை இலக்கிய மன்றங்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்த இந்தப் பொன்விழாவின் முதல் நாள் (26) காலை ஆய்வரங்கு நிகழ்வுகள் கல்முனை SLR விடுதி மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த தினத்தில் அல்மனார் மத்திய கல்லூரி  மூன்றாம் தவணைப் பரீட்சை நடைபெற்றது. ஆய்வரங்கு இடமாற்றப்பட்டிருந்தது பற்றிய தகவல் ஊடகவியலாளர்கள், கலந்து கொள்ளவிருந்த பேராளர்களுக்கு அறிவிக்கப்படாதது ஏற்பாட்டாளர்களின் தவறாகும்.

பேராசிரியர் ம.மு. உவைஸ் அரங்கில் செய்யித் ஹஸன் மெளலானா முன்னிலையில் "இஸ்லாமிய தமிழ் இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் " எனும் தலைப்பில் இந்த ஆய்வரங்கு நடைபெற்றது. மணிப் புலவர் மருதூர் ஏ.மஜீத், ஆசிரியர் அப்துல் ரசாக், ஆசிரியர் ஜெஸ்மி எம்.மூஸா, ஆகியோர் கட்டுரைகளை சமர்ப்பித்து பேசினார்கள். 

தொடர்ந்து நடைபெற்ற கவிக்குயில் மீரா உம்மா அரங்கு முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஹாஜியானி மைமூனா அஹமட் முன்னிலையில்  "இஸ்லாமிய இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள் " என்ற தலைப்பில் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவி றூபி வலன்ரினா பிரான்ஸிஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் விரிவுரையாளர் எம்.வை. மின்னத்துல் சுஹிறா,அனார் ,ஆசிரியர் உருத்ரா ஆகியோர் கட்டுரைகளை சமர்ப்பித்து பேசினார்கள். இறுதியில் கலந்து கொண்டோரின் கருத்துக்கள் பரிமாறப்பட்ட போது பல வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் ஆய்வரங்கு பி.ப 2.30 மணிக்கு நிறைவு பெற்றது.

நிகழ்வில் அமைச்சர் றவுப் ஹக்கீம், முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், மாகாண அமைச்சர் ஏ.எல்.எம்..நஸீர் உட்பட மாகாண சபை உறுப்பாளர்கள், கட்சித் தொண்டர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கல்விமான்கள் புத்திஜீவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மாலை நேர நிகழ்வாக மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் கட்டப்பட்ட பொன் விழா நினைவுத் தூபி செய்யித் ஹசன் மெளலானா, அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் நிகழ்த்திய பிரகடன உரையில் 1966ல் மருதமுனையில் நடைபெற்ற இஸ்லாமிய இலக்கிய மாநாடு இருட்டடிப்பு செய்வதை தவிர்க்கும் நோக்கில் இந்த நிகழ்வுகள் நடைபெறுவதாகக் கூறி பிரகடனத்தை வாசித்தார்.
01.இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இனிவரும் காலத்தில் முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தினால் வருடம் தோறும் நடாத்தப்பட வேண்டும் 
02. இஸ்லாமிய தமிழ் இலக்கிய பீடம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருப்பது போல தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இப்பீடம் நிறுவப்பட வேண்டும்.

03. தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்துக்கான பாடசாலைத் திட்டங்களில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய படைப்புக்களை உள்ளடக்க ஆவன செய்ய வேண்டும் என்றும் பிரகடனம் செய்யப்பட்டது.

இது வெறும் பிரகடனமாக இல்லாமல் செயல் வடிவில் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் இந்த பொன் விழா வரலாற்றில் பேசப்படும் நிகழ்வாக அமையும் .
சுமார் 50 ஆண்டுகள் தாண்டி  இவ்வாறான மிக முக்கியமான சிந்தனைகள் பிரகடனமாக வெளியிடப்பட்டமையை பாராட்டாமல் இருக்க முடியாது. 
பின்னர் கவிஞர் திலகம் எம்.எச்.எம் அஸ்ரப் அரங்கில் "மூத்த கவிஞர்களின் முத்தெடுத்து" எனும் தலைப்பில் கவிஞர் றவூப் ஹக்கீம் தலைமையில் கவியரங்கு இடம்பெற்றது.

மருதமுனை மண்ணிலே சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் இந்த விழாவில் ஏற்பாட்டாளர்கள் மருத னையின் வளத்தை எவ்வாறு பயன்படுத்தி இருக்கிறார்கள்? என்ற மிகப் பெரும் கேள்வி பலராலும் எழுப்பப்பட்டதை அறிய முடிந்தது. பள்ளிவாசல்கள், சமூக அமைப்புகள், பாடசாலைகள், அரபு கலாபீடங்கள், கல்விமான்கள் , எழுத்தாளர்கள், விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள்  என்று ஒரு பெரும் பட்டாளம் இருந்த போதிலும் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம் தூரத்தில் இருந்து வந்த சில கலைஞசர்கள்,எழுத்தாளர்களை மாத்திரம்தான் காண முடிந்தது என்ற உண்மையை மறைக்க முடியாது.

மறுநாள் (27) எஸ்.எச்.எம்.ஜெமீல் அரங்கில், "பாடத்திட்டத்தில் தமிழ் இலக்கியம் " எனும் தலைப்பிலும், செனட்டர் மசூர் மெளலானா அரங்கில் "முஸ்லிம் இலக்கிய மரபும் நவீனமும் " எனும் தலைப்பிலும் ஆய்வரங்கு நடைபெற்றது. கட்டுரையின் கனதியை கருத்திற் கொண்டு ஆய்வரங்கு குறித்த கருத்தாடலுக்குள் நுளையவில்லை. அது தனித்தனியாக எழுதப்பட வேண்டியவை. 
மாலைவேளை நிகழ்வாக அகில இலங்கை ரீதியில் கடந்த செப்டம்பர் மாதம் எஸ்.எல்.எம்.சி தலைமையகம் தாறுஸ்ஸலாத்தில் நடாத்தப்பட்ட அல்-குர்ஆன் கிராஅத் போட்டிகளில் பரிசு பெற்றவர்களின் மீள் அரங்கேற்றம் மனதுக்கு இனிமை சேர்த்தது மட்டுமல்லாது அமைதியையும் ஏற்படுத்தியது.

மாலை6.30 மணிக்கு கம்பவாரதி இ.ஜெயராஜ் தலைமையில் நடைபெறவிருந்த கவிஞர் திலகம் அஷ்ரப்பின் "நான் எனும் நீ" கவிதை நூலின் மீள் வெளியீட்டு நிகழ்வு இரவு 8.00 மணிக்கு முஸ்லிம் காங்கிறஸ் கட்சியின் மூத்த போராளி முழக்கம் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்றது.

அஷ்ரப் சில நினைவுகள் எனும் தலைப்பில் எழுத்தாளர் உமா வரதராஜன் உரையாற்றினார் அஷ்ரப் எனும் ஆளுமை கல்முனை முருகன் கோவில் வீதியில் அவரது  "ஹிறா" இல்லத்தில் வாழ்ந்த காலத்தில் அவருடன் பழகிய அனுபவங்களை பொற்காலப் பதிவுகளாக  பகிர்ந்து கொண்டார்.

மர்ஹூம் அஷ்ரப்பின் இரங்கல் நீகழ்வில் என்னை முஸ்லிம் நண்பர்கள் உரை நிகழ்த்த அழைத்தும் கலந்து கொள்ள முடியாமல் போன குற்ற உணர்வை சுமார் 16 வருடங்களுக்கு பின்னர் இங்கு வெளிப்படுத்துகிறேன் என உமா வரதராஜன் சபையில் தெரிவித்தார்.

பேராசிரியர் றமீஸ் அப்துல்லா அஷ்ரப்பின் கவிதைகள் பற்றிய நூலாய்வுரையை மிக அற்புதமாக நிகழ்த்தினார்.

எனக்கு ஆய்வுரீதியாக ஒரு பிரதியை எழுத கற்றுத்தந்தவர் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் ஆனால் ஒரு பிரதியின் தர்க்க ரீதியான ஒழுங்கு முறை பற்றி கற்றுத்தந்தவர் ஆசிரியர் அஷ்ரப் -என்று ஆரம்பித்த பேராசிரியர், "நான் எனும் நீ " கவிதை நூலை ஒட்டுமொத்தமாக பார்க்கின்ற போது அஷ்ரபை சர்சைக்குரியவராக பார்க்கத் தோன்றும், தான் சார்ந்திருக்கின்ற சமூகத்துக்குள்ளே தனது சிந்தனைகளை கொண்டுசெல்ல அஷ்ரப் முற்பட்டார். சமூகம் அதன் உண்மைத்தன்மைகளை விளங்கிக் கொள்ளவில்லை. உண்மைகளை விளங்கிக் கொள்ள நேரமெடுக்கும். அஷ்ரப் தனது சிந்தனைகளை கவிதைகள் ஊடாக வெளிப்படுத்தினார். அரசியல், சமூகம், தேசம்,காதல், அன்பு என்று சிறுவர் பாடல்கள், இரங்கல் கவிதைகள், இசைப் பாடல்கள் ஏன் பெண்களைப் பற்றியும் உணர்வுரீதியாக அஷ்ரப் பேசியிருக்கிறார். உயிரோடு வாழும் போதே மரணத்தை முன்னறிவிப்பாக பேசியிருக்கிறார். மொத்தத்தில் அஷ்ரப் என்ற மாமனிதர் ஒரு இலக்கியம் என்றார்.

இந்த நிகழ்வில் 66 ஆம் ஆண்டு மருதமுனையில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டுக்கு முன்னோடியாக செயற்பட்ட மருதமுனையை சேர்ந்த அஸ் செய்யித் ஹஸன் மெளலான மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.சலீம் ஆகியோரை அமைச்சர் றவூப் ஹக்கீம் பொன்னாடை போர்த்தி கெளரவித்தமை பலராலும் பாராட்டிப் பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து "நான் எனும் நீ" கவிதை நூலின் மீள் பதிப்பு வெளியீட்டு வைக்கப்பட்டது. மேடையில் பிரதிகள் வழங்கி வைக்கும் போது சபையில் ஏற்பட்ட சலசலப்புக்கு அமைச்சர் ஏற்பாட்டாளர்களை சாடி சபையை அமைதிப்படுத்தினார்.

பின்னரான அமைச்சரின் பிரதான உரையில்;
பெருந்தலைவர் அஷ்ரபின் கல்முனை முருகன் கோவில் வீதியிலிருந்த வீடு 85 ஆம் ஆண்டு ஏரிக்கப்பட்ட போது நான் சிரேஷ்ட சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவிற்கு சட்ட உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்த காலம் கொழும்பில் சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் வீட்டில் அஷ்ரப் தன்ஞம் புகுந்தார். அங்கு தான் அஷ்ரப் உடனான நெருக்கம் எனக்கு ஏற்பட்டது. அஷ்ரப் அகதி வாழ்கைதான் வாழ்ந்தார் எனும் அளவிற்கு காலம் காலமாக இடம்பெயர்ந்து தான் வாழ்ந்திருக்கின்றோம். இந்த அனுபவங்களோடுதான் தற்போது தானுஸ்ஸலாமை அடைந்திருக்கிறோம்.

கவிதை எழுதப்போய் கஸ்டத்தில் மாட்டிக் கொண்ட சிலரும் இருக்கின்றார்கள்.

சோமத் தேரரோடு அஷ்ரப் நடாத்திய விவாதத்தை ராவய, உக்திய பத்திரிகைகள் அவரது துணிச்சலை பாராட்டி எழுதியிருந்தன. இன்று நடக்கிற விசயங்களை பார்கிறபோது திரும்பவும் அதே பூதம் கிளம்பியது மாதிரியான ஒரு சூழல் உருவாகியிருப்பதை உணருகிறோம். இது சம்பந்தமான நடவடிக்கைகளை பக்குவமாக எங்கெங்கல்லாம் அந்த விடயங்களை பேச வேண்டுமோ அங்கெல்லாம் இறுக்கமாக நாங்கள் பேசி வருகிறோம்.

ஓர் இரு நாட்களுக்கு முன்னர் Daily Mirror பத்திரிகையில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயூப் ஸ்ரீலங்கா.மு.கா கட்சியினுடைய மதத் தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் குறித்த கட்டுரை வெளிவந்திருந்தது, அதே பத்திரிகையில்  முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்ற பாங்கில் அதை நியாயப்படுத்தும் வகையில் சேனாலி படுக்கே என்கின்ற ஊடகவியலாளர் ஒரு கட்டுரையை எழுதி இருக்கின்றார். இதற்கு ஒரு மறுப்புக் கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கின்றேன். ஏன் என்றால் இதற்கான பதிலை  உடனடியாக சொல்ல வேண்டும் முஸ்லிம்களைப் பற்றி இவ்வாறு கேவலமாக எழுதும் எழுத்தாளர்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.

மறைந்த மாமனிதர் அஸ்ரப் நினைவாக அடுத்த வருடம் செப்டம்பர் 16ம் திகதி நாங்கள் சர்வதேச குர்ஆன் ஆராய்ச்சி மாநாடு ஒன்றை கொழும்பில் வெகு விமர்சையாக நடாத்த இருக்கிறோம். இந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழாவிற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறி விடைபெற்றார். விழா இரவு 10.30 மணியளவில் நிறைவு பெற்றது.

மறுபுறம் வருகை தந்த பேராளர்கள் ஆய்வுக் கட்டுரை சமர்பித்தவர்கள், ஊடகவியலாளர்களுக்கு ஒரு பிரதிகூட  வளங்கப்படவில்லை. இரண்டு தினங்களாக நிகழ்வில் கலந்து கொண்ட இவர்கள் சொன்னதெல்லாம் 'பச்சத் தண்ணீரில் பலகாரம் சுட்ட கதை'

சாதாரண விழாக்களில் கூட ஊடகவியலாளர்களுக்கு பிரத்தியேகமாக இடவசதி ஒதுக்கப்படும் நிலையில் இரண்டு தினங்களாக நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்களுக்கென பிரத்தியோக இடவசதி செய்து கொடுக்கப்படாமையானது ஏற்பாட்டாளர்களின் ஒழுங்குபடுத்தலை வெளிச்சம் போட்டுக் காட்டியது. நிகழ்வுகளில் கலந்து கொண்ட பேராளர்கள், ஆய்வுக் கட்டுரை சமர்பித்தவர்களுக்கு  குறைந்த பட்ச பங்குபற்றுதல் அடையாளம் கூட  வழங்கப்படாததை சிலர் மனம் நொந்து பேசினார்கள்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 12,13ம் திகதிகளில் கொழும்பில் நடாத்தவுள்ள இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 2016" ஐ இந்த விழா முந்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக நடாத்தப்பட்டது என்றும் சிலர் பேசியதை ஞாபகப்படுத்துகிறேன்.

யார் என்னதான் பேசினாலும் 66 ம் ஆண்டு மருதமுனையில் நடைபெற்ற தமிழ் இலக்கிய மாநாடு மருதமுனை மண்ணில் நினைக்கப்படாமல்  இதுவரை காலமும்  இருந்த சூழலில் இந்த பொன் விழா நிகழ்வு மருதமுனையின் வரலாற்றில்  பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும் . முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அனுசரணையாளர்கள் என அறிந்திருந்த எமக்கு அதன் ஏற்பாட்டாளர்களும் அவர்கள் தான் என்பது அமைச்சரன் வெறும் 3 நபர்கள்தான் இதன் ஏற்பாட்டாளர்கள் என்று பெயர் கூறி சொன்னதன் மூலம் புலப்பட்டது.
மருதமுனை கலை இலக்கிய மன்றங்களின் ஒன்றியம் என்பது முகவரிக்கு தேடப்பட்ட நாமமோ என்கின்ற சந்தேகத்தையும் இது எழுப்புகிறது.

எது எவ்வாறானாலும் அரசியல் கட்சிகள் ஏற்பாடுகள், ஆதரவுகள் என்பதற்கு அப்பால் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் வாழ வேண்டும் என்பதற்காக எடுக்கப்படுகின்ற முத்தாய்ப்புக்கள், முயற்சிகளை வாழ்த்தாமல் இருக்க முடியாது.

இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களுக்கு உயிரூட்டுகின்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆய்வில் ஈடுபடும் மணவர்கள், பாடசாலைகள், குர்ஆன் மதிர்ஸாக்கள்,எழுத்தாளர்களை அழைப்பதில் ஏற்பாட்டாளர்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட முழுமையான அமைப்பு ரீதியான பரவலாக்கப்பட்ட முறையில் ஏற்பாட்டை செய்யவில்லை.

இனி வரும் காலங்களில் இவைகள் களையப்பட்டு 66 ஆம் ஆண்டு நடைபெற்ற அதே ஜூலை மாதம் 02 ஆம் திகதி வருடந்தோறும் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாடு நடாத்தப்பட வேண்டும் என்பது எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.

ஏ.எல்.எம்.ஷினாஸ், BA (Hons)
( ஊடகவியலாளர்)








SHARE

Author: verified_user

0 Comments: