மட்டக்களப்பு கல்வி வலயத்தினால் மாணவர்களை முன் ஆயத்தம் செய்வதற்கு நடாத்தப்பட்ட ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை கணித வினாத்தாள் முற்றிலும் பண்புசார் தரத்திற்கு முரணாக காணப்பட்டிருந்ததோடு மாணவர்கள்
கடும் மன உளைச்சலுக்கு உட்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுவிடயமாக புதன்கிழமை (ஓகஸ்ட் 10, 2016) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இவ்வாறு நடாத்தப்பட்ட பயிற்சி பரீட்சை வினாத்தாள் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கு ஒப்பானதாக காணப்பட்டிருந்ததோடு குறிக்கப்பட்ட நேரத்தில் மாணவர்களால் இப்பரீட்சையை வெற்றிகரமாக செய்ய முடியாமல் மாணவர்கள் அவஸ்தைக்குள்ளாகியிருந்தார்கள் என்றும் மாணவர்களும் பெற்றோரும் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த விடைத்தாள் பிரசினங்கள் முற்றிலும் பாடத்திட்டத்திற்கு முரணாகவும் காணப்பட்டுள்ளது.
மேலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்வி வலயங்களால் நடாத்தப்படும் பரீட்சை வினாத்தாள்கள் தேசிய மட்ட பரீட்சைகளுக்கு முரணாக காணப்படுவதால் மாகாணத்தின் கல்வித் தரம் பின்நோக்கி தள்ளப்பட்டுவருகின்றது.
சகல மனித வளங்களையும் கொண்டுள்ள மட்டக்களப்பு கல்வி வலயம் கடந்த ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சை மற்றும், புலமைப்பரீட்சை பெறுபேறுகளில் கடும் வீழ்ச்சிக்கு உள்ளானது இங்கு கவனிக்கத்தக்கது.
கடந்த காலங்களில் மாகாண மட்டங்களில் நடைபெறும் பரீட்சை குழறுபடிகளுக்கு விசாரணை நடைபெற்ற அதேவேளை, விசாரணை அதிகாரிகள் அதன் நிமித்தம் தமக்குண்டான செலவுகளை முழுமையாகப் பெற்றுக்கொண்டார்களே தவிர விசாரணைகளின் மூலம் எந்தவித பயனும் முறைப்பாடு செய்யப்பட்டவர்களுக்குக் கிடைக்கவில்லை.
மேலும் நியமிப்பு செய்யப்பட்டுள்ள உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப செயற்படுகின்ற சுயநலமிகளாகவும் காணப்படுவதோடு குறிக்கப்பட்ட பாடங்களில் நிபுணத்துவம் அற்றவர்களாக இருக்கின்றனர்” எனவும் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment